செல்ஃபி பழசு... ‘போத்தி’தான் புதுசு... நோக்கியாவின் அதிரடி அட்டாக்..! #Nokia8

நோக்கியா 8

மொபைல் சந்தையில், விட்ட இடத்தை பிடிப்பதற்காக முழு மூச்சாக களத்தில் இறங்கியிருக்கிறது நோக்கியா. குறைந்த பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் விலைகளில் மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்தி ஆண்ட்ராய்டு சந்தையில் கால்பதித்தது நோக்கியா. அடுத்ததாக, ஃப்ளாக்‌ஷிப் செக்மேன்டில் தனது இருப்பைப் பதிவு செய்ய அறிமுகப்படுத்தியிருக்கும் ஸ்மார்ட்போன் தான் நோக்கியா 8.

நீண்ட நாள்களாகவே நோக்கியாவிலிருந்து உயர்தர ஸ்மார்ட்போனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை ஏமாற்றாமல் பல புதிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது நோக்கியா 8.

நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:

  • 5.3 IPS LCD 1440×2560 குவாட் ஹெச்டி திரை (554 ppi)
  • கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா கோர் பிராஸசர்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி
  • 13+13 மெகாபிக்சல் பின்புற டூயல் கேமரா லேசர் ஃபோக்கஸ் மற்றும் OIS வசதியுடன்
  • 13 மெகா பிக்சல் முன்புற கேமரா
  • ப்ளூடூத் 5.0,முன்புற கைரேகை சென்சார், யூ.எஸ்.பி Type-C வசதி.
  • நோக்கியா OZO ஆடியோ.
  • 3090 mAh பேட்டரி திறன்.
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளம்.

நோக்கியா 8

கடைசியாக நோக்கியா அறிமுகப்படுத்திய மூன்று ஸ்மார்ட்போன்களில் அனைவரும் எதிர்பார்த்த விஷயம் கார்ல் செயிஸ் கேமரா.
இந்தப் பேரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? நோக்கியாவின் ஆரம்பகட்ட N சீரிஸ் மொபைல்கள் முதல் 41மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா பியூர்வியூ 808 மற்றும் நோக்கியா லூமியா 1020 வரை நோக்கியா தனது மொபைல்களில் அதிகம் பயன்படுத்தியது இந்த கார்ல் செயிஸ் நிறுவனத்தின் கேமராவைத்தான்.

ஆனால், நோக்கியா மறுபடியும் மொபைல் சந்தையில் நுழைந்தபோது கார்ல் செயிஸ் கேமராவை பயன்படுத்தவில்லை. நோக்கியாவின் ரசிகர்கள் நிறுவனத்திடம் வேண்டுகோள் வைக்க மீண்டும் கார்ல் செயிஸ் நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறது நோக்கியா. இனிமேல் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்களிலும் கார்ல் செயிஸ் கேமராக்கள் பயன்படுத்தப்படலாம்.

நோக்கியா 8 ல் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் டூயல் கார்ல் செயிஸ் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.13 மெகாபிக்சல் முன்புற கேமராவும் உண்டு.

இந்த ஸ்மார்ட்போன் மூலமாக போத்தி (Bothie) எனப்படும் புதிய விஷயத்தை அறிமுகப்படுத்துகிறது நோக்கியா. சரி அது என்ன போத்தி?
முன்புற கேமரா அல்லது பின்புற கேமரா என ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே பயன்படுத்தி நாம் எடுப்பது செல்ஃபி. அதேபோல, ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களையும் பயன்படுத்தினால் அதற்குப் பெயர் போத்தி. மேலும் பேஸ்புக் லைவ்க்கும் யூடியூப் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் சிங்கிள் டச் வசதியை கொடுத்திருக்கிறது நோக்கியா. போத்தி போட்டோக்களும் வீடியோக்களும் பேஸ்புக் டைம்லைனிலும் யூடியூபிலும் கூடிய சீக்கிரமே நமக்கு காண கிடைக்கும்.

நோக்கியா 8

நோக்கியாவின் OZO ஆடியோ மூலமாக 360° ஆடியோவை பதிவு செய்யவும், கேட்கவும் முடியும். OZO ஆடியோ மூலமாக புதிய அனுபவத்தை பெற முடியும் என்கிறது நோக்கியா. ஸ்மார்ட்போன் செயல்பாட்டில் இருக்கும்போது உருவாகும் வெப்பத்தை குறைப்பதற்காக புதிதாக ‘லிக்விட் கூலிங்’ வசதியை பயன்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பு  வெப்பத்தைக் குறைத்து, மொபைலின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

வசதிகள் மட்டுமின்றி முழுமையான மெட்டல் கட்டமைப்பு என வடிவமைப்பிலும் அசத்துகிறது நோக்கியா8. முழுமையான வாட்டர் ஃப்ரூப் வசதி இல்லாவிட்டாலும் தூசி மற்றும் குறைந்த அளவு நீரால் பாதிக்கப்படாத அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளத்தில் இயங்குகிறது நோக்கியா8. ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துவதால் அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு சந்தையில் இருக்கும் மற்ற ஃப்ளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களோடு போட்டி போடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன்  விலை உறுதியாக தெரியவில்லை.  இந்திய ரூபாய் மதிப்பில் 45000 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கும் என அறிவித்திருக்கிறது நோக்கியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!