Published:Updated:

மர்மங்கள் நிறைந்த டுங்குஸ்கா நிகழ்வு... இன்றும் அவிழாத முடிச்சுகள்! #TunguskaEvent

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மர்மங்கள் நிறைந்த டுங்குஸ்கா நிகழ்வு... இன்றும் அவிழாத முடிச்சுகள்! #TunguskaEvent
மர்மங்கள் நிறைந்த டுங்குஸ்கா நிகழ்வு... இன்றும் அவிழாத முடிச்சுகள்! #TunguskaEvent

மர்மங்கள் நிறைந்த டுங்குஸ்கா நிகழ்வு... இன்றும் அவிழாத முடிச்சுகள்! #TunguskaEvent

PC: Google

சைபீரியாவின் டுங்குஸ்கா ஆறு சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாகப் பனியால் மூடப்பட்டிருக்கும் பிரதேசம் அது. வெய்யில் காலம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர்கள் தொலைவில் தனது கலைமான்களின் தோலினால் செய்யப்பட்ட குடிலில் விழித்தபடி படுத்திருந்தார் எவென்கி பழங்குடியின முதியவர் ஒருவர். 

‘அயால்டி’ என்று முணுமுணுத்துக்கொண்டார். எவென்கி மொழியில் அப்படியென்றால் நற்காலை வணக்கங்கள். இன்றைய நாள் இனிதே தொடங்க வேண்டும். அவரிடம் 200 கலைமான்கள் இருந்தன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தவிர மகனை அருகிலிருக்கும் தோல் பதப்படுத்தும் இடத்திற்கு போகச்சொல்ல வேண்டும். வெகு நாள்களாக தேங்கிக் கிடக்கிறது. 

எழுந்து வெளியில் வந்தார். திடீரென்று வானம் இரண்டாகப் பிளந்ததுபோல் இருந்தது. வானமே எரிவது போல தெரிந்தது. இடி முழக்கம் கேட்டது. கண்களைக் குருடாக்கும் ஒளி எங்கும் பரவியது. தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். கடைசியில் அவரது காதில் கேட்ட ஓசை அவரது முதுகெலும்பு முறியும் ஓசை.

சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த போது வானத்தில் காளான் குடை போன்று கரும்புகை பரவிக்கொண்டிருந்தது. கரிய நிறத்தில் தார் போன்று மழை பெய்யத் தொடங்கியது. அசையமுடியாமல் குரலெழுப்பி மகனை அழைத்தார். மனிதர்கள் இயற்கையை அழிப்பதனால் அக்டா கடவுள் கோபித்துக்கொண்டார். இயற்கையின் சக்திக்கு முன் நாம் ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே மீண்டும் நினைவு தப்பியது.

சேகரென் மற்றும் சுச்சான் எனும் சன்யாகிர் பழங்குடியின சகோதரர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென சூடான காற்று அவர்களைச் சுற்றிப் பரவியது. யாரோ தூக்கி எறிந்தது போல் பத்தடி தள்ளிப்போய் விழுந்தனர். என்ன நடந்தது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். மீண்டும் அவர்களை யாரோ தூக்கி எறிந்தார்கள். இப்போது அவர்கள் விழுந்த இடம் நெருப்பினால் தகித்துக் கொண்டிருந்தது. இருவரும் அலறினர். காலுக்கு கீழே பூமி அதிர்ந்து நகர்ந்தது. 

வானிலிருந்து மாபெரும் கல் ஒன்று விழுந்தது போன்று ஒரு பெரும் இடிமுழக்க ஓசை கேட்டது. தொலைவிலிருந்த தேவதாரு மரங்கள் முறிந்து கீழே சாய்ந்தன. சில மரங்கள் எரியத் தொடங்கின. நூற்றுக்கணக்கான பீரங்கிகள் வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது போலிருந்தன. கண்ணைக் குருடாக்கும் வெளிச்சம் பரவியது. இருவரும் கண்களை மூடிக்கொண்டனர். மீண்டுமொரு முறை இடியோசை கேட்டது.  உலகம் அழிந்துகொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டனர். இடியோசை தொடர்ந்து பதினான்கு முறை கேட்டது.

