Published:Updated:

வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் இதுவும் நடக்கலாம்! - ஓர் அமெரிக்க நகரின் கதை

வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் இதுவும் நடக்கலாம்! - ஓர் அமெரிக்க நகரின் கதை
வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் இதுவும் நடக்கலாம்! - ஓர் அமெரிக்க நகரின் கதை

வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் இதுவும் நடக்கலாம்! - ஓர் அமெரிக்க நகரின் கதை

அந்தப் பெண்ணின் தோல் நிறம் கருப்பாக இருக்கிறது. காய்ந்துப் போன புற்கள் புதராக வளர்ந்து அவர் வீட்டின் வாசலை ஆக்கிரமித்துள்ளது. வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட ஒரு சின்ன மரவீடு அவருடையது. அந்தப் பெண்ணிற்கு அழகான பெரிய கண்கள். அந்த சிறு வீட்டின் முன்பு மூன்று மரப்படிக்கட்டுகள். அதில் ஏறித்தான் அவர் அந்த வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஒரு திண்மையான சரடு கயிறைப் போல் சுருள் செய்யப்பட்டிருக்கிறது அவரின் அந்தக் கருப்பு நிற முடி. அவர் வீட்டின் ஹாலில் ஒரு வெள்ளை நிற வாஷ் பேசின் இருக்கிறது. அது சற்றே பழுப்பேறி இருந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த அந்த ஸ்டீல் குழாய் துருவேறி இருந்தது. அது தண்ணீரைப் பார்த்தே பல நாட்கள் ஆனதுபோல் இருந்தது. 

மரங்கள் சூழ்ந்தப் பகுதியில்தான் அந்த வீடு அமைந்திருக்கிறது. இருந்தும் ஏதோ ஒரு பாலைவன வீடுபோல் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்தது அந்த வீடு. அந்த மூன்று மரப் படிக்கட்டுகள் இருந்த பகுதிக்கு வந்து நின்றார் அந்தப் பெண். சாலைக்கும் அவர் வீட்டிற்கும் இடையே இருந்த இடத்தில் நீல நிறத்தில் ஒரு அம்புக் குறி வரையப்பட்டிருந்தது. அது வரைந்து நீண்ட நாட்கள் ஆனது போல்தான் தெரிந்தது. ஆனால், காலை அந்தச் சாலையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்திருந்ததால், அந்த நீல நிற அம்புக் குறி மிகத் தெளிவாகத் தெரிந்தது. அங்கு அந்த சாலையோரத்தில் காய்கறிகளை வாங்கிய மஞ்சள் நிர கவரோடு நடந்துப் போன பெண், அந்த நீல நிறக் குறியையும், அந்தப் பெண்ணையும் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். ஆனால், அந்த கருப்பு நிற தோல் கொண்டிருந்த பெண் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் யாருக்காகவோ... எதற்காகவோ ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் கழிந்திருக்கும். அந்தப் பெண்ணின் கண்களில் திடீர் மகிழ்ச்சி வெளிப்பட்டது. அவரின் வீட்டருகே அந்தக் கார் வந்து நின்றது. அது சாம்பல் நிற கார். அதிலிருந்து ஒரு பெண் இறங்குகிறார். அவர் சற்று குண்டாக காணப்பட்டார். தன் காரின் பின் கதவுகளைத் திறந்து, சிறு, சிறு தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டியை எடுத்து வருகிறார். முகம் முழுக்க அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. சிரித்தபடியே அந்த மூன்று மர படிகளில் ஏறி, அங்கிருக்கும் அந்தப் பெண்ணிடம் அந்தப் பெட்டியைக் கொடுக்கிறார்.

கண்களில் வெளியேறும் மெல்லிய கண்ணீரோடு அதை வாங்கியவர், அவரிடம் ஏதோ சொல்லி அழுகிறார். இவரும் அவருக்கு ஏதோ ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார். (தண்ணீரின்மைக் காரணத்தால் தனக்கு ஏற்பட்ட ஒரு சோகத்தைதான் அவர், பகிர்ந்தார். அது என்னவென்பதை இறுதியில் பார்க்கலாம்).

