வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு... பெண்கள் உலகம் நிவேதிதா லூயிஸ்

பெண்ணின் மரணத்தால் மாறும் சட்டம்!

திக அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் அயர்லாந்தில், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை இல்லை. ஆபத்தான கருச்சிதைவு, வன்புணர்வு போன்ற காரணங்களால்கூட கருக்கலைப்பு செய்துகொள்ள அங்குள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை.

14 நாள்கள்

இப்போது இதில் மாபெரும் மாற்றம்.காரணம்... இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவீதா ஹாலப்பனவர்.

2012-ல், நான்கு மாத கர்ப்பிணியான சவீதாவுக்கு அயர்லாந்து நாட்டில் கருச்சிதைவு நிகழ, பலமுறை கோரியும் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக `செப்டிசிமியா' என்ற நோய்த்தொற்று ஏற்பட்டு, 31 வயதில் அகால மரணம் அடைந்தார் சவீதா. இவரின் மரணத்துக்குப் பின் கருக்கலைப்புத் தடை சட்டத்தை ரத்து செய்யக் கோரி அயர்லாந்து நாட்டில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். பிரதமரும் நாடாளுமன்றமும் சட்டத்தை நீக்க பொது வாக்கெடுப்புக்கு இசைவு தர, அதில் மூன்றுக்கு இரண்டு பங்கு வாக்குகள் பெற்றதால், கருக்கலைப்புக்கு எதிரான சட்ட வரைவை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது அயர்லாந்து குடியரசு.

பெண் உடல் மீதான உரிமை அவளுக்கே!

பிஞ்சுக் குழந்தைகள் நலம்நாடும் பிரியங்கா சோப்ரா!

.நா சபையின் யுனிசெஃப் குழந்தைகள் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள் வசிக்கும் காக்ஸ் பஜார் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருக்கும் இந்த முகாமில் மிகக் கடினமான சூழலில் வசிக்கும் குழந்தைகளைச் சந்தித்த பிரியங்கா, ஏழு லட்சம் ரோஹிங்கியா அகதிகளில் 60% பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் வாழும் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் படங்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்தக் குழந்தைகளில் பலர் பள்ளிக்குச் செல்வது இதுவே முதன்முறை என்கிற அவர், மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.

14 நாள்கள்

`உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் இவர்கள் கல்வி, தங்க ஓரிடம் கைக்கெட்டினாலும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறையே தன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளது. சிரிப்பையும் தாண்டி அவர்கள் கண்களில் வெறுமையே காண்கிறேன்’ என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.

இதற்கிடையே, பா.ஜ.க எம்.பி வினய் கத்தியார், `ரோஹிங்கியா அகதிகளைப் பிரியங்கா சந்தித்தது தவறு. அவர்களுடன் தொடர்புகொண்ட எவருக்கும் இந்தியாவில் இடம் இல்லை' என்று காட்டமாகக் கருத்து கூறியிருக்கிறார். பிரியங்காவோ இந்தக் கருத்துக்குப் பதில் எதுவும் கூறாமல் அந்தக் குழந்தைகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்யும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

லவ் யூ... பிரியங்கா!

தன்னம்பிக்கை விதைக்கும் டென்னிஸ் தாரகை!

டந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பட்டத்தைத் தட்டிச் சென்றபோதே, தான் கருவுற்று இருப்பதாக அறிவித்தார் முதல் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ். தற்காலிகமாக டென்னிஸ் விளையாடுவதிலிருந்து ஓய்வும் பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செரீனா, மே மாத இறுதியில் தொடங்கிய இந்த ஆண்டின் பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்றார். ரத்தம் கட்டுவதைத் தவிர்ப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கறுப்பு நிற `கேட்-சூட்’ ஆடை அணிந்து, கிரிஸ்டினா பிலிஸ்கோவாவை எதிர்த்து விளையாடி வென்றார். வெற்றிக்குப் பின் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த செரீனா, தான் போட்டியில் விளையாடுவதை, பெண்களையும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே கருதுவதாகத் தெரிவித்தார். `பிளாக் பாந்தர்’ திரைப்படத்தில் வரும் கற்பனை நாடான வகாண்டாவால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட `கேட்-சூட்’டை அணிந்ததாகத் தெரிவித்த செரீனா, ஒரு போர் வீராங்கனையாகவே தன்னைக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

14 நாள்கள்

`நான் எப்போதும் ஒரு கற்பனை உலகத்திலேயே வாழ்கிறேன்; ஒரு சூப்பர் ஹீரோவாகும் ஆர்வம் எப்போதும் எனக்குள் இருந்தது. சூப்பர் ஹீரோவாகவே வாழவும் செய்கிறேன். இதுபோன்ற ஆடை எனக்குள் அந்தக் கனவை அணையாமல் வைத்திருக்கிறது' என்றும் கூறினார். குழந்தை அலெக்ஸிஸ் ஒலிம்பியா பிறக்கும்போது தான் செத்துப் பிழைத்ததாகவும் செரீனா முன்னர் பதிவு செய்திருந்தார். நான்காம் சுற்று வரை முன்னேறிய செரீனாவின் உடல்நிலை அதற்கு மேல் இடம் கொடுக்காததால், மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடும் நான்காம் சுற்றுப் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். பல்மனரி தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டபோதும், தங்கை வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாடினார் செரீனா. முழுவதுமாக போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும்கூட, கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்துச் சென்றிருக்கிறார் செரீனா.

