Published:Updated:

வெற்றிக் கொண்டாட்டம்! : மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு நடனமாடிய ’ஜாக் மா’

வெற்றிக் கொண்டாட்டம்! : மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு நடனமாடிய ’ஜாக் மா’
வெற்றிக் கொண்டாட்டம்! : மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு நடனமாடிய ’ஜாக் மா’

புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான 'அலிபாபா' குழுமத்தின் செயல் தலைவர் 'ஜேக் மா', அண்மையில் தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

சாதாரண 'ஜாக் மா'விலிருந்து  'மிஸ்டர் ஜாக் மா' என்ற நிலையை அடைவதற்கு,  வாழ்க்கையில்  பல  சோதனைகளை எதிர்கொண்டார். பிடித்த ஒரு விஷயத்துக்கு முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை அவர் தனது  செயலின் மூலம் உணர்த்தியுள்ளார். சீனாவில் பிறந்த  ஜேக் மா, சிறு வயது முதலே  ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் காட்டிவந்தார். இதற்காக, தினமும் 45 நிமிடங்கள் மிதிவண்டியில் சென்று சீனாவில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்களைச் சந்தித்து, கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாகத் தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். வாழ்க்கையில் இவர் சந்தித்த தோல்விகள் ஏராளம். கல்வி கற்பதில் சிரமம் கண்டார் ஜாக்.

பள்ளி இறுதித் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். மேனிலை பள்ளிப் படிப்பில் மூன்று முறை தோல்வியடைந்த இவர், கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்விலும் இரண்டு முறை தோல்வியடைந்தார். கல்லூரியில் வந்த வேலைவாய்ப்புகளிலும் அதிக கம்பெனிகளால் நிராகரிக்கப்பட்டவர், ஜாக் மா. காவல்துறையில் சேர விண்ணப்பித்த ஐந்து பேர்களுள், இவரை மட்டும் தேர்வுக்குழு நிராகரித்தது. பின்னர், பிரபலமான கே.எப்.சி (KFC) நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு விண்ணப்பித்த 24 பேர்களில், இவரை மட்டும் அந்நிறுவனம் நிராகரித்தது.  

புகழ்மிக்க ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தில் பயில 10 முறை விண்ணப்பித்தும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒரு சந்திப்பில் இதைப் பற்றி பேசிய ஜாக் மா, 10-வது  முறையும் நிராகரிக்கப்பட்டபோது, 'என்றாவது ஒரு நாள் அதே பல்கலைக்கழத்தில் சிறப்புரை ஆற்றும் அளவுக்கு வாழ்வில் வளர வேண்டும் என்று உறுதி கொண்டேன்'  என்று கூறினார்.

தொட்டவை அனைத்தும் தோல்வியில் முடிந்தபோதும், மனம் துவண்டுவிடாமல் அடுத்த முயற்சியில் இறங்கினார். 1995 -ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளராகச் சென்ற ஜேக் மா, அப்போதுதான் முதல் முதலில் இன்டர்நெட் பற்றி அறிந்து கொண்டார். எதிர்காலத்தில் இணையம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்  என்றுணர்ந்த ஜேக் மா, சீனர்களின் ஆதிக்கம் இணையத்தில் குறைவாக இருந்ததால், தனது நண்பர்களுடன் துணிந்து 'சீனாபேஜ்' என்னும் ஒன்லைன் பொருள்கள் விற்பனைச் சேவையைத் தொடங்கினார். ஆனால், அதுவும் அவருக்கு கைகொடுக்காததால், அரசின் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் துறையில் சேர்ந்தார்.

பின்னர், மீண்டும் 1999-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் 'சீனாபேஜ்'  நண்பர்களுடன் சேர்ந்து, 'அலிபாபா' நிறுவனத்தைத் தொடங்கினார். பல்வேறு தடைகளைக் கடந்து, படிப்படியாக அந்நிறுவனத்தை உயர்த்தினார். 2017 ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்களின்படி தற்போது, ஆசியாவின் பணக்காரர் (38.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பு)  ஆவார். இதைக் கொண்டாடும் விதமாகவும், 'அலிபாபா' நிறுவனம் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாகவும் ஜேக் மா சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில், தனது ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அமெரிக்க பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற 'டேன்ஜரஸ்' பாடலுக்கு, மைக்கேல் ஜாக்சனைப் போலவே உடையணிந்து வந்து மேடையில் சிறப்பு நடனமாடினார். இதைக் கண்டு பார்வையாளர்கள் அனைவரும் பூரிப்படைந்தனர்.

வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே அதிக அளவில் சந்தித்த "ஜாக் மா" ஒருநாளும் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சிகள் பல மேற்கொண்டு இன்று உலகம் பாராட்டும் பிரபலமாக உள்ளார்..விடாமுற்சி என்ற சொல்லிற்கு உதாணரமாக திகழ்கிறார் ஜேக் மா. அவர் கூறிய வாசகமான, "விட்டுவிடாதே! இன்று கடினமாக உள்ளது, நாளை மோசமாக இருக்கும், ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளி இருக்கும். நீங்கள் நாளை கைவிட்டுவிட்டால், நீங்கள் ஒருபோதும் சூரியனை பார்க்க முடியாது " - துவண்டுகிடக்கும் அனைத்து இளைஞருக்கும் ஒரு தீப்பொறியாக உள்ளது.