Published:Updated:

`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்!' - 6வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்

`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்!' - 6வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்
`உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் பட்டியல்!' - 6வது இடத்தில் திருப்பூர்; திருச்சிக்கு 8வது இடம்

பொருளாதாரரீதியில் உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. ஆக்ஸ்போர்டு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களையும் இந்திய நகரங்களே இடம்பிடித்திருக்கின்றன. 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனம் வரும் 2035-ம் ஆண்டுவாக்கில் பொருளாதாரரீதியில் வளர்ந்துவரும் உலகின் முதல் 10 நகரங்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு `global cities research’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. குஜராத்தின் வைர நகரான சூரத் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. 2019-2035-ம் ஆண்டு இடைவெளியில் இந்த நகரின் சராசரி வருடாந்திர வளர்ச்சி 9.17 சதவிகிதமாக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. ஆக்ரா இரண்டாவது இடத்தையும், பெங்களூரு 3வது இடத்தையும் அந்தப் பட்டியலில் பிடித்திருக்கின்றன. 

உலகின் வேகமாக வளர்ந்துவரும் நகரங்களுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஆண்டு வளர்ச்சி 8.36 சதவிகிதத்துடன் திருப்பூர் 6வது இடத்தையும், 8.29 சதவிகித வளர்ச்சியுடன் 8-வது இடத்தை திருச்சியும், 8.17 சதவிகித ஆண்டு சராசரி வளர்ச்சியுடன் சென்னை 9வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. 

அதேபோல், 2035-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நகரங்கள் (ஜி.டி.பி வளர்ச்சி அடிப்படையில்) டாப் 10 பட்டியலில் சீனாவைச் சேர்ந்த 4 நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம் பிடித்திருக்கிறது. ஜப்பானின் டோக்கியோ நகரம் இரண்டாவது இடத்தையும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இங்கிலாந்தின் லண்டன், சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங், பிரான்ஸின் பாரீஸ், அமெரிக்காவின் சிகாகோ, சீனாவின் குவான்ஜூ, ஷென்ஷென் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றன. வேகமாக வளர்ந்துவரும் ஆப்பிரிக்க நகராக தான்சானியாவின் கடற்கரை நகரமாக டார் எஸ் சாலாமும், ஐரோப்பா கண்டத்தின் வேகமாக வளரும் நகரமாக அர்மீனியாவின் தலைநகர் யீரீவனும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. வட அமெரிக்காவைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்துவரும்  நகரமாக சான் ஜோஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.