Published:Updated:

‘மிக்கி மவுஸ்’ எனும் கேலிச்சித்திரம், அதை உருவாக்கியவர் கதை! #HBDWaltDisney

தார்மிக் லீ
‘மிக்கி மவுஸ்’ எனும் கேலிச்சித்திரம், அதை உருவாக்கியவர் கதை! #HBDWaltDisney
‘மிக்கி மவுஸ்’ எனும் கேலிச்சித்திரம், அதை உருவாக்கியவர் கதை! #HBDWaltDisney

‘கார்ட்டூன்’ என்றாலே நமக்கு உடனே நினைவில் வருவது இரண்டு. ஒன்று, வில்லியம் ஹன்னா ஜோசஃப் பர்பேராவின் `டாம் அண்ட் ஜெர்ரி'. மற்றொன்று, வால்ட் டிஸ்னியின் `மிக்கி மவுஸ்'. இதைக் கடக்காமல் நம் குழந்தைப் பருவம் முற்றுப்பெற்றிருக்க வாய்ப்பில்லை. பார்த்து மகிழும் தொலைக்காட்சி பொழுதுபோக்குகளில் ஆரம்பித்து, படுக்கையில் கட்டிப்பிடித்துத் தூங்கும் பொம்மை வரை உயிருள்ள பொருளாகவே வாழ்ந்து வந்தது மிக்கி மவுஸ். அது உருவான கதையும் அதை உருவாக்கியவர் கதையும்!

இதே நாள் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. சிறு வயதிலிருந்தே கேலிச்சித்திரம் மீது அதீத ஆர்வம் உடையவர். தான் வரைந்த ஓவியங்களை அண்டை வீடுகளில் விற்று காசாக்கினார். டிஸ்னியைப் பொறுத்தவரையில், படிப்பு என்பது ஒரு துறை மட்டுமே. அதையே தன் வாழ்க்கையாக நினைக்கவில்லை. கற்பனை, இயற்கை, விலங்குகள்... இவைதான் டிஸ்னியின் உலகம். அந்த உலகில் வசிக்கும் விஷயங்களுக்கு ஓவியங்களின் வாயிலாக உயிர்கொடுத்தார் வால்ட் டிஸ்னி. இவரது கற்பனை உலகுக்கு, டிஸ்னியின் தந்தைதான் வில்லன். டிஸ்னியின் தாய் மட்டுமே அவருக்கு ஆறுதல். அதுவே அவரின் முயற்சியைத் தோற்கடிக்கவிடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது. தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஓவியம் மற்றும் புகைப்படத் துறையைத் தேர்ந்தெடுத்து, தன் பள்ளி வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்கிவைத்தார் டிஸ்னி. இவருக்கு சார்லி சாப்ளின் மிகவும் பிடித்த மனிதர். அவரை மாதிரியே அச்சுப்பிசகாமல் இமிடேட் செய்வதிலும் இவர் கெட்டிக்காரர். பள்ளி இடைவேளை நேரத்தில், அவரைப்போல் நடித்து அவரது நண்பர்களை மகிழ்விப்பார். அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் இவரை நடிக்கச் சொல்லிக் கேட்டனர். கரும்பலகையில் ஓவியங்கள் வரைவதோடு தனது அசத்தலான நடிப்பையும் இணைத்து வித்தியாசமான முறையில் தன் நடிப்பை வெளிக்காட்டினார் டிஸ்னி. இரவு நேரங்களில் அவரது தந்தைக்கே தெரியாமல் பல மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்களும் டிஸ்னிக்கு உண்டு.

1911-ம் ஆண்டில் வால்டர் பெஃபிஃபர் (Pffeifer) என்பவருக்கு அறிமுகமானார் டிஸ்னி. பழகிய கொஞ்ச நாளிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். டிஸ்னி, அவரது வீட்டில் இருக்கும் நேரங்களைவிட பெஃபிஃபரின் வீட்டில்தான் அதிக நேரம் இருப்பாராம். தன்  சகோதரருடன் சேர்ந்து இவர் வசித்த நகரைச் சுற்றியிருக்கும் வீடுகளில் நியூஸ்பேப்பர்களும் போடத் தொடங்கினார். சனிக்கிழமைதோறும் `கன்சாஸ் சிட்டி ஆர்ட்' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கார்ட்டூன் வரையும் திறனையும் வளர்த்துக்கொண்டே வந்தார். இப்படியான சில விஷயங்கள் இவரது படிப்பைப் பாதித்தன. இரவில் சரியாகத் தூங்க முடியாத காரணத்தால், பள்ளியிலேயே பல சமயம் தூங்கிவிடுவார். இருப்பினும் நியூஸ்பேப்பர் போடுவதை ஆறு வருடங்கள் இடைவிடாமல் தொடர்ந்து செய்தார். 1917-ம் ஆண்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பல நிறுவனத்தில் கார்ட்டூனிஸ்டாகவும் வேலைபார்த்து வந்தார்.

