Published:Updated:

புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!

ஞா.சுதாகர்

அரச கண்காணிப்பு தீவிரமாக உள்ள சீனாவையே கொஞ்சம் திணறவைத்திருக்கின்றனர், அண்மையில் ஹாங்காங் போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக்காரர்கள்.

புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!
புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!

ந்த யுகத்தின் புரட்சிகள் மீதும், போராட்டங்கள் மீதும் இருந்த பிம்பத்தை, அரசுகளிடையே மொத்தமாக மாற்றியமைத்த ஓராண்டு 2011. மத்திய கிழக்கு நாடுகளின் சர்வாதிகாரங்களுக்கு எதிராகப் பூத்த அந்தக் கிளர்ச்சிகள், மக்களின் கோபத்தை மட்டும் அரசுகளிடம் கொண்டுசேர்த்து விடவில்லை. அவர்களின் நவீன கிளர்ச்சி வடிவங்களையும் அரசுகளுக்குச் சொல்லிச் சென்றன. மக்களின் தகவல்தொடர்பு முறைகள் அனைத்தும் பெரும் கட்டுப்பாட்டிலிருந்த அன்று, அந்த மக்களுக்குக் கிளர்ச்சியின் சதுக்கங்களில் ஒன்றுகூட உதவிய ஊடகம், இன்டர்நெட். எகிப்து, துனிசியா, லிபியா எனக் கிளர்ச்சி பரவிய எல்லா நாடுகளிலும் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்தான் மக்களை ஒன்றுதிரட்டின. அவர்கள் உரையாட களம் அமைத்துக்கொடுத்தின. அதற்குப் பிறகு வந்த எல்லாப் போராட்டங்களிலும் இதே வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டன. இன்றைக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்தாத புரட்சிகளே இல்லை. சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில்கூட இந்தத் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகித்ததை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ``இந்த இணைய உதவி புரட்சிகள், இப்போது அடுத்தகட்டத்திற்குச் செல்லவேண்டிய காலமிது. காரணம், அரசின் கண்காணிப்பு இயந்திரங்கள்" என்கின்றனர் ஹாங்காங் கிளர்ச்சியாளர்கள்.

கடந்தவாரம் ஹாங்காங்கின் வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, சீனாவிற்கு எதிராகவும், ஹாங்காங்கின் நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல்கொடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஹாங்காங்கில் கடும்குற்றங்கள் புரியும் குற்றவாளிகளை சீனாவிற்கு நாடுகடத்துவதற்கான சட்டமசோதாவை எதிர்த்துதான் அந்த மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். இதன்மூலம் சீனாவின் ஆதிக்கம், ஹாங்காங்கில் அதிகமாகும் என்பதுடன், ஹாங்காங் தற்போது கொண்டிருக்கும் தனி சட்ட அமைப்புக்கே இது எதிரானது என்பதுதான் அந்தக் கிளர்ச்சிக்குக் காரணம். ஹாங்காங்கிற்குப் போராட்டங்களும், புரட்சியும் புதிதல்ல; என்றைக்கு அந்தப் பகுதியை, சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்ததோ அன்றிலிருந்தே அங்கு எதிர்ப்புகள்தான்; போராட்டங்கள்தான். கறுப்புக் குடைகளைக் கொண்டு அந்நாட்டு மக்கள் நடத்திய `குடைப்புரட்சி' வெகுபிரபலம். தற்போது அதைத் தாண்டி இந்தமுறை இன்னும் அதிகமாக கவனம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். ஒரே உதாரணம் மட்டும் சொல்கிறேன்.

புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!

கடந்த வாரம் புதன்கிழமை மதியம், ஹாங்காங்கின் அட்மிராலிட்டி நகரத்தின் உள்ளூர் ரயில்நிலையம். அங்கே வழக்கத்திற்கு மாறாக டிக்கெட் வெண்டிங் மெஷின்களில் நெடும் வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறார் பத்திரிகையாளர் மேரி ஹூ. அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்போதைய போராட்டத்திலிருந்து விலகி, மதிய உணவுக்காகச் செல்பவர்கள். மீண்டும் அன்று மாலையே போராட்டத்திற்கு அங்கே வரவிருப்பவர்கள். அவர்கள் யாரும் அங்கு வரிசையில் நிற்கவேண்டிய அவசியமே இல்லை. காரணம், எல்லோரிடமும் `ஆக்டோபஸ் கார்டு' இருக்கிறது. நம்மூர் மெட்ரோ ரயில்நிலைய கார்டு போலவே அதுவும் ஒரு ப்ரீபெய்டு கார்டு. அதன்மூலமாகவே அந்நாட்டு மக்கள் எங்கு வேண்டுமானாலும் பொருள்கள் வாங்கவும், பயணம் செய்யவும் முடியும். அதோடு அவர்களின் கிரெடிட் கார்டு விவரத்தையும் இணைத்துவைத்துக் கொண்டால், ஆட்டோமேட்டிக்காகவே பணம் அதில் லோடு ஆகிவிடும். அங்கிருப்பவர்கள் அனைவருமே ஆக்டோபஸ் கார்டு வைத்திருந்தும் அன்று வெண்டிங் மெஷின்கள் முன்னர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். பொதுவாக அந்தப் பகுதிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர யாருமே அந்த டிக்கெட் வெண்டிங் மெஷின்களைப் பயன்படுத்தமாட்டார்கள். இதனால் அவர்களிடம் அந்தப் பத்திரிகையாளர் விசாரிக்கிறார். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ``இந்த கார்டு மூலம் பயணித்தால் நாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதை அரசு கண்டறிந்துவிடும். எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பழிவாங்கவும் அரசுக்கு இதுவே போதும். அதனால்தான் டிக்கெட் வாங்குகிறோம்" என்றிருக்கின்றனர் மக்கள். உண்மைதான். இதுபோல பொதுமக்களின் பரிவர்த்தனை கார்டுகள் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதும், 2014-ம் ஆண்டு குடைப்புரட்சியில் ஈடுபட்டவர்களை அரசு தேடித்தேடி வழக்குப் பதிவு செய்ததும் அங்கே வரலாறு. அதுதான் அந்த மக்களின் அச்சத்திற்குக் காரணம். இன்னொரு சம்பவம்.

புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!

எப்போதுமே குடை அவர்களின் ஆயுதம்; போராட்டத்தின் முக்கிய வடிவம். ஆனால், இந்தமுறை அது தற்காப்பாகவும் அமைந்தது. இந்தமுறை போராட்டக்காரர்கள் குடையுடன்  சேர்த்து, முகமூடிகளையும் (Face masks) கொண்டுவந்திருந்தனர். அது அவர்களை பெப்பர் ஸ்ப்ரேயில் இருந்தும், கண்ணீர்ப் புகையிலிருந்தும் மட்டும் காக்கவில்லை. சீனாவின் ஃபேஷியல் ரெககனைஷன் மென்பொருள்களிலிருந்தும் தப்பிக்க உதவியிருக்கிறது என்கிறார்கள். காவல்துறை எப்போதும் விரட்ட பயன்படுத்திய ரப்பர் குண்டுகள், கண்ணீர்ப் புகை, சின்ன பெல்லட்கள் என அனைத்திற்கும் எதிராக கவசங்களைக் கொண்டுவந்திருந்தவர்கள் அரசின் டிஜிட்டல் கண்காணிப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ளவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் சமூக ஊடகங்களில் படங்களைப் பகிர்வது, ஊடகங்களுக்கு நேரடியாகப் பேட்டியளிப்பது, காவல்துறையின் ட்ரோன்கள் விண்ணில் பறந்தால் குடையைக் கொண்டு மறைப்பது எனத் தங்களின் அடையாளங்களை மறைப்பதில் வெகுநேர்த்தியாக இருந்திருக்கிறார்கள் மக்கள். இவர்கள் ஒருபக்கம் இப்படி இருக்க, இன்னொருபுறம் வழக்கமான முறையில் போராடிய மக்களும் இருக்கவே செய்தனர். அவர்களிடமும் முகமூடி அணியச் சொல்லி உஷார்படுத்தியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!

இதேபோல இன்னொரு சம்பவத்தைப் பதிவுசெய்திருக்கிறார் வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தியாளர் ஷிபானி மடானி. ``போராட்டத்திலிருந்து வீடு திரும்பிய பெண் ஒருவர், இன்னும் கண்ணீர்ப் புகையின் பாதிப்பிலிருந்து கூட முழுமையாக வெளிவரவில்லை. ஆனால், அதைக் கவனிப்பதைவிடவும் முதலில் எதைச் செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்தது. உடனே தன் மொபைலில் இருந்த சீன ஆப்களை எல்லாம் டெலிட் செய்கிறார். மொபைலில் VPN ஆன் செய்து, டெலிகிராம் ஆப்பை இன்ஸ்டால் செய்கிறார்" என்கிறார் அவர். இவர் மட்டுமல்ல; போராட்டக்காரர்கள் அனைவருக்கும் அன்று கைகொடுத்தது டெலிகிராம்தான். அதில்தான் அவர்களின் திட்டம், உரையாடல்கள் எல்லாம். அன்றைக்கு முழுக்க ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் ட்ரெண்டிங் பட்டியலில் நம்பர் 1 ஆக இருந்திருக்கிறது டெலிகிராம். என்னதான் அது பாதுகாப்பு என்றாலும், இன்னும் ஒருபடி கூடுதலாகவே பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தினர் அவர்கள். யாருமே அவர்களின் சொந்தப் பெயர், DP-யைப் பயன்படுத்தாதது, வழக்கமான சிம் கார்டுகளுக்குப் பதில் புதிய தற்காலிக சிம் கார்டுகளைப் பயன்படுத்துவது என அங்கேயும் வித்தை காட்டினர். இவர்களின் வீரியம் பார்த்ததாலோ என்னவோ அன்றைக்கே டெலிகிராமை மறைமுகமாக DDoS அட்டாக் மூலம் தாக்கியிருக்கின்றனர் சில ஹேக்கர்கள். இந்தத் தாக்குதல்கள் எல்லாமே சீனாவிலிருந்துதான் வந்திருக்கின்றன என உறுதியாகச் சொல்கிறார் அதன் சி.இ.ஓ பாவெல்.

புரட்சியும் டெக்னாலஜியும் சேர்ந்தால் என்னாகும்? சீனாவுக்குப் பாடம் எடுத்த ஹாங்காங் மக்கள்!

இன்றைக்கு உலக முழுவதுமுள்ள நாடுகளில் அதிகப்படியான அரசு கண்காணிப்பு உள்ள நாடு எனில், அது சீனாதான். எனவே அந்நாட்டு மக்கள் இந்தளவு Digital Identity குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், நாமும் இந்தக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஒன்று உண்டு. இன்றைக்கு அரசு வழங்கும் ஸ்மார்ட் சேவைகள் அனைத்தும் நம் பணியை எளிதாக்குவது மட்டுமல்ல; நம் Digital Identity-யையும் சேர்த்தே எடுக்கின்றன. அந்த Digital Footprint-களை எங்கே விட்டுவரவேண்டும், எங்கே விட்டுவிடக் கூடாது என்பதில் நாமும் தெளிவடைய வேண்டும். ஏனெனில், இதுவும் டிஜிட்டல் இந்தியாவாச்சே?!