Election bannerElection banner
Published:Updated:

''இந்த இடம் நம் மரணத்தை விரும்புகிறது!" - உலகின் ஆபத்தான கடல் வழிப் பயணம் செய்த குழுவின் நிஜக்கதை

''இந்த இடம் நம் மரணத்தை விரும்புகிறது!" -  உலகின் ஆபத்தான கடல் வழிப் பயணம் செய்த குழுவின் நிஜக்கதை
''இந்த இடம் நம் மரணத்தை விரும்புகிறது!" - உலகின் ஆபத்தான கடல் வழிப் பயணம் செய்த குழுவின் நிஜக்கதை

இந்த வழியை மட்டும் கண்டறிந்து விட்டால், ஆசிய நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நூற்றாண்டுகள் காலக் கனவை நிஜமாக்க முடியும் என்று ஐரோப்பியர்கள் போராடினர். பலர் தோல்வி அடைந்தனர்.

பாய்மரங்களை விரித்து, திசைக்காட்டியின் வழிகாட்டுதல்படி நிகழ்ந்த அந்தக் கால கடல் பயணங்கள், நிச்சயம் இப்போதைய பயணங்களை விடவும், சுவாரஸ்யம் மிக்க ஒன்றாகவே இருந்திருக்கும். அதுவும், 19-ம் நூற்றாண்டில் கடல் வழிப் பயணங்கள் என்பது எப்போதும் சாகசங்கள் நிரம்பியவை. மாலுமிகள் மற்றும் சாகசத்தை விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் பலர், அதுவரை மனிதன் சென்று திரும்பாத கடல் வழிப்பாதைகளில் தங்கள் கப்பல்களைச் செலுத்த மிகுந்த ஆர்வம் காட்டினர்.

அப்போது, ஐரோப்பாவைச் சார்ந்த, கடல் வழிப்பாதைகள் குறித்து ஆய்வு செய்யும் பலருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய கடல் பாதை ஒன்று உண்டு. அது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஆர்டிக் பெருங்கடல் வழியே பசிபிக் பெருங்கடலை அடைவது. உலகிலேயே மிக ஆபத்தான பாதையாக கருதப்பட்ட இந்த வழித்தடத்தின் பெயர் 'வடமேற்குப் பாதை' (Northwest Passage). ஐரோப்பாவின் வடக்கு அட்லாண்டிக் முனையில் துவங்கி, ஆர்டிக் பெருங்கடலைத் தொட்டு, வட அமெரிக்காவின் வடக்கு கடற்கரை வழியே, கனடாவுக்கு மேலுள்ள குட்டித் தீவுகள் (Canadian Arctic Archipelago) வழியே புகுந்து வெளியேறி பசிபிக் பெருங்கடலை அடைய வேண்டும்.

இந்த வழியை மட்டும் கண்டறிந்து விட்டால், ஆசிய நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நூற்றாண்டுகள் காலக் கனவை நிஜமாக்க முடியும் என்று ஐரோப்பியர்கள் போராடினர். பலர் தோல்வி அடைந்தனர், உயிரை விட்டனர், காரணம், அந்த வழிப்பாதை அப்படி! மிதந்து கொண்டிருக்கும் பனிக்கட்டிகளாலான பாதை அது. சிறிது கவனம் சிதறினாலும், கப்பல் பனிக்கட்டிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு விடும். பின்பு, அங்கேயே உணவு தீரும் வரை இருந்துவிட்டுச் சாக வேண்டியதுதான். பனிக்கட்டிகள் உருகும் என்று கனவிலும்கூட நினைக்க முடியாது. இருந்தும் அந்த முயற்சி கைவிடப்படவே இல்லை. தொடர்ந்து முயற்சிகள், தொடர்ந்து தோல்விகள், துர்மரணங்கள், அதுவும் குழுவாக சென்று மரணித்தவர்கள் என்று அந்தப் பாதை பலரின் மரணத்தைக் கேட்டு பெற்றது. அப்படி அந்தப் பாதையில் நடந்த ஒரு நிகழ்வுதான் இது! மனிதர்கள் அரக்கர்கள் ஆன நிஜக்கதை...