1918-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் ஜெர்மனுக்கும் போர் தொடங்கியது. அதில் தன் பங்கும் இருக்க வேண்டும் என நினைத்த டிஸ்னி, ராணுவத்தில் சேர முயற்சித்தார். ஆனால், இவர் மிகவும் சிறு வயது என்பதால் அங்கு இருப்பவர்களால் நிராகரிக்கப்பட்டார். இருப்பினும் தனது எண்ணங்களை கேலிச்சித்திரங்களாக மக்களுக்குக் கொண்டுசேர்த்தார். பல பத்திரிகைகளிலும் நியூஸ்பேப்பர்களிலும் இவரது ஓவியங்கள் வலம்வந்தன.

1922-ம் ஆண்டு டிஸ்னி அவரின் மாமாவிடம் 500 டாலர்கள் கடனாகப் பெற்று, தன் சகோதரர் ராயுடன் சேர்ந்து லாஃப் ஓ கிராம்ஸ் (Laugh-O-Grams) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆலீஸ் இன் தி வொண்டர்லேண்டை (Alice in the wonderland) மையமாக வைத்து `ஆலீஸ் இன் தி கார்ட்டூன் லேண்டு' (Alice in the cartoon land) என்ற கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். எதிர்பாராதவிதமாக அந்த முயற்சி தோல்வியைத் தழுவியதோடு, நிறுவனமும் நொடித்துப்போனது. இருப்பினும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத டிஸ்னி, `ஆஸ்வல்ட் தி லக்கி ராபிட்' (Oswald the lucky rabbit) என்ற புது கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். இந்த முறை வெற்றி. ஆனால், சோதனை வேறு வழியில் தாக்கியது. அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அந்தச் சமயத்திலும் தளராத அவரது மனம், முயன்று கொண்டேதான் இருந்தது. தன் சகோதரருடன் மீண்டும் கூட்டணி அமைத்து ``இந்த முறை நம்மைக் காப்பாற்றப்போவது ஒரு எலி!'' என்று கூறி `மார்டிமர் மவுஸ்' (Mortimer Mouse) என்ற கேலிச்சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார் டிஸ்னி. `மார்டிமர் மவுஸ்' என்ற பெயரில் திருப்தியடையாத அவரது மனைவி, ``இந்தப் பெயர் ரொம்பப் பகட்டாக உள்ளது. நாம் ஏன் இதற்கு `மிக்கி மவுஸ்' என்று பெயர் வைக்கக் கூடாது?'' என்று கேட்டார். தன் மனைவியின் சொல் தட்டாத டிஸ்னி, அந்தப் பெயரையே அந்தக் கேலிச்சித்திரத்துக்குச் சூட்டினார். அது ஹிட் ஆனது.

வெளிவந்த ஓரிரு ஆண்டுகளிலேயே மகத்தான வெற்றியைப் பெற்றது. பல எபிசோடுகளில் மிக்கி அடித்த லூட்டிகளும் சேட்டைகளும் குழந்தைகளை விழுந்து விழுந்து சிரிக்கவைத்ததோடு நில்லாமல், பெரியவர்களையும் குழந்தைகளாக மாற்றி வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தது. இமை கொட்டாமல் அதை மக்களும் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தனர். மிக்கி மவுஸ் உருவான கதையும் சுவாரஸ்யம் நிறைந்தது. வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்ற நிலையில் மனம் தளர்த்திக்கொண்டிருந்த நேரத்தில் மன்ஹாட்டனிலிருந்து ஹாலிவுட்டுக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார் டிஸ்னி. கற்பனையில் வாழ்க்கையை நினைத்து வெதும்பிக்கொண்டிருந்த டிஸ்னி, தனது கார்ட்டூன் நோட்டை எடுத்து அதில் ஒரு கேலிச்சித்திரத்தைக் கிறுக்கினார். அதுதான் முகம், இரண்டு காதுகள் என மூன்று வட்டங்களால் உருவான மிக்கி மவுஸ்.

இதுபோன்ற வரலாற்றில் இடம்பெற்றவர்களின் கதை வெறும் குழந்தைகளுக்கு மட்டும் இன்ஸ்பிரேஷன் அல்ல, அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கும்தான். வால்ட் டிஸ்னியை, பல வரலாற்று நாயகர்கள் படிப்பை வாழ்க்கையாகப் பாராமல், வெறும் துறையாகவே பார்த்துவந்தனர். விளையாட்டு, சினிமா, கலை, அரசியல் போன்ற பல துறைகளைப்போல் படிப்பும் ஒரு துறையே. அது வாழ்க்கைக்கு அவசியம் என நினைத்து குழந்தைகளுக்குள் புகட்டாமல், அவர்களது எண்ணங்களுக்கு வண்ணங்கள் பூசுவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. கையில் இருக்கும் ஐந்து விரல்களும் வெவ்வேறு உயரம்கொண்டவை. அதேபோல்தான் ஒவ்வொருவருக்குள் இருக்கும் திறைமைகளும் கற்பனைகளும்... ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அது நிச்சயம் ஒருநாள் வால்ட் டிஸ்னியைப்போல் உயரங்கள் தொடும்.

மிக்கியைத் தொடர்ந்து டொனால்ட் டக், டம்போ, ஃபினோக்கியோ, ஃபான்டசியா எனப் பல கேலிச்சித்திரங்களை உருவாக்கி, இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அனைத்தும் அதிரிபுதி ஹிட் அடித்து பல விருதுகளை அள்ளிக்குவித்தன. பிறந்த நாள் வாழ்த்துகள் டிஸ்னி!