Published:Updated:

மன்னர் பூமிபால் அதுல்யாதேஜை தாய்லாந்து கொண்டாடக் காரணம் என்ன?

மன்னர் பூமிபால் அதுல்யாதேஜை தாய்லாந்து கொண்டாடக் காரணம் என்ன?
மன்னர் பூமிபால் அதுல்யாதேஜை தாய்லாந்து கொண்டாடக் காரணம் என்ன?

ந்த உலகின் பல பகுதிகளை பலநூறு மன்னர்கள் ஆட்சி செய்தாலும், ஒரு சிலர் மட்டுமே பல தலைமுறைகளாக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடிக்கின்றனர். நீண்டகாலம் தாய்லாந்து மன்னராகப் பதவிவகித்த பூமிபால் அதுல்யதேஜ் எவ்வாறு தன் நாட்டு மக்களிடம் அன்பையும், மதிப்பையும், சம்பாதித்தார் என்பது பல சுவாரஸ்ய கதைகளைக் கொண்டது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன், 1946 ஜூன் 9-ம் தேதியன்று தன் சகோதரரும், அரசருமான ஆனந்த மஹிடோல், எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார். அந்த சோகம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில், மக்கள் முன்னிலையில் தன் 18-வது வயதிலேயே மன்னராகப் பொறுப்பேற்ற பூமிபால் அதுல்யதேஜ் இவ்வாறு சொல்லி பதவியேற்றார், "சியாமீஸ் மக்களின் (தாய்லாந்து மக்களின்) நன்மைகளைக் காக்க, நாங்கள் நீதியோடு ஆட்சி புரிவோம்”. இந்த வார்த்தைகளை பூமிபால் தன் வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்தார்.

தன் 70 வருட ஆட்சிக்காலத்தில், தாய்லாந்தில் ஏராளமான மக்கள்நலப் பணிகளைக் நிறைவேற்றினார். குறிப்பாக விவசாயிகள், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எண்ணிலடங்கா சிறப்புத் திட்டங்களை இவருடைய அரசு நடைமுறைப்படுத்தியது. அவற்றில் ஒன்றுதான் 'பிளம்' பழங்கள் விளைவிக்கும் திட்டம்.

தாய்லாந்தில் அதிகம் குளிர்நிறைந்த பகுதிகளான கோல்டன் ட்ரையாங்கிள், லாவோஸ் மற்றும் மியான்மார் எல்லைப் பகுதிகளில் பயிர் சாகுபடி செய்வது மிகவும் கடினம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் அந்தப் பகுதிகளை நேரில் காணச் சென்றபோது அந்த இடத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். அங்கு பெரும்பாலான மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளில் ஓபியம் போன்ற போதைச் செடிகளைப் பயிரிட்டு இருந்ததே அதற்குக் காரணம். போதைப் பொருள் செடிகளைப்  பயிரிடுவது சட்டப்படி குற்றமாக இருந்தபோதும் மன்னர் பூமிபால், அந்தப் மக்களிடம் எந்த அதிகாரத்தையும் பிரயோகிக்கவோ, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. அவ்வாறு செய்து அந்த மக்களை அச்சத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்பதோடு மட்டுமல்லாது, அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தவும் அவர் விரும்பவில்லை. காரணம், அந்தச் சமயத்தில் சீனா போன்ற நாடுகளில் கம்யூனிச கோட்பாடுகள் அதிகம் வலுப்பெற்றிருந்தது. எனவே, அரசின் மீது தாய்லாந்து மக்கள் எந்தவிதத்திலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதில் பூமிபால் தீர்க்கமாக இருந்தார். பல குழுக்கள் தாய்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டிராதவர்கள். அவர்களோடு தொடர்புகொண்டு தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் சந்தேகங்களைப் போக்கவும் மிகவும் சிரமப்பட்டார் மன்னர். எடுத்த எடுப்பில் போதைப் பொருள்களுக்குத் தடை விதிக்காமல் அம்மக்களிடம் ஓப்பியம் விளைவிப்பதால் கிடைக்கும் லாபத்தைப் பற்றிக் கேட்டறிந்தார். அவர்கள் சொல்லிய அதே லாபம் பிளம் எனப்படும் சீன கொத்துபேரி பழங்களை விளைவித்தாலும் கிடைக்கும் என்றும். அதற்கான முதலீடுகளை அரசே வழங்கும் என்றும் அறிவித்தார்.

அதன்பின் அந்த வானிலைக்கு ஏற்ற பயிர் வகைகளைக் கண்டறிய கோல்டன் ட்ரையாங்கிளில் ஆராய்ச்சி மையத்தை அமைக்கவும் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து பல வகையான பயிர்கள் மற்றும் பழங்கள் அங்கு சாகுபடி செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட காய், கனிகள் அனைத்தும் Doi Kam என்ற பெயரில் உள்ளூர் சந்தைகளில் விற்கப்பட்டன.

விவசாயிகளுக்காக மன்னர் செய்த இந்த ஒரு விஷயம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கும்மேலாக அவர் கொண்டுவந்த "தன்னிறைவு பொருளாதாரம்” எனும் கொள்கை தாய்லாந்து மக்கள் வாழ்வில் மிகப்பெரும் மயில் கல்லாக அமைந்தது. அதாவது, விவசாயிகள் தங்கள் நிலங்களை நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். அதில் 10% இடம் வாழ்வதற்கும், 30% இடம் விவசாயம் செய்வதற்கும், 30% இடம் நீர்நிலைகளை ஏற்படுத்துவதற்கும், 30% இடம் கால்நடைகளைப் பராமரிப்பதற்கும் இருக்க வேண்டும் என்பதுதான் அது. இதனால் மக்கள் அவர்கள் வாழும் இடத்திலேயே பொருளாதாரத் தன்னிறைவை அடைந்தனர். 

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இதுபோன்ற யோசனைகளைப் பின்பற்றி பலரும் பயனடைந்தனர். சாமான்ய ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான அரசின் திட்டங்களால் மக்கள் நல்வாழ்வைப் பெற்றனர்.  

தாய்லாந்து மக்கள் தங்கள் அரசை ஏன் நேசிக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. மன்னர் மறைந்து ஓராண்டுகாலம் ஆனநிலையிலும், இன்றும் பூமிபால் மன்னரை அந்நாட்டு மக்கள் தங்களின் கடவுளாகவேப் போற்றுகின்றனர். 

நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் உண்மையான சமாதானம், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு தாய்லாந்தின் முன்னாள் மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் வாழ்க்கை முன்மாதிரியாக நிச்சயம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.