1845-ம் ஆண்டு, மே மாதம். பிரிட்டிஷ் ராயல் நேவியின் இரண்டு பெரிய கப்பல்கள் HMS Terror மற்றும் HMS Erebus இரண்டும் அந்த வடமேற்கு கடல் பாதை வழியே தன் பயணத்தைத் தொடங்கின. இரண்டு கப்பல்களிலும் சேர்த்து 129 பேர் நம்பிக்கையுடன் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஒரு வருடத்துக்கும் மேலாக எந்தவித ஆபத்தும் இல்லாமல் பயணம் செய்த இரண்டு கப்பல்களும் அதுவரை யாரும் எட்டிவிடாத தூரத்தை அடைந்திருந்தன. இன்னும் 500 கிலோமீட்டர்கள் பயணித்தால் ஆர்க்டிக் பிரதேசத்தைக் கடந்து விடலாம். ஆனால், 1846-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒரு பெரும் பிரச்னையில் மாட்டிக் கொண்டன. கிங் வில்லியம் தீவு தாண்டி இரண்டும் பனிக்கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டன.

உள்ளே இருந்த அதிகாரிகள், வேலையாட்கள், மாலுமிகள் என அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டது. காரணம், குளிர் அவர்கள் எலும்புகள் வரை ஊடுருவி அவர்களைச் சீண்டியது. அப்போது அவர்கள் முன் இருந்தது ஒரே ஒரு வழிதான். உணவு தீரும் வரை கப்பலிலேயே கிடந்துவிட்டு, பின்பு உணவின்றி சாக வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் அதற்கு முன்பே குளிர் அவர்களைக் கொண்டு சென்று விடும். எப்படியும் மரண தேவி அவர்களை ஆட்கொள்ளப் போகிறாள் என்பது மாற்ற முடியாத ஒன்றாகிப் போயிருந்தது. இதுவரை அங்கே மாட்டிக் கொண்டவர்கள் அப்படித்தானே இறந்து போயிருந்தார்கள்! அப்போதுதான், இதுவரை யாரும் எடுக்காத ஒரு முடிவை இந்தப் பிரிட்டிஷ் கப்பல்களைச் சேர்ந்த சிலர் எடுக்க முன்வந்தனர். ஆனால், இந்த முடிவால் அவர்களுக்கு அதைவிட கொடூரமான விதத்தில் மரணம் காத்திருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

1847-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி, அந்த ஆய்வுப் பயணத்தின் தலைவர் சார் ஜான் ஃபிராங்க்ளின் (Sir John Franklin) இறந்து போனார். கேப்டன் ஃபிரான்சிஸ் க்ரோஸியர் (Francis Crozier) தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நீண்ட காலமாக சென்றவர்கள் திரும்பாததால் அவர்களைத் தேடி மீட்புக் குழுக்கள் விரைந்தன. 1848-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 22-ம் தேதி இரண்டு கப்பல்களில் இருந்தவர்களும் அதைவிட்டு தைரியமாக வெளியேறினர். காரணம், ஏற்கெனவே அங்கே 24 பேர் இறந்து போயிருந்தனர். பனிக்கட்டிகளைச் சமாளிக்க ஸ்லேட்ஜ்கள் (Sledges) எனப்படும் சக்கரங்கள் இல்லாத வண்டிகள் செய்து அதன் மேல் பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் திட்டம், கனடாவின் வடமேற்குப் பகுதியில் ஏதோ ஒரு கடற்கரையை அடைவது. ஆனால், அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.