அது 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் காலை 07:17 மணி. வானிலிருந்து சூரியனை விட பிரகாசமாக ஒளிப்பிழம்பு ஒன்று வேகமாக பூமியை நோக்கி வந்தது. விண்ணில் சுமார் 10 கிலோமீட்டர் உயரத்திலேயே அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பலத்த வெடிச்சத்தத்துடன் சிதறியது. அது உண்டாக்கிய அதிர்வலைகளால் பூமியே அதிர்ந்தது. வானமே இரண்டாகப் பிளந்தது போலானது. பீரங்கிக் குண்டுகள் முழங்குவது போன்று ஒலியைத் தொடர்ந்து நெருப்பு ஜுவாலையாகப் பரவியது. 

2000 சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு அங்கிருந்த டாய்கா காடு அழிந்தது. 80 கோடி மரங்கள் எரிந்து சாம்பலாயின. ஏராளமான கலைமான்கள் உள்பட காட்டு உயிரினங்கள் கருகின. ரிக்டர் அளவுகோலில் 6-ம் எண் அதிர்வு அலைகள் உணரத்தக்கதாக அதிர்வு இருந்தது. இந்த வெடிப்பின் மூலம் வெளிப்பட்ட சக்தியானது ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டை விட 1000 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகும். வெடிப்பிற்கு பிறகு காந்தப்புயல் வீசியது. திசைகாட்டிகள், மின்னணு சாதனங்கள் வேலை செய்யவில்லை. இடியோசை போன்ற அந்த ஒலி 800 கிலோமீட்டர் தொலைவிற்கு கூட கேட்டது. இந்த வெடிப்பின் ஓசை மூன்று லட்சத்து எண்பதாயிரம் சதுர கிலோமீட்டர்கள் தொலைவுக்கு உணரப்பட்டதாக மிரோவடெனியெ எனும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

தற்போது இருப்பது போன்று தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில் இந்தப் பெருவெடிப்பு நிகழ்வு உலகின் பிறபகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை. இது நிகழ்ந்த நாள்களின் முன்னும் பின்னும் வானில் துருவப்பகுதிகளில் நிகழும் அரோரா சுடரொளிகள் போன்ற வண்ணக் கலவையாக தோற்றமளித்தது. ஒரு மாதகாலத்துக்கு இரவு வெளிச்சம் நிறைந்து, வானம் வண்ணக்குழம்பாகக் காட்சியளித்தது.

நியூயார்க் டைம் பத்திரிகையில் வானில் நிகழும் அதிசயம் என்று இந்த வண்ண ஒளிகளைப் பற்றிச் செய்தி வெளியிட்டது. ரஷ்யாவில் ஏதோ பெரியதாக நிகழ்ந்திருக்கிறது என்ற அளவு மட்டுமே விஷயம் தெரிய வந்திருந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை.

PC: Google

இந்த வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்று பல கோட்பாடுகள் உலவுகின்றன.

கோட்பாடு 1 – விண்கற்கள் :
பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு இதுவே.

டுங்குஸ்கா நிகழ்வு 1908-ஆம் ஆண்டே நிகழ்ந்தாலும் அதைப்பற்றிய முதல் ஆராய்ச்சி நடக்க 19 ஆண்டுகள் பிடித்தன. மனித நடமாட்டம் இல்லாத பகுதி என்ற காரணம் ஒன்று. தவிர ரஷ்ய அரசும் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முதல் உலகப்போர் மூளும் அபாயம் இருந்த நேரம் அது. ரஷ்யப் புரட்சி வெடிக்கும் சூழ்நிலை வேறு இருந்தது.

1920 முதல் பீட்டர்ஸ்பர்க் கனிமவியல் அருங்காட்சியகத்தில் லியோனிட் குலிக் என்பவர் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார். அவரது வேலைகளில் ஒன்று சோவியத் யூனியனில் விழும் விண்கற்கள், எரிகற்களைச் சேகரித்து ஆராய்வதாகும். 