செமையா கலக்கிடீங்க செரீனா!

நெகிழவைத்த போட்டோ ஷூட்!

மெரிக்காவின் பைன்ஹர்ஸ்ட் நகரைச் சேர்ந்தவர் பிரிட்டானி கிறிஸ். இவரின் கணவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்துவந்த கிறிஸ் ஹாரிஸ். கடந்த 2016-ம் ஆண்டு இவர்கள் ஆஷ்வில் நதிக்கரையில் திருமணம் செய்துகொண்டார்கள். அதன்பின் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சிறப்புப்பணிக்காக அனுப்பப்பட்டார் ஹாரிஸ். அவர் அங்கு சென்ற ஒரு வாரத்தில் தந்தையாகப் போகும் செய்தியைக் கணவருக்கு அறிவித்தார் பிரிட்டானி. மகிழ்ச்சியில் திளைத்திருந்த பிரிட்டானிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சில நாள்களிலேயே படைப்பிரிவின் மீது நடந்த திடீர்த் தாக்குதலில் ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார் ஹாரிஸ். தனித்து விடப்பட்ட பிரிட்டானியைத் தாங்கிக்கொண்டனர் அவரின் கணவருடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள். பிறக்கப்போவது பெண் குழந்தை என்பதை சிறப்பு அனுமதி பெற்று அறிந்த வீரர்கள், பிரிட்டானிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகநூல் காணொளி மூலம் அறிவித்தார்கள்.

14 நாள்கள்

திருமணம் செய்துகொண்ட ஆஷ்வில் நதிக்கரையில், தன் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டை தனியே நின்று செய்துகொண்டார் பிரிட்டானி. அந்தப் படங்கள் இணையத்தில் வெளிவந்தன. மார்ச் 17 அன்று கிறிஸ்டியன் மிஷேல் ஹாரிஸ் என்ற அழகிய பெண் குழந்தைக்குத் தாயானார் பிரிட்டானி. நண்பனின் குழந்தையைக் கொஞ்சுவதற்குச் சமீபத்தில் நாடு திரும்பினர் நேதன் பாக்லி உள்ளிட்ட ஹாரிஸின் நண்பர்கள். தந்தையின் இருபது நண்பர்கள் புடைசூழ குழந்தை கிறிஸ்டியனின் முதல் போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது. முழு ராணுவ உடையில், கைகளில் நீலக் கண்கள் ஒளிரும் குழந்தை கிறிஸ்டியனைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் படைவீரர்களின் போட்டோ ஷூட் புகைப்படங்களைக் கண்டு வியந்து நிற்கிறது அமெரிக்கா.

மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்!

நான்கு வயது சுட்டி எழுத்தாளர்!

யன் கொகோய் கோஹெயின். நான்கு வயதான இந்த சுட்டிப் பையன்தான் இந்தியாவின் மிக இளம் வயது எழுத்தாளர். `ஹனிகோம்ப்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கும் அயனின் இந்தச் சாதனையை அங்கீகரித்திருக்கிறது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ். அசாம் மாநிலத்தின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அயன், ப்ரீ-ஸ்கூல் மாணவன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், 30 வாசகங்களும், அவற்றுக்கான விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு வயதிலேயே வரையத் தொடங்கிய அயன், மூன்று வயதில் தானாகவே கதைகள் புனைந்து சொல்லும் ஆற்றலைப் பெற்றான். தன் தாத்தா பாட்டியுடன் வசிக்கும் அயன், `என்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்தே நான் எழுதுகிறேன். தாத்தாவுடன் நான் பேசுவது, என் மனதுக்குத் தோன்றுவது, இப்படி எதுவானாலும்…' என்கிறான்.

14 நாள்கள்

அயனின் பெற்றோர் மிசோரம் மாநிலத்தில் தனியாக வசிக்கிறார்கள். `என் தாத்தாதான் என் கதைசொல்லி, ராக்ஸ்டார், என் பெஸ்ட் ஃப்ரெண்டு எல்லாம்' என்கிறான் அயன். 250 ரூபாய்க்கு விற்கப்படும் ஹனிகோம்ப் புத்தகத்தின் அட்டைப்படம்கூட, தன் பேரன் வடிவமைத்ததுதான் என்று பெருமிதம் பொங்கக் கூறுகிறார் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தாத்தா பூர்ணகாந்த் கொகோய். அமெரிக்க எழுத்தாளர் ஜோன் லியோட்டா, `எந்த வயதினரையும் அயனின் புத்தகம் கவரும்' என்கிறார்.

சூப்பர்... சுட்டி குட்டி!