Published:Updated:

ரஷ்ய சிறையில் இருக்கும் உக்ரேனிய திரைப்பட இயக்குநருக்கு கருத்து சுதந்திரத்திற்கான விருது! #SakharovPrize

ரஷ்ய சிறையில் இருக்கும் உக்ரேனிய திரைப்பட இயக்குநருக்கு கருத்து சுதந்திரத்திற்கான விருது! #SakharovPrize
ரஷ்ய சிறையில் இருக்கும் உக்ரேனிய திரைப்பட இயக்குநருக்கு கருத்து சுதந்திரத்திற்கான விருது! #SakharovPrize

ஐரோப்பியப் பாராளுமன்றம், கடந்த 30 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள மனித உரிமைப் போராளிகளுக்கு கருத்து சுதந்திரத்திற்கான சஹாரோவ் விருது வழங்கிவருகிறது. இந்த விருதை 2018 -ம் ஆண்டு ரஷ்யச் சிறையில் உள்ள உக்ரேனிய திரைப்பட இயக்குநர், ஒலெக் செண்ஸ்டாவ் என்பவருக்கு வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான எல்லைப் போர் நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கிறது. இதில் 2014 -ம் ஆண்டு, உக்ரைன் எல்லைப் பகுதிக்கு உள்பட்ட கிரிமியா நாட்டில் போராட்டம் வெடித்தது. அப்போது, ரஷ்யா தனது ராணுவத்தை அந்நாட்டிற்குள் அனுப்பி, கிரிமியா நாட்டைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. இதற்கு சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு இருந்துவந்தது.

ரஷ்யாவுடன் கிரிமியா நாடு இணைக்கப்பட்டவுடன், கிரிமியா நாட்டின் சில முக்கிய நகரங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒலெக் செண்ஸ்டாவ் கைதுசெய்யப்பட்டார். அதற்காக, அவருக்கு 20  ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ரஷ்யா கிரிமியாவை கைப்பற்றியதை எதிர்த்து அவர் குரல்கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டார் எனப் பல உலக நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அவரும் தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு முழுவதுமாக மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம், ரஷ்யச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து உக்ரேனிய அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். இதையடுத்து, அவருக்கு ஊசிமூலம் திரவ உணவு கட்டாயமாக உடலுக்குள் செலுத்தப்பட்டுவந்தது. ஆனால், 144  தினங்களுக்கு பின்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டம், உடல்நிலை சீர்கேட்டால் தோல்வியில் முடிந்தது. அதுவே அவரை உலகில் உல்ல அரசியல் கைதிகளுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக மாற்றியது.

இந்நிலையில், மனித உரிமைக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடிய ஒலெக்கிற்கு, இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான சஹாரோவ் விருது வழங்கப்பட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இதை ரஷியாவுக்கு எதிரான ஒரு உறுதியான அரசியல் நிலைப்பாடு என்றே பலர் கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விருது அறிவிப்பின்போது பேசிய ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் அன்டோனியோ தஜானி, "இது மாஸ்கோவுக்கு நாங்கள் விடுக்கும் செய்தி. நாங்கள் உறுதியாக ஒலெக் சென்ஸ்டோவிற்கு துணை நிற்கிறோம். அவரது போராட்டம், உலகம் முழுவதிலும் நாம் மனித உரிமைப் போராட்டங்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் துணை நிற்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது" என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் இந்த சஹாரோவ் விருதை, நோபல் அமைதிப் பரிசை  வென்ற  நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூ கி, மலாலா யூசஃப்சாய் ஆகியோர் வாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைக்காக ஒரு குரல் உரத்து ஒலிப்பதும், சிறைக் கம்பிகளுக்குள் அந்தக் குரல் முடக்கப்படுவதும், நிகழ்ந்துகொண்டே இருப்பது தான் இன்றைய அரசியல். இந்தச் சூழ்நிலையில், இப்படி போராளிகளுக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரங்களே, உலகின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையாக இருக்கின்றன. மாற்றத்திற்கு விதைகளாக இருக்கும் போராளிகளின் உறுதிக்கு உரம் சேர்ப்பவை இந்த விருதுகள் என்பதே உண்மை.