அந்தப் பெண் தன் கார் கதவுகளை மூடுகிறார். அந்தக் காரினுள் இது போன்ற நிறைய தண்ணீர் பெட்டிகள் இருக்கின்றன. தன் காரை எடுத்துக் கொண்டு மற்றொரு வீட்டிற்குக் கிளம்புகிறார் மோனிகா லீவிஸ் பாட்ரிக் (Monica Lewis Patrick).

இது அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டெட்ராய்ட் எனும் நகரம். அமெரிக்காவின் அதிக மக்கள் தொகைகொண்ட நகரங்களில் டெட்ராய்ட்டும் ஒன்று. கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இந்த நகரத்தில் வசிக்கிறார்கள். அதே சமயம், பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இங்கிருக்கும் பலரால் சரிவர தண்ணீர் வரியை செலுத்த முடிவதில்லை. தன் பொருட்டு நகர நிர்வாகம் அவர்களின் தண்ணீர் இணைப்பை பிடுங்கிவிடுகிறது. குடிக்கவும், சமைக்கவும், வேறெந்த அத்தியாவசியத் தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் போராடும் இவர்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது "வீ தி பீப்பிள் ஆஃப் டெட்ராய்ட்" (We the people of Detroit) எனும் அமைப்பு. இதன் தலைவர் மோனிகா லீவிஸ் பாட்ரிக்.

தண்ணீர் இணைப்பு பிடுங்கப்பட்டதும் சிலர் சில நாட்களின் பணம் கட்டி அதைப் பெற்று விடுகின்றனர். சிலர் சில வருடங்களாகியும் அதைப் பெற முடியாமல், தண்ணீரின்றி வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஏப்ரல் மாதம் மட்டுமே 18 ஆயிரம் வீடுகளின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்புத் துண்டிக்கப்பட்ட வீடுகளைக் குறிக்கும் வகையில் அவர்களின் வீட்டின் முன்னர் நீல நிற அம்புக் குறியை வரைகிறது நிர்வாகம். அதை நகர மக்கள் “அவமானத்தின் அம்புக் குறியாக” பார்க்கிறார்கள்.  

“தண்ணிர் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை ஒருவருக்கு கிடைக்காமல் செய்ய இங்கு யாருக்கும் உரிமை கிடையாது. பலமான அரசைத் தொடர்ந்து எதிர்ப்பதனால் மட்டுமே இவர்களுக்குத் தண்ணீர் கிடைத்துவிடாது. என்னைப் போன்ற ஒரு மனிதர் இங்கு தண்ணீரில்லாமல் தவிக்கும்போது என்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. அப்படியானவர்களுக்கு தண்ணீர் வழங்கிடத் தான் இந்த அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன்..." என்று சொல்கிறார்.

சில நூறு டாலர்களை கட்டாத வீடுகளுக்குத்தான் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நகரில் இருக்கும் 40 நிறுவனங்கள் 9.5 மில்லியன் டாலர் அளவிற்கான வரி பாக்கியை வைத்திருக்கின்றன. ஆனால், அவர்களுக்கான இணைப்பு துண்டிக்கப்படவில்லை. 

இப்படியாக தண்ணீரில்லாததால் அந்தப் பகுதியில் பல பிரச்னைகள் எழுகின்றன. குறிப்பாக, சரியான தண்ணீர் இல்லாததால் உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகின்றன. சிலர் தங்கள் வீட்டையே இதனால் இழக்க நேரிடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் முதலில் பார்த்த அந்தப் பெண்ணிற்கு நேர்ந்ததும் கூட நடக்கிறது. 

அந்தப் பெண் விவாகரத்து ஆனவர். தன் மகனோடு அங்கு வாழ்ந்து வந்தவர். தண்ணீரில்லாததால், அந்தப் பெண் தன் மகனை அங்கு வைத்திருக்கக் கூடாது என்று சொல்லி, பிள்ளையை அவரிடமிருந்து பிரித்து அப்பாவிடம் ஒப்படைத்திருக்கிறது நீதிமன்றம். 

தண்ணீர்...!

அடுத்த கட்டுரைக்கு