Published:Updated:

``குழந்தைகளைக் காப்பாற்ற நிலமென்ன கிராமத்தையே தர்றோம்!” - நெகிழ வைத்த தாய்லாந்து விவசாயிகள்

``குழந்தைகளைக் காப்பாற்ற நிலமென்ன கிராமத்தையே தர்றோம்!” - நெகிழ வைத்த தாய்லாந்து விவசாயிகள்
``குழந்தைகளைக் காப்பாற்ற நிலமென்ன கிராமத்தையே தர்றோம்!” - நெகிழ வைத்த தாய்லாந்து விவசாயிகள்

``வெள்ளம் எங்களுக்குப் புதிதல்ல. அதை நாங்கள் சமாளித்துக்கொள்வோம். ஆனால், அந்தக் குழந்தைகள்! பத்து நாள்களாகப் பட்டினி கிடக்கிறார்கள்."

"என்ன பயிர்களா, அதை நாங்கள் மீண்டும் வளர்த்துக்கொள்வோம். குழந்தைகள்தான் முக்கியம். அவர்களைக் காப்பாற்ற எங்கள் ஒட்டுமொத்த கிராமத்தையும் அழிக்க வேண்டுமென்றால்கூடப் பின்வாங்க மாட்டோம்."

தாய்லாந்தின் 11 - 16 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்கள் 12 பேரும் 25 வயதான அவர்களின் பயிற்சியாளரும் தாம் லு அங் குகைக்குள் சிக்கி 10 நாள்களாகியிருந்த சமயம். குழந்தைகளை மீட்க குகைக்குள்ளிருந்த நீரை வெளியேற்ற வேண்டியது கட்டாயம். அந்த அளவுக்கு அவர்களின் மீட்புப் பணி கடினமாகிப் போயிருந்தது. உலகின் சிறந்த டைவர்களால்கூட நீருக்குள் மூழ்கிச் செல்ல முடியவில்லை. அவர்கள் சென்று உள்ளே சிக்கியவர்களின் நிலையை அறிந்துவருவதே மிகவும் சிரமமாகியிருந்தது. தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு அடிக்கடி ஏற்படுவதுதான். ஆனால், குகையைச் சூழ்ந்த தண்ணீர் மழைநீராக மட்டுமின்றி சேரும் சகதியுமாகச் சூழ்ந்திருந்ததால் யாராலும் அதைக் கடந்து செல்ல முடியவில்லை.

குகை வாயிலிலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு மேடான பகுதியில் குழந்தைகளோடு அமர்ந்திருந்தார் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எகபோல் சந்தாவோங் (Ekapol Chanthawong).

Photo Courtesy: Billy Cooper

அவர்களை அணுகுவதற்கென இருந்தது ஒரே வழி குகையின் நுழைவாயில். ஆனால், குகை முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. அதுவும் முழுவதுமாக. அவர்கள் கடந்த 10 நாளாகப் பசியோடிருக்கிறார்கள். இருப்பினும் தப்பித்துவிடுவோமென்ற மன உறுதியோடும் நம்மைக் காப்பாற்ற வருவார்களென்ற நம்பிக்கையோடும் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற சர்வதேச அளவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதையும் செய்வதற்கு முதலில் குகையைச் சூழ்ந்திருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும். ஆனால், அது அருகிலிருக்கும் விவசாயக் கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கும். அதனால் அவர்களின் பயிர்கள் நாசமாகும். அவர்களின் இந்தாண்டு விளைச்சல் அனைத்துமே வீணாகும். தாம் லு அங் குகையைச் சுற்றி 5 சிறிய மாவட்டங்கள் உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. அது மொத்தமும் பாதிக்கப்படும்.

மொத்த மனித இனத்துக்கும் உணவழிப்பவர்கள் விவசாயிகள். உயிரின் மதிப்பை அவர்களைவிட அறிந்தவர்கள் யாரும் இருப்பார்களா! 
"வெள்ளம் எங்களுக்குப் புதிதல்ல. அதை நாங்கள் சமாளித்துக் கொள்வோம். ஆனால், அந்தக் குழந்தைகள்! 10 நாள்களாகப் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வாருங்கள். எங்கள் கையால் அவர்களின் பசிதீர்க்க வேண்டும். அதைவிட எங்கள் விளைச்சல்கள் பெரிதல்ல."

19 உயர்தர நீர் வெளியேற்ற மோட்டார்கள் அமைத்துப் பம்புகளால் குகை நீரை வெளியேற்றிக்கொண்டிருந்தனர் தீயணைப்பு வீரர்கள். இருப்பினும் அவர்களால் ஒரு மணிநேரத்துக்கு 1 செ.மீ என்ற அளவில்தான் வெளியேற்ற முடிந்தது. தொடர்ச்சியான முயற்சியால் நீரை அருகிலிருந்த விவசாய நிலங்களுக்குள் வெளியேற்றினார்கள். மீட்புக் குழு தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். குழந்தைகளை ஒவ்வொருவராக மீட்கத் தொடங்கினர்.

Photo Courtesy: AFP

12.8 கோடி லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தின் அளவிலிருக்கும் 50 நீச்சல் குளங்களை நிரப்புவதற்குத் தேவையான மொத்த நீரையும் விவசாய நிலத்தில் வெளியேற்றியுள்ளனர். தங்கள் பயிர்கள் குகை நீரால் நாசமாவதைப் புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர் விவசாயிகள். அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது பயிர்களின் அழிவல்ல. குழந்தைகளை மீட்பதற்குக் கிடைத்த வழி.

தனது 5 ஏக்கர் நிலத்தை இழந்தவர் புவா சாயிசெ உன் (Bua Chaicheun). அவரது நிலம் அழிந்துகொண்டிருந்தபோது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீ டைவர்கள், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், குகை ஆராய்ச்சிக் குழு போன்ற பல நூறு பேருக்கும் உணவளித்துக் கொண்டிருந்தார்.

குழந்தைகளை மீட்பதற்காக நீரை வெளியேற்றிக்கொண்டிருந்தவர்களோடு மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார் விவசாயி லேக். அவரது 20 ஹெக்டேர் நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அவரது 100 வாத்துகளைக் காணவில்லை. இருப்பினும் தனது நஷ்டங்களைப் புறந்தள்ளிவிட்டுக் குழந்தைகளை மீட்கப் போராடிக்கொண்டிருக்கிறார். விவசாயிகளென்றாலே அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் நிறைந்தவர்கள். அதனால்தான் எத்தனை சிரமங்களை, வேதனைகளைச் சந்தித்தாலும் உணவளிக்கும் உழவுத் தொழிலை விட்டுக்கொடுக்க முடிவதில்லை. தாய்லாந்து விவசாயிகள் இன்று அத்தகைய உழவுத் தொழிலையே தியாகம் செய்துள்ளனர். அந்த 13 உயிர்களின் மீட்புப்போரில் வெல்வதற்காக.

விவசாயிகளால் சக உயிர்களைக் காப்பாற்றப் போராடும் அரசாங்கத்துக்காகத் தங்கள் நிலங்களை இழக்கவும் தெரியும். சக உயிர்களை அழிக்கத் துணிவுள்ள அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றவும் தெரியும்.

லேக் போலவே தங்கள் ஆயிரக்கணக்கான பயிர்களை இழந்த விவசாயிகள் அனைவரும் வேண்டிக்கொள்வது ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையெல்லாம் குழந்தைகளை மீட்க வேண்டும். பாதுகாப்பாக மீட்க வேண்டும். அதற்காக அவர்கள் செய்துள்ள இந்த மகத்தான தியாகத்தின் பலனாகக் குழந்தைகள் 12 பேரும் அவர்களின் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

"ஒப்புக்கொள்கிறோம். எங்கள் நிலம் பாழடைந்துவிட்டது. எங்கள் உழைப்பும் அதனால் விளைந்த பயிர்களும் நாசமடைந்துவிட்டன. ஆனால், குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டோம். இனி நான் என் நிலத்தில் வேலையைத் தொடங்குவேன். மீண்டும் அதை என்னால் சரிசெய்துகொள்ள முடியும். மீண்டுவந்த குழந்தைகளைக் கண்ட பெற்றோரின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரே போதும், மீண்டும் உழைக்க எங்களை உத்வேகப் படுத்துவதற்கு."

எந்த நாடாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் விவசாயிகளின் உணர்வு ஒன்றுதான். அது மனித இனத்தையும் பூமியையும் வாழ வைப்பது.

அடுத்த கட்டுரைக்கு