Published:Updated:

3 டாலருக்குப் பிடிக்கப்பட்டு 100 டாலருக்கு விற்கப்படும் கடல் அட்டை..! #AnimalTrafficking அத்தியாயம் 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
3 டாலருக்குப் பிடிக்கப்பட்டு 100 டாலருக்கு விற்கப்படும் கடல் அட்டை..! #AnimalTrafficking அத்தியாயம் 9
3 டாலருக்குப் பிடிக்கப்பட்டு 100 டாலருக்கு விற்கப்படும் கடல் அட்டை..! #AnimalTrafficking அத்தியாயம் 9

3 டாலருக்குப் பிடிக்கப்பட்டு 100 டாலருக்கு விற்கப்படும் கடல் அட்டை..! #AnimalTrafficking அத்தியாயம் 9

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதர்களில் ஆரம்பித்து பேக்டீரியா வரை ஒவ்வோர் உயிருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. மனிதனைத் தவிர்த்து “நல்லா வாழ்ந்து செத்தான்” என்கிற வரலாறு எந்த ஓர் உயிரினத்திற்குமே இருந்தது இல்லை. அந்த வரிசையில் மோசமான வரலாற்றைக் கொண்ட ஒரு உயிரினம்தான் கடல் அட்டை. 


மெக்ஸிகோவில் இருக்கிற கடற்கரைப் பகுதிகளைக் கொண்ட மாகாணம் யூகடான். அங்கிருந்த கடற்கரை கிராமங்கள் டிஷ்ஷிலாம், தி பிராவோ. கடல் அட்டைகள் குறித்த வரலாற்றில் தவிர்க்க முடியாத கிராமங்கள். கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்கிற கடல் அட்டைகளின் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த மக்களில் பெரும்பாலானோரின் தொழிலும் கடல் அட்டைகளைக் கடத்துவதுதான். கடலின் ஆழத்திலிருந்து கரைக்குக் கொண்டு வருகிற இந்தப் பயணம் கத்தி மேல் நடப்பதற்குச் சமமானது. 

இரவு நேரங்களில் டார்ச் லைட் மட்டும்தான் அவர்களின் தகவல் தொடர்பு சாதனம். நான்கு ஐந்து விசைப்படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். சுமார் 25 கடல் மைல்கள் பயணம் செய்து நடுக் கடலுக்கு வருகிறார்கள். நீங்கள் நினைப்பது போல கடல் அட்டைகளை வலை விரித்துப் பிடிப்பதில்லை. கடலுக்குள் இறங்கிப்  பிடிக்கிறார்கள். குழுவில் இருக்கிற ஒருவர் ஆழ்கடலுக்குள் சென்று கடல் அட்டைகளை எடுத்து வர வேண்டும். உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் பயணிக்கிறவருக்கு ஆக்சிஜன், விசைப்படகின் மோட்டாரிலிருந்து சிறிய டியூப் வழியாக வழங்கப்படுகிறது. கடல் அட்டைகளின் கடத்தலுக்கு முதல் பலி இங்கிருந்துதான் தொடங்குகிறது. அட்டைகளைப் பிடிக்க கடலுக்குள் பல நூறு அடி வரைக்கும் செல்கிறார்கள். கடலுக்குள் இருக்கிற அட்டைகளை ஒரு சாக்கில் எடுத்து வைக்கிறார்கள். 

இப்படியான நேரங்களில் கடற்படையின் கப்பல் சம்பவ இடத்திற்கு வருகிறது. கடல் அட்டைகளைப் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் கடற்படை கைது செய்தால் 5000 டாலர் அபராதமும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். சில நேரங்களில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகிற சம்பவங்களும் நிகழும். கடற்படைக் கப்பலைப் பார்த்ததும் கடலுக்குள் இருக்கிற அந்த நபரைத் தவிர்த்து ஒட்டு மொத்தக் குழுவும் அங்கிருந்து கிளம்புகிறது. கடலுக்குள் செல்கிற ஆக்சிஜன் டியூப் அறுந்து விழுகிறது. கடலுக்குள் ஆக்சிஜன் இல்லாமல் கடல் அட்டைக் கடத்தலுக்கான முதல் உயிர்ப் பலி இப்படித்தான் கொடுக்கப்படுகிறது. 

வெற்றிகரமாகக் கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு வரும் குழுவை ஆசியாவின் வணிக நபர்கள் வளைத்துப் போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கிலோ கடல் அட்டைகளை 3 அமெரிக்க டாலருக்கு வாங்குகிறார்கள். ஆனால் அவை மெக்ஸிகோவை விட்டுத் தாண்டும் பொழுது ஒரு கிலோ 35 அமெரிக்க டாலர்களாகிறது. கடல் வழியாகவும் வான் வழியாகவும் பயணித்து ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா எனப் பயணிக்கும் கடல் அட்டைகள் பல ரெஸ்டாரென்ட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. ஆசிய நாடுகளில் உள்ள பணக்கார ஹோட்டல்களில் முக்கியமான உணவாக கடல் அட்டை இருக்கிறது.  அங்குச் சமைக்கப்பட்ட ஒரு கடல் அட்டையின் விலை 100 அமெரிக்க டாலர்கள். மெக்ஸிகோவில் 3 டாலர்களிலிருந்து பயணிக்கிற கடல் அட்டை சீனாவில் 100 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாக ஒரே காரணம், “ஆண்மைக் குறைவு”. எல்லா நாடுகளிலும் இந்தக் காரணத்தை முன் வைத்தே இதன் விற்பனை நடக்கிறது. கடல் அட்டைகளில் உள்ள காண்டிரைட்டின் சல்பேட், கீல்வாத நோய் , நுரையீரல் குறித்த நோய்களுக்கும் சிறந்த மருந்தென்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களுக்காகவே எவ்வளவு விலை ஆனாலும் கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். 


மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 11.7.2001-ல் 53 கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்க உயிரினங்களைப் பிடிக்க தடை விதித்தது. பின்னர் 5.12.2001-ம் தேதி 53 வகையிலிருந்து 23 கடல் பொருள்களுக்கான தடையை மத்திய அரசு நீக்கியது. தடை நீக்கப்படாத பட்டியலில் கடல் அட்டையும் ஒன்று. மெக்ஸிகோ நாடுகளைப் போல இங்குக் கடல் அட்டைகள் கடலில் இறங்கிப் பிடிக்கப்படுவதில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்துகிற தடை செய்யப்பட்ட வலையில் அவை சிக்கிக்கொள்கின்றன.  

மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் மீன் பிடித்து வருகின்றனர். கடல் வளம், மீன்வளத்தை அழிக்கும் தடை செய்யப்பட்ட இரட்டை வலை, சுருக்குமடி, கொல்லி, ரோலர் மடிகள், தள்ளு வலை உள்ளிட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். தடை செய்யப்பட்ட வலைகள் கடல் ஆழத்தில் தரை தளத்தில் பரவி தென்படுகிற அனைத்தையும் இழுத்து வருவதால் மீன்கள், மீன் குஞ்சு, முட்டைகள் மீன்வளத்தைப் பெருக்கும் பவளப்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் அட்டைகள் ஆகியவை வலையில் சிக்குகின்றன. கரையில் மீன்கள் ரகம் பிரிக்கும்போது கடல் அட்டைகள், மீன்கள் தவிர்த்து மற்றவை வீசி எறியப்படுகின்றன. கடலில் பலநாள் வளர்ந்து மீனவர்களுக்கே வாழ்வளிக்கும் நண்டு, கணவாய், இறால் குஞ்சுகள் கரைகளில் ஓடி சில மணி நேரத்தில் இறக்கின்றன. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரம் தேவகோட்டை பக்கத்திலுள்ள ஒத்தக்கடை செக்போஸ்ட்டில் போலீஸார், இரவு வாகனச் சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்திய போது, வாகனத்தில் இருந்தவர்  “வலை” கொண்டு போவதாகத் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் வாகனத்தை ஆய்வு செய்த போது, வலைக்குள்  7 மூட்டைகளில் 310 கிலோ கடல் அட்டை இருந்ததைக் கண்டுபிடித்தனர். சர்வதேச கருப்புச் சந்தையில் இதன் மதிப்பு  30 லட்சம் அமெரிக்க டாலர்கள். 


விசாரணையில் அந்தமானிலிருந்து, ராமநாதபுரத்திற்கு கடல் அட்டைகளைக் கடத்துவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தமானிலிருந்து கப்பலில் சென்னைத் துறைமுகம் வந்து, அங்கிருந்து சரக்கு லாரியில் மதுரை வழியாக ராமநாதபுரம் கொண்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று தவறுதலாக “ சரக்கு” சென்னையிலிருந்து சேலம் சென்றுவிட்டது. சேலத்திலிருந்து ராமநாதபுரம் திரும்பும் வழியில் தேவகோட்டைசெக் போஸ்ட்டில் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர். 

கடல் அட்டைகளைக் கடத்துவதற்கு ஹாட் ஸ்பாட்டாக இப்போது இருப்பது ராமேஸ்வரம்தான். ஏனெனில் இங்கிருந்து எளிதில் கடல் அட்டைகளை இலங்கைக்குக் கடத்தி விடலாம். அங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் கொண்டு போகிறார்கள். அதனால்தான் உலகின் பல நாடுகளிலிருந்தும் ராமேஸ்வரம் பகுதிக்குக் கடல் அட்டைகள் கடத்தப்பட்டு கொண்டு வரப்படுகிறது. சர்வதேச எல்லைகளைக் கடந்து தமிழகத்திற்குள் வருகிற கடல் அட்டைகள் லஞ்சம் கொடுப்பதன் மூலம் ராமேஸ்வரத்தைக் கடந்துவிடுகின்றன. இந்தியாவில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதும் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவதும் தமிழகத்தில்தான் அதிகமாக நிகழ்கின்றன. ராமேஸ்வரம் பகுதிகளில்தான் அதிக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

அழிவின் விளிம்பிலோ, அரியவகை உயிரினம் என்கிற பட்டியலிலோ கடல் அட்டைகள் இல்லை. ஆனால் கடல் வளம் பாதிக்கப்படும் என்கிற ஒரே காரணத்திற்காகப் பல நாடுகளில் கடல் அட்டைகளை விற்பனை செய்வதும் அவற்றைப் பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இவற்றைப் பிடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவற்றைப் பண்ணை முறையில் வளர்க்க அந்நாட்டு அரசு மானியமே வழங்குகிறது. ஆனால், ஆரோக்கியமான கடல் அட்டைகள் கிடைப்பது கடலில் மட்டுமே. அதனால்தான் தமிழகத்திலிருந்து இலங்கைப் பகுதிகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் அவை கடத்தப்பட்டு வருகின்றன. உலகில் ஆயுத கடத்தலுக்கு அடுத்த கடத்தலாக விலங்குகள் கடத்தல் இருப்பதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. ஏனெனில் மருந்து என்கிற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி மனிதன் வேட்டையாடாத மிருகம் இப்போதைக்கு உலகத்தில் இல்லை, மனிதனைத் தவிர.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு