Published:Updated:

பிழைப்பு தேடி ஊடுருவும் வங்கதேசத்தினர்..! - என்ன நடக்கிறது திருப்பூரில் !

கடந்த சில நாள்களாகவே திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச இளைஞர்கள் குறித்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது திருப்பூர் காவல்துறை

பிழைப்பு தேடி ஊடுருவும் வங்கதேசத்தினர்..! - என்ன நடக்கிறது திருப்பூரில் !
பிழைப்பு தேடி ஊடுருவும் வங்கதேசத்தினர்..! - என்ன நடக்கிறது திருப்பூரில் !

பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லாமல் திருப்பூரில் தங்கி, பனியன் நிறுவனங்களில் வேலைபார்த்து வந்த வங்கதேசத்தினர் 14 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்தக் கைது  படலத்தால் திருப்பூர் மாநகரமே குலுங்கிக் கிடக்கிறது.

``கடந்தவாரத்தில், டிசம்பர் 8-ம் தேதியன்று திருப்பூர் மாநகரக் காவல்துறைக்குத் தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது, சிறுபூலுவப் பட்டி என்ற பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கியிருக்கிறர்கள். அவர்களிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்தவிதமான ஆவணங்களும் இல்லை என்பதே அந்தத் தகவல். தகவலை உறுதி செய்வதற்காக அப்பகுதி காவல்துறையினர், உடனடியாகச் சிறுபூலுவப்பட்டிக்குச் சென்று, தீவிர சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் ரஷிஷ் மற்றும் சபுஷ் ஆகிய 2 வங்கதேச இளைஞர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, அதே பகுதியில் வங்கதேசத்தினர் மேலும் பலர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனால் சிறுபூலுவப்பட்டி பகுதி முழுவதும் தீவிரக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது.

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் மனோகரன் உத்தரவின் பேரில், உடனடியாக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் அப்பகுதியில் வடமாநிலத்தவர் தங்கியிருக்கும் குடியிருப்புகள், அங்கு செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மிகத் தீவிரமாகத் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் 12 பேர் காவல்துறையிடம் சிக்கினார்கள். பஜ்லுல் ஹக், முகமது ரோனி ஷேக் உட்பட அந்த 12 பேரும் வங்கதேசத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து, ரயில் மூலம் திருப்பூருக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் இயங்கி வரும் வெவ்வேறு பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துவந்த அவர்கள் மீது எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்றக் கூலிவேலை செய்து பிழைக்கும் நோக்கத்தோடுதான் திருப்பூருக்கு வந்திருக்கிறார்கள். இருப்பினும் சட்ட வழிமுறைகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படாததால், அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைப் புழல் சிறையில் அடைத்தனர். சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கியிருந்த வெளிநாட்டினர் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல என்றாலும், அதில் பெரும்பாலும் நைஜீரியர்கள்தாம் மாட்டுவார்கள். ஆனால், சமீபகாலமாக வங்கதேசத்து இளைஞர்கள் சிக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது.

திருப்பூரில் உள்ள பின்னலாடைத்துறை அமைப்பு நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ``வங்கதேசம் முழுவதிலும் பின்னலாடைத் தொழில்தான் அதிகம். இந்தத் துறையில் இந்தியாவின் மிகமுக்கியமான போட்டி நாடும் வங்கதேசம்தான். ஆனால் இந்தியாவோடு ஒப்பிடுகையில் அங்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிகவும் சொற்பமே. அதனால்தான் வங்கதேசத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் தொழிலைக் கற்றுக்கொண்டு, இந்தியாவில் திருப்பூருக்குச் சென்று பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்த்தால் அதிகளவு வருமானத்தை ஈட்டலாம் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து பலரும் திருப்பூருக்குப் படையெடுக்கிறார்கள். புவியியல் ரீதியாக அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு எளிதாகவே அமைந்துவிடுகிறது. வங்கதேச மக்களுக்கும், நம் மேற்கு வங்க மக்களுக்கும் இடையே மொழி, உணவு, கலாசாரம் எனப் பெரிதாக எந்தவித வித்தியாசமும் பார்க்கமுடியாது. திருப்பூரில் உள்ள வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கைக்கு மத்தியில் வங்கதேச ஆட்களை மட்டும் அடையாளம் காண்பது சற்றுக் கடினமான காரியம்தான். இதுபோன்ற ஏதாவது ஆவண சோதனைகளில்தான் அவர்கள் சிக்குவார்கள். அப்போதுதான் எங்களுக்கே தெரிகிறது" என்றனர்.

தொடரும் வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து உளவுத்துறையில் பணியாற்றும் சிலரிடம் பேசினோம், ``மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள `24 பர்ஹானாஸ்' மாவட்டம் வங்கதேசத்தையொட்டியிருக்கும் இந்திய எல்லைப் பகுதி. வங்கதேசத்தினர் அங்குள்ள ஒரு ஆற்றைக் கடந்து வந்தால்போதும். எளிதாக இந்த மாவட்டத்துக்குள் நுழைந்துவிடலாம். இது வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. வெறும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு எல்லாம் கள்ளத் தோணி மூலம் ஆள்களைக் கூட்டிவர இருபக்கமும் சிலர் இருக்கிறார்கள். இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் அங்குள்ள ஏஜென்டுகள் மூலம் மேற்குவங்க முகவரியில் போலியான ஒரு ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒரு ஆவணத்தைத் தயார் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். பின்னர் அதை வைத்துக்கொண்டு ரயில் மூலம் திருப்பூருக்கு வந்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் திருப்பூரிலேயே போலி ஆதார் அட்டைகள் தயாரித்துக் கொடுக்க கும்பல் இருக்கிறது" என்றார்கள்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் 25 - 30  வயது இளைஞர்களே அதிகம். அதேபோல கடந்த அக்டோபர் மாதமும் 8 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் தங்கியிருந்து, சொந்தமாக மளிகைக் கடை நடத்தும் அளவுக்கு செட்டில் ஆகிவிட்டார். அதுபோக கடந்த வருடம் அவிநாசியைச் சேர்ந்த பூர்ணாதேவி என்ற தமிழ்ப் பெண்ணைக் காதலித்து, அவரை யாருக்கும் தெரியாமல் இங்கிருந்து வங்கதேசத்துக்கே அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியுள்ளார் அந்த நபர். பிறகு அந்தப்பெண் மர்மமான முறையில் அங்கே உயிரிழந்த துயரச் சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் இங்கு சட்டவிரோதமாகத் தங்கியிருந்து கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் மீது எந்தவிதமான தீவிரவாதப் பின்னணியும் இல்லை என்றாலும், எந்தவித உரிய ஆவணங்களும் இல்லாமல், தேசத்தின் ஏதோவொரு மூலையில் ஊடுருவி, தமிழகம்வரை பயணித்து திருப்பூரில் தங்கியிருக்கிறார்கள் என்றால் தமிழகம் உட்பட நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.