Published:Updated:

கொரோனா: ஆவேசத்தில் சீனா... அமெரிக்கச் செய்தியாளர்களுக்கு அதிரடித் தடை!

சீனாவில் செய்தியாளர்களுக்குத் தடை
சீனாவில் செய்தியாளர்களுக்குத் தடை

அமெரிக்கப் பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனங்களைச் சேர்ந்த 13 செய்தியாளர்கள் சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் முற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோவிட் 19 வைரஸை `சீன வைரஸ்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. அதேவேளையில், `2019- ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வுகானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் சீனாவில் அந்த வைரஸ் பரவ காரணமாக இருந்துள்ளனர்' என்று சீன அரசு குற்றம் சாட்டிள்ளது. அதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரிலிருந்துதான், கடந்த டிசம்பர் மாத்தில்கொரோனா பரவ ஆரம்பித்தது. தற்போது, உலக நாடுகள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தப் போராடிக்கொண்டிருக்கின்றன.

கொரோனா
கொரோனா

தற்போது, சீன அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவின் பாதிப்பு அங்கு குறைந்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. கொரோனா பாதிப்பிலிருந்து சீனாவும் வேகமாக மீண்டு வருகிறது. இந்தநிலையில், சீனாவில் பணியாற்றும் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் 13 பேரை அந்த நாட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவில் பணியாற்றி வந்த 60 சீனப் பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேற ட்ரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீன அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அமெரிக்கப் பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனங்களைச் சேர்ந்த 13 செய்தியாளர்கள் சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. `இந்தச் செய்தியாளர்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாக்கவு, ஹாங்காங் போன்ற பகுதிகளில் இருந்தும் பணியாற்றக் கூடாது' என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான `குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் எடிட்டர் ஹூ ஜிஜியான் கூறுகையில், ``சீனப் பத்திரிகையாளர்களுடன் மோதல் போக்கை அமெரிக்க அரசு கடைப்பிடித்தால், அமெரிக்க ஊடகங்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படும். சீனாவில் 29 அமெரிக்க ஊடகங்களின் பிரநிதிதிகள் உள்ளனர். அமெரிக்காவில் 19 சீன ஊடகங்களின் பிரதிநிதிகள்தான் உள்ளனர். இதனால், அமெரிக்க ஊடகங்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாகும்'' என்று எச்சரித்துள்ளார்.

ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்களை அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் வெளியிட்டதால்தான் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை எடிட்டர் டீன் பக்கெட் கூறுகையில், ``சீன அரசு மிகப் பெரிய தவறிழைத்துள்ளது. சீனப் பத்திகையாளர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது குறித்து சீன அரசு அமெரிக்க அரசுடன் பேசி இணக்கமான முடிவை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அமெரிக்கப் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்வதில் அர்த்தமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர்களில் `நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் ஏமி கின்னும் ஒருவர். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``நான் கொரோனா வைரஸ் பாதித்த வுகான் நகருக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து என் வாயிலாக உலகத்துடன் பேச விரும்பினர். தங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு சீன அரசுதான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினர். பல்வேறு மோசமான நினைவுகளுடன் இங்கிருந்து நான் வெளியேறுகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

செய்தியாளர்கள்
செய்தியாளர்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``எனக்கும் இந்த மூன்று பத்திரிகைகளுக்கும் நல்ல உறவு இருந்ததில்லை. இது சீனாவுக்கும் தெரியும். உலகமும் அறியும். அதற்காக இது போன்ற நடவடிக்கைகளை நான் விரும்பவில்லை'' என்று ட்ரம்ப் கண்டித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் 3, 245 பேர் பலியாகியிருக்கின்றனர். 70,420 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம்தான் கொரோனாவுக்குக் காரணமா? வைரஸ் வேட்டையர்களின் கணக்கு!
அடுத்த கட்டுரைக்கு