Published:Updated:

இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள்!'' - #metoo- வுக்கு டைம்ஸின் அங்கீகாரம்

இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள்!'' - #metoo- வுக்கு டைம்ஸின் அங்கீகாரம்
இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள்!'' - #metoo- வுக்கு டைம்ஸின் அங்கீகாரம்

யாரிப்பாளரின் அறைக்குள் அழைக்கப்படும் புதிய நடிகை, ஆள் இருக்கும்போது ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்யும் பணிப்பெண், மேனஜர் மட்டுமே இருக்க அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என யாருக்கும் எந்த நேரத்திலும் பாலியல் வன்முறை நிகழலாம் என்ற உண்மை தெரிய வரும்போது பெரிய அதிர்ச்சியாக இருக்கும். ஒருவேளை தனது ஏதோ ஒரு செய்கை அவரை அப்படி நினைக்கவைத்ததோ என்ற குற்றஉணர்வு பெண்ணின் கழுத்தை நெருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்கு 'இது அவர்களுடைய தவறு இல்லை' என்பதைப் பதியவைக்க முயற்சி செய்துள்ளது 'டைம்ஸ்' பத்திரிகை. 

ஒவ்வொரு வருடமும் 'பர்சன் ஆஃப் தி இயர்' என்ற பட்டத்தை போப், ஒபாமா, டொனால்டு ட்ரம்ப் போன்ற தனிப்பட்ட நபர்களுக்கே கொடுத்துவந்த டைம்ஸ் பத்திரிகை, இந்தமுறை, பாலியல் வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்களையும், நடந்ததை 'உடைத்துப் பேசியவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளது டைம்ஸ் பத்திரிகை.

அக்டோபர் மாதம், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்ட்டன் பற்றி முதலில் வெளிப்படையாக உடைத்துப் பேசிய ஹாஷ்லே ஜுட், தன்னைப் பாலியல்ரீதியாக சீண்டிய டிஜேவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர், சிஇஓ-வுக்கு எதிராகப் புகார் அளித்த முன்னாள் ஊபர் பொறியாளர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பெண், ஓர் அலுவலகத்தில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்ட்டாக இருந்த பெண், ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பறிக்கும் வேலையைச் செய்யும் பெண் எனப் ‘பாலியல் வன்முறைகளுக்கு எதிராக’ குரல் கொடுத்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை ஓரிடத்தில் சந்திக்கவைத்துள்ளது டைம்ஸ். 

இவர்கள் வெவ்வேறு வயது, மொழி, இனம், மதம். அதிலும் இருவர் ஆண்கள். வின்ஸ்ட்டனுக்கு எதிரான விவாதத்தைத் தொடங்கிய ஜூட் முதல் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தில் வேலை பார்க்கும் இசபெல் வரை, அனைவருக்குமான ஒற்றுமை பாலியல் சீண்டலும் அதற்கு எதிரான சீற்றமும். ஹோட்டல் அறையில் தன்னைப் பாலியல் ரீதியாகச் சீண்டிய வின்ஸ்ட்டனிடமிருந்து தப்பிவந்த ஜூட், தன் அப்பாவிடம் தொடங்கி, பலரிடமும் இதுகுறித்து பகிர்ந்தபோது சந்தித்த அதிர்ச்சி.

தன்னிடம் பாலியல்ரீதியாக நடந்துகொண்ட டிஜேவைப் பற்றி புகார் தெரிவித்தார் பிரபல பாடகி, டைலர் ஸ்விஃப்ட். வேலையிலிருந்து நீக்கப்பட்ட அந்த டிஜே, ஒரு மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். பதிலுக்கு டைலர் ஸ்விஃப்டும் ஒரு டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடந்தார். அந்த டிஜேவின் வழக்கறிஞர் டைலரை நோக்கி அத்தனை மோசமான கேள்விகளை முன்வைத்தபோதும், ‘நான் தவறு செய்திருப்பதாக நீங்கள் என்னை நம்பவைக்க முயல்கிறீர்கள். ஆனால், ஒருபோதும் அது நடக்காது’ என்று அசால்ட்டாக சொல்லியிருக்கிறார் டைலர். “என்னைப் போன்ற ஒருவருக்கே இந்த நிலை என்றால், புதிதாகத் துறைக்கு வரும் இளம் பெண்களின் நிலை என்ன ஆகும்” என்று கேட்கிறார் டைலர் ஸ்விஃப்ட். 

தன் மனைவி முன்னிலையிலேயே தன்னைப் பாலியல்ரீதியாக சீண்டிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரைப் பற்றி ட்விட்டரில் வெளிப்படுத்தினார் அமெரிக்க நடிகர், டெர்ரி க்ரியூஸ். “இங்கு அனைவரும் பாதிக்கப்பட்டவர்களையே கேள்வி கேட்கிறார்கள். நீ அவனை அங்கேயே ஏன் அடிக்கவில்லை என்கிறார்கள். தவறு செய்தவனைத்தானே ஏன் செய்தாய் என்று கேட்க வேண்டும்? அவன் அப்படி நடந்துகொண்டது தவறு இல்லையா? இனி அதை மாற்றுவோம். இனி பாதிக்கப்பட்டவரை கேள்வி கேட்கக் கூடாது. குற்றம் செய்தவரைப் பற்றி பேசத் தொடங்குவோம்” என்கிறார் டெர்ரி. 

ஊபர் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்த பெண், அந்த நிறுவனத்தில் உள்ள பலர்மீது பாலியல் வன்முறை பற்றி எழுதிய ஒரு பிளாக் பதிவு அதிரவைத்தது. சக பணியாளர் முதல் சி.இ.ஓ வரை வேலையைவிட்டுப் போகவைத்தது. இப்படியாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலுக்கு எதிராகத் துணிச்சலாக நின்றவர்களைச் சிறப்பித்துள்ளது டைம்ஸ்!