அவருக்கு 1908-ல் டுங்குஸ்காவில் நிகழ்ந்த சம்பவம் குறித்த தகவல் கிட்டியது. அது விண்கல்லாகத்தான் இருக்கும் என்று எண்ணிய அவர் 1921-ல் முதற்கட்ட பயணத்தை மேற்கொண்டார். சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் பேசினார். அவற்றைப் பதிவுசெய்து கொண்டு திரும்பினார். மீண்டும் 1927-ல் பயணித்து டுங்குஸ்காவிற்கு அருகிலிருக்கும் வனவர வர்த்தக நிலையத்தினை அடைந்தார். (இந்தப் பகுதிகளின் பெயர்களுக்கும், வாழும் மனிதர்களின் பெயர்களுக்கும் தமிழோடு தொடர்பிருப்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.) 

அங்கு சென்று சேர அவருக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. அங்கிருந்த எவெங்கி பழங்குடியினரின் துணையோடு மிகுந்த இன்னல்களோடு சம்பவ இடத்தை அடைந்தார். முதலில் அந்தப் பழங்குடியினர் அங்கு வர சம்மதிக்கவே இல்லை. கடவுள் தண்டித்த இடம், அக்டா கடவுளால் சபிக்கப்பட்ட இடம் என்று அவர்கள் தயங்கினார்கள். சிறிது நாள்கள் கழித்து ஒருவழியாக சம்மதிக்கவைத்து அந்த இடத்தை நெருங்கும் போது எங்கும் மரங்கள் எரிந்து விழுந்து கிடப்பதைக் கண்டார்.  

வெடிப்பு நிகழ்ந்த மையப்புள்ளியிலிருந்து பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு மரங்கள் விழுந்து கிடந்தன. அவை சைக்கிளில் உள்ள ஆரங்கள் போன்று விழுந்திருந்தன. ஆனால் அவர்களால் அங்கு விண்கல்லின் மிச்சத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மோதிய விண்கல்லின் எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை. மோதியதால் ஏற்படும் பள்ளமும் காணப்படவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் பெருமளவில் சாய்ந்து கிடக்கும் தேவதாரு மரங்களை மட்டுமே. அதிலும் பெருமளவு மரங்கள் விழுந்து கிடக்க ஒருசில மரங்கள் முழுமையாக நின்றுகொண்டிருந்தன. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலமாகவே உலகின் பிற பகுதிகளுக்கும் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது. 

குலிக் குழுவினரின் மூன்றாவது பயணத்தின் போது அங்கு துளைகளிட்டு சோதனை செய்து பார்த்தனர். ஆயினும் இது விண்கல்லின் விளைவு என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. 

குலிக்கும் அவரது குழுவினரும் 1939 வரை பத்து முறை பயணம் மேற்கொண்டு மண் மாதிரிகளை எடுத்து வந்தனர். பின்னர் குலிக் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று நாசிப்படைகளால் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஒருவித நச்சுக்காய்ச்சலால் 1942-ல் இறந்து போனார். 

1957-ல் ரஷியாவைச் சேர்ந்த கனிமவியலாளரான யாவ்னில் என்பவர் குலிக் குழுவினர் கொண்டு வந்திருந்த மண்மாதிரிகளைச் சோதனை செய்து அதில் நிக்கல், கோபால்ட் போன்ற தனிமங்கள் இருப்பதை உறுதிசெய்தார். இதனால் வெடிப்புக்குள்ளானது இரும்பு விண்கல் என்று முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் பின்னாளில் அவர் சோதனை செய்த மண்மாதிரி டுங்குஸ்காவிலிருந்து கொண்டு வந்தது அல்ல எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 1947-ல் சிக்கோட்-அலின் எனும் மலைப்பகுதியில் விழுந்த விண்கல்லின் மாதிரி இடம் மாறியிருந்தது தெரியவந்தது. 

