Published:Updated:

‘ரோலிலாலா’ என்ற குழந்தை 'நெல்சன் மண்டேலா' ஆன கதை!

‘ரோலிலாலா’ என்ற குழந்தை 'நெல்சன் மண்டேலா' ஆன கதை!
‘ரோலிலாலா’ என்ற குழந்தை 'நெல்சன் மண்டேலா' ஆன கதை!

‘ரோலிலாலா’ என்ற குழந்தை 'நெல்சன் மண்டேலா' ஆன கதை!

"நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதுபோல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, ஒரு சுதந்திர பூமி. இங்கு அனைத்து மக்களும் சம அதிகாரத்துடன், சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும்வரை, என்னுடைய போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்" - ஜூன் 12, 1964-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட நெல்சன் ரோலிலாலா மண்டேலா உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. எளிமையான தலைவராக இருந்த அவரை உலக அரங்கில் ஒரு மாபெரும் வரலாற்று நாயகனாக உயர்த்திய வரிகள் இவைதான். இன்றோடு அவர் இம்மண்ணை விட்டு நீங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

பல தொன்மையான வரலாறுகளின் உறைவிடமாக இருந்த ஆப்பிரிக்கக் கண்டம், பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஐரோப்பியர்களின் ஆட்டக்களமாகவும், சோதனைக் கூடமாகவும் மாறியது. தென்னாப்பிரிக்கப் பிள்ளைகள் உருட்டி விளையாடிய கற்கள் எல்லாம் வைரக்கற்கள் என்று அறிந்தால் சும்மாவா இருக்கும் ஐரோப்பியர்களின் மூளை? அவர்களுக்குள்ளேயே ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டார்கள். விளைவு, தங்களின் வளங்களை எல்லாம் ஐரோப்பியர்கள் சுரண்டிச் சாப்பிடுவதற்கு ஆப்பிரிக்கர்களே அடிமைகளாக மாறி ஏவல் செய்தார்கள். ஆப்பிரிக்கர்களின் கல்விமுறை ஐரோப்பியமயமாக்கப்பட்டது. ஆப்பிரிக்கக் குழந்தைகள் பள்ளியில் சேரும்போது, அவர்களுக்கு ஐரோப்பியப் பாணியிலான பெயர்கள் சூட்டப்பட்டன. அப்படி வந்ததுதான், மண்டேலாவின் முதல்பெயரான நெல்சன் என்பதும்.

பிறந்தவுடன் மண்டேலாவின் அப்பா வானத்தை நோக்கிக் கூவிய பெயர் ‘ரோலிலாலா’ என்பதுதான். பெயர் என்னும் ஒற்றைச்சொல் வரலாற்றின் எச்சமாக இருப்பது. அந்தப் பெயரையே மாற்றியதால் தன் பிள்ளையைப் பறித்துக்கொண்ட உணர்வு, தந்தை காட்லா ஹென்றிக்கு திடீரென்று, தன்னுடைய பாட்டனாரின் பெயரான மண்டேலாவைச் சேர்க்கின்றார் தந்தை. அன்றுமுதல் இவர், நெல்சன் மண்டேலா என்று வரலாற்றினால் அழைக்கப்பட்டார்.

சுதந்திரம் நிறைந்த ஒரு குழந்தைப் பருவம் மண்டேலாவிற்குக் கிடைத்தது. ஆனால், தன்னுடைய ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். தாய் நோசெகேனி, மண்டேலாவை தன் கணவரின் தோழரும், சோஸா இனக்குழுவின் பிரதிநிதியுமான ஜோன்ஜின்டேபாவிடம் ஒப்படைக்கின்றார். வாலிபப் பருவத்தை முழுமையாக அந்த அரண்மனையிலேயே கழிக்கின்றார் மண்டேலா. இடையில் ஒரு காதல் தோல்வி. அங்குதான் தன் மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு அனைத்தையும் அறிந்துகொள்கின்றார். மெல்ல அரசியல் ஆர்வம் பிறக்கின்றது. சட்டம் பயின்றார். கிளார்க் கல்லூரியில் திறமையான மாணவராக வலம் வருகின்றார். வளர்ப்புத் தந்தையிடமிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திலிருந்து தப்பிக்க, உறவினர் கார்லிக் பேகேனியிடம் தஞ்சம் புகுந்தார். அவர் மூலம் தன் அரசியல் குருவான வால்டர் சிசுலுவைச் சந்திக்கின்றார் மண்டேலா. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸில் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். பிறகு எவ்லினுடன் திருமணம். அவர்களின் அன்பிற்கு அடையாளமாகத் தெம்பி என்ற ஆண் மகவு பிறக்கின்றது. சிறிது காலத்திற்கு மட்டுமே அவர்களின் திருமண வாழ்க்கை இனிக்கின்றது. மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோரான பிறகு, அவர்களுடைய திருமண வாழ்வு முற்றுப் பெறுகின்றது.

பெரிதும் அறிமுகம் இல்லாத காரணங்களினால் இந்தியர்கள் மீதும், காந்திய வழிப் போராட்டத்தின்மீதும் ஈடுபாடு கொள்ளாத மண்டேலா, இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்திய அறவழிப் போராட்டத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். காந்தியமும், பிறகு கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம், கம்யூனிஸ்ட் அறிக்கையும் அவருக்குள் புதிய பார்வைகளைத் தோற்றுவிக்கின்றன.

ஒரு தீர்க்கமான போராட்டத்தை நிகழத்தவேண்டும் என்ற முனைப்பில் மண்டேலா செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, சட்டபூர்வமாகத் தன்னுடைய நிறவெறிக்கு ‘அபார்தெய்ட்’ என்ற பெயர் சூட்டப்படுகின்றது. தென்னாப்பிரிக்க மக்கள் அனைவரையும் இனவாரியாகப் பிரிப்பதுடன், வேற்றுமைப்படுத்துகின்றது. பொது இடங்கள், போக்குவரத்து ஆகிய அனைத்திற்கும் வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

இவை அனைத்தையும் எதிர்த்து 1960-ம் ஆண்டு, கிட்டத்தட்ட ஐந்தாயிரம் மக்கள் ஒன்றுகூடினர். அப்போது, அங்கிருந்த காவலர்கள், கிட்டத்தட்ட அறுபத்து ஒன்பது மக்களைச் சுட்டுத்தள்ளினர். உலக நாடுகள் மத்தியில் பெரும் அவப்பெயரைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தென்னாப்பிரிக்க அரசு தள்ளப்பட்டது. இதன் காரணமாக, நெல்சன் மண்டேலா தன் அரசியல் ஆசான் வால்டர் சிசுலு மற்றும் பலரைக் கைது செய்ய தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்தது. ஆனால், மண்டேலா தப்பித்து, எத்தியோப்பியா, சூடான், கானா, அல்ஜீரியா, லண்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து தங்கள் நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துரைத்தார் மண்டேலா. இது உலக நாடுகள் அனைத்திற்கும் அவருடைய ஆளுமையைப் பரப்பியது. மண்டேலாவின் மூலம் தென்னாப்பிரிக்க அரசின் அராஜகப் போக்கினை அறிந்த ஐ.நா சபை, அதனை வன்மையாகக் கண்டித்தது.

நேர்மறையான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்த்து, நாட்டிற்குத் திரும்பிய மண்டேலாவிற்குக் காத்திருந்தது நீண்ட நெடிய சிறைவாசம். 1962 அக்டோபர் 2 அன்று புகழ்பெற்ற பிரிட்டோரியா நீதிமன்றத்திற்கு, சைரன் ஒலியுடன் வந்த காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கி நடந்து வந்தார் மண்டேலா.

ஆனால், அவர் இறங்கி நடந்து வந்த தோற்றம், அங்கிருந்த ஐரோப்பிய நீதிபதிகள் உள்பட அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. தன் புராதன உடையில், புலித்தோல் போர்த்தியபடி, ஒரு சிங்கம்போல நடந்து வந்தார் மண்டேலா. பின்பு கூட்டத்தினரை நோக்கி, தன்னுடைய வலக்கரத்தை உயர்த்தி, ‘அமெண்டா’ என்று முழங்கினார். அமெண்டா என்றால் ‘உறுதி’ என்று பொருள். அவருக்கு மரண தண்டனை அளிக்கும் அளவிற்கு அவர்மீது அதிருப்தியில் இருந்த தென்னாப்பிரிக்க அரசு, பிற உலக நாடுகளைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கின்றது. இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அவரின் மன உறுதியில் எத்தகைய மாற்றங்களையும் கொண்டுவரவில்லை. அவர் சிறையிலிருந்த காலத்தில் மண்டேலாவின் தாயார் உயிர் நீத்தார். தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குக்கூட மண்டேலாவுக்கு அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. அதன்பின் ஓராண்டு கழித்து மண்டேலாவின் மூத்த மகன் தெம்பி ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். 

தன் மன உறுதி குலைந்தால் தன்னுடைய சக தோழர்களுக்கும் மன உறுதி குலையும் என்பதற்காக, அந்த இழப்பைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும், உடலையும் மனதையும் உறுதி செய்துவந்தார் அவர்.

1990-ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்படுகின்றார். பின்பு அந்நாட்டின் தலைவராகவும் பொறுப்பேற்கின்றார்.

அறிவியலைத் தன்னுடைய இனமே சிறந்தது என்று நிரூபிக்கப் பயன்படுத்திய ஐரோப்பியர்களின் செயலுக்கு ஒரு காத்திரமான உதாரணம், சாரா பார்ட்மன். ஆப்பிரிக்கப் பெண்ணான இவருடைய உடல் ஆராய்ச்சி என்ற பெயரில் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளானது. இவருடைய மார்பகங்களும், பின்பகுதியும் வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாக இருந்ததால், மரபணுக்களில் குரங்கினுடைய கலப்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்தார்கள் ஐரோப்பியர்கள். தனக்கு நேர்ந்த உடல் ரீதியான கொடுமைகளாலும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களாலும் அவர் தன்னுடைய 26-ம் வயதில் மரணம் அடைந்தார்.

இறந்த பிறகும் அவருடைய உடல் விவரிக்க இயலாத துன்பத்திற்கு ஆளானது. அவருடைய உடலுறுப்புகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. இவற்றோடு அவருடைய உடலின் மாதிரியும் அங்கு வைக்கப்பட்டது.

ஆனால், 1994-ம் ஆண்டு அதிபர் மண்டேலா, "சாராவின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும்" என்று பிரான்ஸ் நாட்டிடம் கோரிக்கை விடுத்தார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அத்தனை ஆண்டுகளாக ஒரு காட்சிப்பொருளாகப் பார்க்கப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்ணின் உடல், கடைசியாக 2002-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் தேசியப் பெண்கள் தினத்தன்று அடக்கம் செய்யப்பட்டது.

காட்சிப் பொருளாகப் பார்க்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண்ணின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று எண்ணிய மண்டேலாவின் உள்ளத்திண்மை, அவர் ஆட்சி புரிந்த ஆண்டுகளில் மிகக்குறைந்த ரத்தச் சேதாரத்துடனும், அதே சமயம், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தமிட்ட முதலீடுகளை வெற்றிகரமாகவும் நிறைவேற்ற உதவியது.

ஒரு தேர்ந்த மேன்மையான தலைவன் பெரும்பான்மைவாதத்தினை ஒருபோதும் கையில் எடுப்பதில்லை. தென்னாப்பிரிக்காவின் பன்மைத்துவத்தினைப் பெரிதும் போற்றிப் பாதுகாத்ததால்தான், இன்று மண்டேலா மக்கள் மத்தியில் உத்தமராக உயர்ந்து நிற்கின்றார்.

இன்று பெரும்பான்மைவாதத்தினையும், பிரிவினைவாதத்தையும் முன்னிறுத்தும் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் மண்டேலாவின் வாழ்க்கை ஒரு பாடமாகும்.

அடிமைத்தளையிலிருந்து விடுபடவும், மேன்மையான வாழ்க்கை வாழவும் உரிமை உள்ள மக்களுக்கு மண்டேலா ஓர் ஒளிவிளக்கு! 

அடுத்த கட்டுரைக்கு