அவர்களுக்கு என்ன ஆனது, இந்தப் பயணத்தில் என்னென்ன துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள் என இந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் 'The Terror' (கப்பலின் பெயர்) எனும் ஆங்கிலத் தொடர் நமக்குப் பல கூடுதல் தகவல்களை சுவாரஸ்யமாக வழங்குகிறது. அது மட்டுமின்றி, அவர்களைத் தேடி சென்ற மீட்புப் படையினர் சேகரித்த தகவல்கள், தற்போது வரை, அவர்களைக் குறித்து ஆய்வு செய்ய சென்றவர்கள் கண்டறிந்த தகவல்கள் என அனைத்தையும் கனடாவின் வரலாற்று அருங்காட்சியகம் தன் இணையதளத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. அதற்கு 'Death in the ice' எனப் பெயர் வைத்திருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உயிரை உறைய வைப்பதாக இருக்கின்றன.

1850-ம் ஆண்டு, பனியில் முற்றிலும் உறைந்து போன மூன்று சடலங்கள் வட ஆர்க்டிக் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் நம் Terror மற்றும் Erebus கப்பல்களில் பயணம் செய்த குழுக்களை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. 1854-ம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த வரைபடம் தீட்டும் (Mapmaker) ஒருவர், அங்கு ஆய்வு செய்தும், அங்குள்ள Inuit இனப் பழங்குடி மக்களை விசாரித்தும் ஓர் அதிர்ச்சித் தகவலை முன்வைத்தார். ஒரு கட்டத்தில், இறக்கும் முன்பு, நம் கப்பல் பயணிகள் வேறு வழியின்றி, ஒருவரை ஒருவர் அடித்து நரமாமிசம் (Cannibalism) உண்டதாகத் தகவல் தெரிவித்தார். ஆனால், அதைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

அதன் பிறகு, 1859-ம் ஆண்டு, அதற்கு தெற்குப் பகுதியில் மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன. அவர்கள் அனைவரும் கனடாவை நோக்கி (தெற்கு) கால்நடையாகப் பயணித்தபோது, பசிக் கொடுமை வாட்டி எடுத்து இறந்து போயிருந்தனர். கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுப் பொருளாக இருந்த அந்த எலும்புகளுடன், 1980 மற்றும் 1990களில் அங்கிருந்த எடுக்கப்பட்ட மேலும் சில எலும்புகள் சேர்ந்துகொண்டன. ஒருவழியாக, கடந்த அக்டோபர் 2016-ம் ஆண்டு, ''ஆம், அவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து உண்டிருக்கிறார்கள். நரமாமிசம் சாப்பிடுபவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள்" என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.

ஆனால், இரண்டு கப்பல் நிறைய உணவுப் பொருள்கள் இருந்தும், அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கப்பல்களை விட்டு ஏன் பனியில் இறங்கினர் என்று இதுவரை யாருக்கும் புரியவே இல்லை. நீண்டகால கடல் வாசம், வைட்டமின் மற்றும் சத்து குறைபாடு போன்றவை உடல் ரீதியாகவும், பசியுடன் அங்குச் சுற்றிய மிருகங்கள், திகிலூட்டும் சுற்றுச்சூழல், இவை உளவியல் ரீதியாகவும் அவர்களைப் பாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் அந்த வடமேற்கு வழியே சென்று வெளியே வரப் பலர் விடாமல் முயற்சி செய்தனர். இந்த இரண்டு கப்பல்களை மீட்கச் சென்ற மீட்புக் குழு குறித்துக்கொண்ட தகவல்கள் மற்றும் மேலும் பல ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழியாக நார்வேவைச் சேர்ந்த ஆய்வாளர் ரோல்ட் அமுன்ட்சன் (Roald Amundsen) என்பவர் 1903 முதல் 1906 வரை கடல் பயணம் செய்து அந்த வழியைக் கண்டறிந்தார்.

மேலே குறிப்பிட்ட அந்த ஆங்கிலத் தொடரில், 1854-ம் ஆண்டு இரண்டு கப்பல்கள் பயணத்துக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு ஃபிரான்சிஸ் க்ரோஸியர் ஒரு வசனத்தைக் கூறுவார். ''இந்த இடம் நாம் மரணிக்க வேண்டும் என்றே விரும்புகிறது!"

இயற்கை சில இடங்களில், சில நேரங்களில் அப்படித்தான்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு