Published:Updated:

இந்தியாவில் அதிக மழை பொழிவது சிரபுஞ்சியில இல்லையாம்!

இந்தியாவில் அதிக மழை பொழிவது சிரபுஞ்சியில இல்லையாம்!
இந்தியாவில் அதிக மழை பொழிவது சிரபுஞ்சியில இல்லையாம்!

லகில் புவி வெப்ப உயர்வு, வறட்சியால் விவசாயம் பாதிப்பு, பெருவாரியான மழை இல்லாமை எனப் பல காரணங்களால் மக்கள் பெரிதும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இருந்தாலும், கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் டெக்சாஸ், மும்பை நகரம் உள்ளிட்ட சில இடங்களில் மழை தனது உக்கிரத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும் இடமும் இங்கே இருக்கத்தான் செய்கின்றன. அதில் இந்தியாவிலுள்ள இடம்தான் உலகிலேயே அதிக மழைப்பொழிவு கொண்ட இடங்களில் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. அந்த இடத்தின் பெயர் சிரபுஞ்சி என்றுதானே நினைக்கிறீர்கள்... ஆனால், இந்தியாவில் எப்போதுமே மழைபொழிவு அதிகமாகக் கொண்ட இடம் மாவ்சின்ராம் எனும் கிராமம்தான். இது நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல உலகில் அதிகமான மழைப்பொழிவு கொண்ட இடங்களைக் கீழே காணலாம்.

1. மாவ்சின்ராம், மேகாலயா:
இங்கு வருடத்துக்கு 11,871 மி.மீ மழைப்பொழிவு இருக்கும். இந்த இடம்தான் உலகிலேயே அதிக மழைப்பொழிவு கொண்ட இடத்தில் முதலிடம் வகிக்கிறது. மாவ்சின்ராம் இடமானது ஷில்லாங் நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குப் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். மழைக்காலத்தில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும்போது, மக்கள் தங்கள் குடிசைகளின்மேல் கோரைப்புற்களை வைத்து பாதுகாத்துக் கொள்வர். நீங்கள் நினைப்பதுபோல சிரபுஞ்சி இல்லை ப்ரோ!

2. சிரபுஞ்சி, மேகாலயா:
சிரபுஞ்சியின் வருட மழைப்பொழிவு 11,777 மி.மீ. சிரபுஞ்சிதான் அதிக மழைப்பொழிவு இருக்கும் பகுதிகளில் உலகிலேயே இரண்டாவது இடம் பிடிக்கிறது. அதிக மழைப்பொழிவு இருக்கும் இந்த இடத்தில்தான் குளிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமும் நிலவும். சிரபுஞ்சியில் இருக்கும் இரண்டு அடுக்கு வேர்ப்பாலம் ஒரே நேரத்தில் 50 நபர்கள் நின்றாலும் தாங்கும் திறனுடையது. இந்தப் பாலம் 100 மீ நீளம் கொண்டது.

3. டுதெண்டோ, கொலம்பியா, தென் அமெரிக்கா:
டுதெண்டோவின் மழைப்பொழிவு வருடத்துக்கு 11,770 மி.மீ ஆகும். மற்ற இடங்களைப்போல இந்த இடம் பிரபலமான இடம் அல்ல. கொலம்பியாவின் வடமேற்கின் ஒரு மூலையில் அமைந்துள்ளது , டுதெண்டோ. இந்தப்பகுதி மக்களின் வீடுகள் எப்போதுமே நீர் புகாத ஷீட்களால் மூடப்பட்டிருக்கும். இந்த இடத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பது அதிகமானோருக்குத் தெரியாது. இதன் அருகிலுள்ள கியூப்டோ எனும் இடத்திலும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.

4. கிராப் ஆற்றுப்பகுதி, நியூசிலாந்து:
இப்பகுதியின் சராசரி மழையளவு 11,516 மி.மீ ஆகும். இந்தப்பகுதியில் இருக்கும் கிராப் ஆறு 9 கி.மீ நீளம் கொண்டது. இங்கு நிலவும் வானிலை நியூசிலாந்தில் நிலவும் வறண்ட வானிலைக்கு முரணானது. கிராப் ஆறானது 9 கி.மீ பயணம் செய்து ஹொகித்கா எனும் ஆற்றில் சேர்கிறது.

5. சாண் ஆண்டொனியோ டி யுரேகா, பியோகோ ஐஸ்லாந்து:
மேலே படிக்கும் பெயரும் ஆப்பிரிக்க யுனியைச் சேர்ந்த ஒரு பகுதியின் பெயர்தான். இங்கு வருடச் சராசரி மழைப்பொழிவு 10,450 மி.மீ ஆகும். ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் சாண் ஆண்டொனியோ டி யுரேகா எனும் இடம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை வறண்டச் சூழ்நிலைதான் நிலவும். ஆனால், அதற்குப்பிறகு பெய்யும் மழை மிகவும் மோசமானதாக இருக்கும். இங்கு வறட்சியான காலத்தில்தான் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.


6. டிபன்ட்சா, கேமரூன், ஆப்பிரிக்கா:
இந்தப் பகுதியின் சராசரி பருவ மழைப்பொழிவு 10,229 மி.மீ ஆகும். ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும் கமெளன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, டிபன்ட்சா கிராமம். இதுவும் பொதுவாக முரண்பாடான வானிலையைக் கொண்டிருக்கும். அதனால்தான் இப்பகுதி அதிக மழைப்பொழிவை பெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

7. பிக் பாக், மாவாய்:
இந்த இடத்தின் பருவமழைப்பொழிவு சராசரி 10, 272 மி.மீ. ஹவாயிலுள்ள தீவுகளில் மாவாய் தீவு இரண்டாவது பெரிய தீவாகும். ஒருங்கிணைந்த அழகுக்கு இந்த இடம் மிகச்சிறந்த உதாரணம். இதனால் அதிகமான சுற்றுலாப்பயணிகள் விரும்பும் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாக இவ்விடம் கருதப்படுகிறது.

8. மவுண்ட் வாயலேல், காயை, ஹவாய்:
மவுண்ட் வாயலேல் பகுதிக்கு 'நீர் நிரம்பி வழிதல்' என்று பெயர். இப்பகுதிகளில் சாதாரண கால்வாயில் கால்வைத்தால்கூட வழுக்கிவிடும் அளவுக்கு இங்கு மோசமான சூழல் நிலவும். இப்பகுதி கூம்பு வடிவத்தில் இருப்பதால் இந்த மழைப்பொழிவு இருக்கிறது என்று சொல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியின் சராசரி வருட மழைப்பொழிவு 9,763 மி.மீ அளவு இருக்கும்.

9. குக்குய், மாவாய், ஹவாய்:
ஹவாயிலுள்ள மவுனா கஹல்வானா மிக உயர்ந்த சிகரம்தான், குக்குய். இந்தப் பகுதியின் உயரம் முழுவதும் எரிமலைகளால் ஆனது. எரிமலைகளால் அழிந்த பகுதி இப்போது ஈவோ பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. இப்பகுதியின் சராசரி வருட மழைப்பொழிவு 9,223 மி.மீ.

10. எமீ ஷான், சிச்சுவான் மாகாணம், சீனா:
இப்பகுதியின் வருட மழைப்பொழிவு 8,169 மி.மீ ஆகும். பௌத்த மதத்தின் நான்கு புனித மலைகள் உயர்ந்த இப்பகுதி உலகில் அதிகமான மழைப் பொழிவினை பெறும் இடங்களில் இடம் பெறுகிறது. இம்மலைகள் இரட்டை அடுக்கு மேகங்களை ஈர்த்து மழையை வரவழைக்கும். இது மேகங்களின் கடல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இடம் யுனெஸ்கோவால் 1996-ம் ஆண்டு உலக பாரம்பர்ய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவைதான் உலகின் அதிக மழைப்பொழிவைக் கொண்ட பத்து இடங்கள். இதில் பெரும்பாலும் நமக்கு சிரபுஞ்சிதான் தெரிந்திருக்கும். அது மாவ்சின்ராம் என்ற இடம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்...