Published:Updated:

"80,000 மக்கள் எங்கே போவார்கள்?" -துருக்கியில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் பழைமையான நகரம்!

Hasankeyf
Hasankeyf ( Alamy )

அரசு காலக்கெடு விதித்துவிட்டதால், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வரலாற்றுச் சின்னங்களுக்கு வருகை புரிந்து மிகுந்த மன வேதனையோடு அவற்றுக்குப் பிரியாவிடை அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாடு தன் அடையாளத்தை அழிக்கிறது என்றால், அது தன்னையே அழித்துக்கொள்கிறதென்றுதான் அர்த்தம். அதை வளர்ச்சி என்று ஒருகாலத்திலும் சொல்லிவிட முடியாது.

துருக்கியில் அமைந்திருக்கும் மிக மிகப் பழைமையான பகுதி ஹசன்கீஃப் (Hasankeyf). டிக்ரிஸ் நதியில் அணை கட்டுவதன் மூலம், வளர்ச்சி என்ற காரணத்தைக் காட்டி விரைவில் அந்த நகரை நீருக்குள் மூழ்கடிக்கப் போகிறது துருக்கி அரசு. தென்கிழக்கு துருக்கியிலுள்ள, பேட்மேன் என்ற பகுதியிலிருந்து அரைமணி நேர தூரத்தில் அமைந்துள்ளது ஹசன்கீஃப். டிக்ரிஸ் நதியோரத்தில் அமைந்திருக்கும் அது, மிகப் பழைமையான பாலைவனச் சோலை மிகுந்த பகுதி.

Historical site
Historical site
Eyup Agalday

பூமியில் மனித நாகரிகத்தின் மிகப் பழைமையான குடியிருப்புகளில் அதுவும் ஒன்று. சுமார் 12,000 ஆண்டுகளாக அங்கு மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான குகைகள், தேவாலயங்கள், நினைவுக் கல்லறைகள் உள்ளன. மனித வரலாற்றில் ஓர் அணிகலனாக நிற்கும் இந்தப் பழைமை வாய்ந்த நகரத்தில் இன்றும் சுமார் 80,000 மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதை இலிசு (Ilisu dam project) என்ற அணையைக் கட்டுவதற்காக அழிக்கப் போகிறார்கள்.

அணை கட்டும் வேலையும் 4,200 ஜிகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகளும் 2006-ம் ஆண்டு தொடங்கியது. அந்நாட்டின் நான்காவது பெரிய அணையாக உருவெடுக்கப் போகும் இந்த அணையின் கட்டுமான வேலைகள் இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறது. அதோடு 80,000 மக்களின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்து 12,000 ஆண்டுகள் பழைமையான ஹசன்கீஃப் நகரத்தின் ஆயுளும் முடியப் போகிறது. துருக்கி அரசு அங்கு வாழும் மக்களுக்கு அந்த இடத்தைக் காலி செய்ய அக்டோபர் 8-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.

இந்த நிலத்தைத் தோண்டினால், அடுக்கு அடுக்காகப் பல கலாசாரங்கள், பல வகையான மனித நாகரிகங்கள் புதைந்திருப்பதைப் பார்க்கலாம். அரசாங்கம் மரணித்தவர்களுக்கு மரியாதை செலுத்த மறுக்கிறது. எங்கள் வரலாற்றுக்கு மதிப்பளிக்க மறுக்கிறது.
ரித்வன் ஐஹன் (Ridvan Ayhan), `ஹசன்கீஃபைக் காப்பாற்றுங்கள்' இயக்கத்தின் உறுப்பினர்.

பல ஆயிரம் ஆண்டுக்கால பாரம்பர்யம் மிக்கக் கலாசார அடையாளத்தை அழிக்கக் கூடாது என்று மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தோல்வியடைந்துவிட்டது. இதனால், திறக்கப்படவுள்ள இந்த அணை விரைவில் 4,200 ஜிகாவாட் மின் உற்பத்தியைச் சாத்தியமாக்கும். ஆனால், அதற்கு அது கொடுக்கவிருக்கும் விலை மிகப் பெரியது.

மக்கள் வாழும் 199 குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும். பழங்கால மனிதர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குகைகள் அழிந்துபோகும். 80,000 மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கிலான உயிரினங்களின் வாழ்விடங்கள் தொலைந்துபோகும். அந்தப் பகுதியின் பல்லுயிர்ச்சூழல் பாழாகும். 4,200 ஜிகாவாட்டுக்கு இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்கத் துணிந்த துருக்கி அரசின் இதயம் நிச்சயம் இரும்பைவிடக் கடுமையானதாகத்தானிருக்க வேண்டும்.

மலைகளைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் இந்த நகரம், இந்தக் குகைகள், பழங்காலத் தேவாலயங்கள் இவையெல்லாம் எங்களுடைய வரலாறு மட்டுமல்ல. இது உங்களுடையதும்தான். ஏனென்றால், இது மனித இனத்தின் வரலாறு.
ரித்வன் ஐஹன்

இந்த இடத்தில் வெறும் 10 சதவிகிதப் பகுதிகள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கே இவ்வளவு பெரிய வரலாறு கிடைத்துள்ளது. இதை மேலும் ஆய்வு செய்யவும் திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவிக்கவும் அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதை அரசாங்கம் ஏற்கவில்லை. ஆனால், அணை கட்டுவதற்கான திட்டத்தை ஏற்று அதற்கு அனுமதியும் கொடுத்து அத்தனை அடையாளங்களையும் அழிக்கப் பார்க்கிறது.

மெசபடோமியா, பைசான்டியம், அரேபியப் பேரரசுகள், ஓட்டோமன் பேரரசு என்று பல வரலாறுகளின் மிச்சங்களை ஹசன்கீஃப் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நகரத்தைப் பற்றிய குறிப்புகள் பழைமை வாய்ந்த அஸ்ஸிரியன், ஆர்மேனியன், குர்தீஷ், அரேபிக் மொழிகளில் உள்ளன. இந்த அணை, இவை அனைத்தையுமே மென்று விழுங்கி ஏப்பம் விடப் போகிறது.

Ilisu Dam Project
Ilisu Dam Project
The Guardian

யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு இதைவிடத் தகுதி வாய்ந்த ஒன்று இல்லவே இல்லையென்று கூறுகிறார் மத்திய ஃப்ளோரிடாவில் வரலாற்று ஆய்வாளராக இருக்கும் ஹகன் ஒஸோக்லு.

ஹசன்கீஃபுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கக் கலாசார அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யக் கோரி, மக்களும் 'ஹசன்கீஃபைக் காப்பாற்றுங்கள்' இயக்கமும் எவ்வளவோ மனுக்களைக் கொடுத்துவிட்டனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்துக்கு உரிய அங்கீகாரத்தை இத்தனை நாள்களாகக் கொடுக்காதிருந்ததே இந்தத் திட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதை உரிய முறையில் செய்திருந்தாலே போதும். இந்த அணை கொடுக்கும் வருமானத்தைவிட அதிகமாகச் சுற்றுலாத் துறை கொடுத்திருக்கும்.

தி கார்டியன் என்ற ஆங்கிலப் பத்திரிகை, துருக்கியின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சகத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``பேசப்பட வேண்டிய எத்தனையோ திட்டங்கள் இருக்கையில், இதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?" என்பதே அவர்களின் பதிலாக இருந்துள்ளது.

Human made Caves, Hasankeyf
Human made Caves, Hasankeyf
Herbert Frank

இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள். துருக்கியில் மக்களாட்சி சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி உண்மையிலேயே இருந்திருந்தால், இந்தப் பிரச்னைக்கு நியாயமான தீர்வு ஏதாவது கிடைத்திருக்கும். ஆனால், கிடைக்கவில்லை. அந்த மக்கள் விரைவில் ஹசன்கீஃபைக் காலி செய்தாக வேண்டும்.

அரசு காலக்கெடு விதித்துவிட்டதால், அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வரலாற்றுச் சின்னங்களுக்கு வருகை புரிந்து மிகுந்த மன வேதனையோடு அவற்றுக்குப் பிரியாவிடை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் அணையின் கதவுகள் திறக்கப்படும். அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக உயரும் நீர்மட்டத்தில் மூழ்கடிக்கப்படும். அதற்குள் அதன் வரலாறும் மூச்சுத் திணறிச் சாகும். ஆனால், அந்த மக்களின் குரல் ஓயவே ஓயாது. அவர்களைச் சுமந்த, மனித வரலாற்றைச் சுமந்த அந்த நகரத்தின் கதையைப் பிரசாரம் செய்துகொண்டேயிருப்பார்கள். அவர்களின் வலியை அடுத்த சந்ததிகளுக்குக் கடத்தி, மேலும் இத்தகைய அழிவுகள் நிகழாமல் தடுப்பார்கள். அவர்களுடைய இத்தனை ஆண்டுக்காலப் போராட்டம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், அது கொடுத்த அனுபவம் எதிர்காலப் போராட்டங்களில் அவர்களைத் தோற்க விடாது.

Tigris
Tigris
Hansm at wikivoyage
நாங்கள் சாகும்போது, எங்கள் குழந்தைகள் வருவார்கள். ஹசன்கீஃபைக் காப்பாற்ற வக்கில்லாத எங்கள் கல்லறைகளின் மீது காறித் துப்புவார்கள். அடுத்ததாக, அவர்களும் போராடக் களமிறங்குவார்கள். ஏனென்றால், அவர்கள் போராடத் துணிவில்லாதவர்களின் சந்ததியல்ல. துணிந்து போராடித் தோற்றுப் போனவர்களின் சந்ததி. உரிமைப் போராட்டத்தில் வெற்றியடைந்தே ஆகவேண்டுமென்ற வேட்கையோடு கிளம்பும் சந்ததி.
ஹசன்கீஃப் மக்கள்
“மேட்டூர் அணை வரலாற்றை டெல்டா மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்!”
அடுத்த கட்டுரைக்கு