6 மாத பில்ட்அப்புக்கு பின் வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ! #AndroidOreo | Android OS 8.0 version Officially named as Android Oreo

வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (22/08/2017)

கடைசி தொடர்பு:13:04 (22/08/2017)

6 மாத பில்ட்அப்புக்கு பின் வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ! #AndroidOreo

முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க நேற்று அமெரிக்காவே பரபரப்பாக இருந்தபோது, டெக் உலகத்தை மற்றொரு நிகழ்வு கிரகணம் போல சூழ்ந்திருந்தது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் எட்டாவது வெர்ஷனுக்கு, பலரும் கணித்ததைப்போல உலகின் முன்னணி குக்கியான 'ஆண்ட்ராய்டு ஓரியோ' (Android Oreo) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூகுள்  I/O டெவலப்பர்கள் மாநாட்டில் 'ஆண்ட்ராய்டு ஓ' என்று மட்டும் இது பெயரிடப்பட்டிருந்தது.

ஆண்ட்ராய்டு ஓரியோ

கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மற்றும் நெக்சஸ் வகை டிவைஸ்களில் ஓரியோ வெர்ஷன் முதலில் அப்டேட் செய்யப்பட உள்ளது. முந்தைய ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷனை விட சில முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஓரியோ குறித்து முன்பே சொன்ன கூகுள் :

கூகுள் நிறுவனத்தின் I/O நிகழ்வில் ஆண்ட்ராய்டு ஓ வெளியிட்டபோது இருந்த லோகோ, சூரிய கிரகணத்தன்று பெயர் சூட்டும் நிகழ்வு, ஓரியோவின் வடிவம் இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தாலே ஓரியோதான் அடுத்த வெர்ஷனின் பெயர் என்ற முடிவுக்கு வரமுடியும். ஆனாலும் சஸ்பென்ஸ் உடையப்போகும் அந்தத் தருணத்துக்காக டெக் உலகம் காத்துக்கொண்டிருந்தது.

ஆண்ட்ராய்டு 'N' (Android Nougat) வரிசையில் அடுத்து 'O' தான் என்பதால், வழக்கம்போல் ஆண்ட்ராய்டு அந்த வெர்ஷனுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறது என டெக் உலகம் ஆவலோடு காத்திருந்தது. பொதுவாக உணவுப்பொருள் பெயரைத்தான் ஆண்ட்ராய்டு தனது ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு வைக்கும் என்பதால், ஓ-வில் தொடங்கும் அத்தனை உணவுப்பொருள்களின் பெயர்களையும் பலரும் பட்டியலிடத் தொடங்கினர். ஆனால், அவற்றில் ஓரியோதான் நெட்டிசன்ஸ் மத்தியில் அதிக லைக்ஸ் குவித்திருந்தது.

 

 

ஆண்ட்ராய்டு லாலிபாப் வெர்ஷனின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ஆண்ட்ராய்டு ட்விட்டர் ஐடியில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவிலேயே ஓரியோவின் பெயர் இடம்பெற்றிருந்தது. 'இப்போ லாலிபாப்... அடுத்து வேண்டுமானால் ஓரியோ' என அதிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஓரியோ நிறுவனத்தின் ட்விட்டர் ஐடியில் இருந்து வீ ஆர் வெயிட்டிங் என ரிப்ளை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோவின் பீட்டா வெர்ஷன் பிக்ஸல் சி, பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இதேபோல் அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்தவகை டிவைஸ்களில் தான் முதலில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிட்கேட் எனத் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்குப் பெயர் சூட்டியபோது, நெஸ்லே நிறுவனத்துக்கு ஆண்ட்ராய்டு பணம் எதுவும் செலுத்தவில்லை. இரு நிறுவனங்களுக்குமே இது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் என்பதே அதன் காரணம். மேலும், பொதுவான உணவுப்பொருளைவிட பிராண்டட் உணவுப்பொருளின் பெயரை ஆண்ட்ராய்டுக்கு வைப்பதை, அந்த பிராண்ட்கள் பெருமையான விஷயமாக எடுத்துக்கொள்கிறது. இந்த வரிசையில் ஓரியோ நிறுவனத்துடன் இணைந்து பெயர் சூட்டியதற்கும் கூகுள் நிறுவனம் பணம் எதுவும் செலுத்தவில்லை.

Android Oreo

ஆண்ட்ராய்டு ஓரியோவின் சில முக்கிய அம்சங்கள் :

1. ஸ்மார்ட் ஷேரிங்:

ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனின் முக்கியமான அம்சமே இதன் செயற்கை நுண்ணறிவுத்திறன்தான். இதில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஷேரிங் வசதியானது மொபைல் கேமராவுடன் இணைந்து செயல்படக்கூடியது. உதாரணமாக மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்ததும், அதைப் பகிர்வதற்காக சமூக வலைதளங்களை ஆண்ட்ராய்டு பரிந்துரைக்கும். இந்த வசதியானது பயனாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.

2. ஐகான்களின் வடிவம் :

Android Icon

ஐகான்களின் வடிவத்தை விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்காக அடாப்டிவ் ஐகான் லாஞ்சர் இந்த வெர்ஷனில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் ஆப்களின் ஐகான்களை வட்டம், சதுரம் என மாற்றிக்காட்டும்.

3. AI காப்பி பேஸ்ட்:

Android Oreo - AI Copy Paste

ஸ்மார்ட் ஷேரிங் வசதியைப்போல கூகுளின் மற்றொரு செயற்கை நுண்ணறிவுத்திறன் வசதி இந்த AI காப்பி பேஸ்ட். டெக்ஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்வதை மெஷின்லேர்னிங் மூலமாக மெருகேற்றியிருக்கிறது கூகுள். உதாரணமாக தொலைபேசி எண்ணை காப்பி செய்தால், அதனருகே டூல்பார் தோன்றி டயலர் ஆப்ஷனைக் காட்டும். இதேபோல் முகவரியை காப்பி செய்ததும், அதைத்தேடுவதற்கு வசதியாக டூல்பாரில் கூகுள் மேப்ஸ் தோன்றும்.

4. பிக்சர் இன் பிக்சர் மோட்:

Android O Pic in Pic Mode

ஓர் ஆப்பை பயன்படுத்தும் அதே நேரத்தில், ஒரே திரையிலேயே வீடியோக்களை ப்ளே செய்து பார்க்கும் வசதியான பிக்சர் இன் பிக்சர் மோடை ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் கொண்டுவந்துள்ளது கூகுள்.

மேலே பார்த்த வசதிகளைப் போல நோட்டிஃபிகேஷன் வசதிகள், அனைத்துவகையான எமோஜிகளும் டிஸ்ப்ளே செய்வதற்கான மாற்றங்கள், ஆட்டோஃபில் API போன்ற வசதிகளும் ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் இடம்பெற உள்ளன. பின்னால் இயங்கும் அப்ளிகேஷன்களைக் கட்டுப்படுத்தி, பேட்டரித்திறனை நீட்டிக்கக்கூடியதாக ஆண்ட்ராய்டு ஓரியோ உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க