அருகாமையிலிருந்த செக்கோ ஏரியில் இந்த விண்கல்லின் பாகம் இருக்கக்கூடும் என்று 2007-ல் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒரு கருத்தை முன்வைத்தனர். ஏனெனில் அந்த ஏரியானது இந்த வெடிப்பிற்கு முன்னர் இருந்திருக்கவில்லை. காஸ்பெரினி எனும் விஞ்ஞானி அந்த ஏரியின் ஆழத்தில் 10 மீட்டர் விட்டமுள்ள விண்கல்லின் பாகம் கண்டிப்பாக இருக்கிறது என்றார். 

அது ஆழமான ஏரியில்லை என்பதால் ரஷ்யர்கள் அடியில் சென்று துளையிட்டுப் பார்த்தால் கிடைத்துவிடும் என்ற அவரது கருத்தை 2008-ல் அவரே மறுதலிக்க நேர்ந்தது. ஏனெனில் விண்கல் ஏரியில் விழும் பாதையில் நன்கு வளர்ந்த மரங்கள் முழுமையாக இருந்தன. அவை எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டும் அல்லது கீழே சாய்ந்திருக்க வேண்டும். இரண்டுமே நடவாததால் இக்கருத்தும் பொய்த்துப் போனது. பின்னாள்களில் அந்த ஏரி 280 ஆண்டுகள் பழைமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

1966-ல் வாசிலி ஃபெசென்கோவ் என்பவர் டுங்குஸ்காவில் விழுந்த விண்கல்லின் பயணத்தைக் கணித்துச் சொன்னார். சூரியனை ஏராளமான விண்கற்கள், குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழையும்போது சிறு விண்கற்கள் எரிந்து விடுகின்றன. இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது வளிமண்டலம் வலிமையானதாகையால் அது நம்மைப் பாதுகாக்கிறது. பூமியின் பரப்பில் பெரும்பகுதி கடலாதலால் நம் கவனத்திற்கு வரவில்லை. 

ஆனால் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்த பெரிய அளவிலான விண்கல் டுங்குஸ்காவில் வெடித்துச் சிதறியதுதான். இது சைபீரியாவில் விழுந்திருந்தால் 5 லட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும். மனித நடமாட்டமில்லாத இடத்தில் விழுந்ததால் மனித இனம் பிழைத்தது. 

சுட்ஸ்தலேவ் எனும் வணிகர் வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து வைரங்கள் கண்டெடுத்ததாக ஒரு செய்தியும் சொல்லப்படுகிறது. இன்று டுங்குஸ்கா வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சயான்ரிங் எனும் நிறுவனத்தினர் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்கில் க்ளிக் செய்து பயணம் செய்ய தயாராகலாம். http://www.sayanring.com/tour/view/205/
 


சில சந்தேகங்கள்:
டுங்குஸ்கா நிகழ்வில் கீழ்க்கண்ட விஷயங்கள் கேள்விக்குறியவை:
 1.    பொதுவாக விண்கற்கள் திசையை மாற்றிப் பயணிக்காது. டுங்குஸ்காவில் வெடித்தப் பொருள் தெற்கு திசையிலிருந்து வந்தது. வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் கெஷ்மா என்ற இடத்தில் மேலிருக்கும் போது அது அதன் திசையை திடீரென கிழக்கு நோக்கி மாற்றிக்கொண்டது. 

 2. ப்ரியோப்ரெசென்கா எனும் இடத்தின் மேல் செல்லும்போது வடக்குத் திசையை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டு டாய்கா காடுகளின் மேல் 10 கிலோ மீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியது.

 3. விண்கற்கள் விடியற்காலையில் பூமியைத் தாக்குவது அபூர்வமான நிகழ்வாகும்.

 4. பூமியின் வளைவு காரணமாக செர்பியாவில் காலை 7:17-க்கு கிடைக்கும் சூரிய ஒளி அதே நேரத்தில் லண்டனில் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. அதே போல வெடிப்பின் போது கிடைத்த ஒளிச்சிதறல் பூமியின் மறுபுறம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால், அங்கும் பலர் பார்த்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு