Published:Updated:

அசாஞ்ச்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்த கோர்ட் உத்தரவு

லண்டன், பிப்.24,2011

அசாஞ்ச்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்த கோர்ட் உத்தரவு

ஸ்வீடனில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், விக்கிலீக்ஸ் நிறுனவர் ஜூலியன் அசாஞ்சை அந்நாட்டுக்கு அனுப்ப லண்டன் கோர்ட் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ##~~##

ஆப்கான், ஈராக் போர் தொடர்பான ஆவணங்களைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகங்களின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இது, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

விக்கிலீக்ஸின் விளைவுகளை உணர்ந்து, தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் நாட்டுக்கு நாடு தாவி நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் அசாஞ்சுக்கு வெகுவாக அடைக்கலம் கொடுத்த நாடு ஸ்வீடன்.

ஏனெனில், பத்திரிகையாளர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் ஸ்வீடனில் தான் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.

ஆப்கான் போர் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்ட பிறகே, அசாஞ்ச் மீது ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடரப்பட்டிருந்தது கவனத்துக்குரியது.

இந்தக் குற்றச்சாட்டு பதிவான போதே, தாம் எந்தப் பெண்ணையும் பலவந்தப்படுத்தியது இல்லை என்று அசாஞ்ச் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, இன்டர்போல் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் அசாஞ்சின் பெயர் இணைக்கப்பட்டது.

பின்னர், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசாஞ்சை கைது செய்வதற்கான புதிய உத்தரவை பிரிட்டன் போலீஸார் பெற்றனர்.

ஸ்வீடனில் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஐரோப்பிய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, ஜூலியன் அசாஞ்ச் கடந்த டிசம்பரில் லண்டன் போலீஸிடம் சரணடைந்தார்.

தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்று வாதிட்டு வந்த அசாஞ்ச் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிணைத் தொகையாக 3,80,000 டாலர்கள் செலுத்தப்பட்டது.

இந்தப் பிணைத் தொகை, உலகம் தழுவிய அளவில் அசாஞ்சின் ஆதரவாளர்களிடம் இருந்து திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விக்கிலீக்ஸ் நிறுனவர் ஜூலியன் அசாஞ்சை அந்நாட்டுக்கு அனுப்ப லண்டன் கோர்ட் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தன் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து வரும் அசாஞ்ச், மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

அடுத்த கட்டுரைக்கு