Published:Updated:

`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்!’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018

`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்!’ - நெகிழ வைத்த  பிரபஞ்ச அழகி #MissUniverse2018
`குடிசை வாழ் குழந்தைகளின் சிரிப்பில் பேரழகைப் பார்த்தேன்!’ - நெகிழ வைத்த பிரபஞ்ச அழகி #MissUniverse2018

இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி தாய்லாந்தின் நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் என்ற நகரில் நேற்று மாலை நடைபெற்றது. வெறும் 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாய்லாந்தில் இந்த அழகிப் போட்டி நடைபெற்றது. 94 நாடுகளைச் சேர்ந்த 92 அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற நேஹல் சுடாசமா அரையிறுதி சுற்றுக்கு முன்னரே போட்டியில் இருந்து வெளியேறினார். 

நேற்று நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிலிபைன்ஸை சேர்ந்த கேட்ரியோனா எலிஷா க்ரே (Catriona Elisa Gray ) பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். இரண்டாவது இடத்தை தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பெண்ணும் மூன்றாவது இடத்தை வெனிசுலாவைச் சேர்ந்த அழகிகளும் தட்டிச் சென்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிரபஞ்ச அழகி க்ரே அங்கிருந்த பார்வையாளர்கள் மனதைக் கொள்ளையடித்துவிட்டார் என்றே கூற வேண்டும். அவர் அணிந்திருந்த சிவப்பு நிற உடை, மிடுக்கான நடை, கம்பீரத் தோற்றம் போன்றவை அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அதிலும் இறுதிச் சுற்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு க்ரே அளித்த பதில் அங்கிருந்த மதிப்பிடுபவர்கள் (judges) மட்டுமல்லாது பொதுமக்களையும் வெகுவாக ஈர்த்திருந்தது. 

நீங்கள் உங்கள் வாழ்வில் கற்றுக்கொண்ட மிக முக்கிய பாடம் எது? அதை எவ்வாறு பிரபஞ்ச அழகிப் போட்டிக்குப் பயன்படுத்தினீர்கள்? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ``நான் மனிலாவின் குடிசைப் பகுதிகளில் அதிகம் வேலை செய்துள்ளேன். அங்குள்ளவர்கள் வறுமையிலும் சோகத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வறுமையை நினைத்து வாடவில்லை. அவர்கள் முகங்களில் உண்மையான சந்தோஷத்தைப் பார்த்தேன். அதில்தான் அழகு உள்ளது என நான் நம்புகிறேன். அங்குள்ள குழந்தைகள் முகத்தில் இருந்த சிரிப்பில் பேரழகைப் பார்த்துள்ளேன். அதே மனநிலையுடன்தான் இந்தப் பிரபஞ்ச அழகிப் போட்டியையும் பார்க்கிறேன். அனைத்து எதிர்மறையான விஷயங்களிலும் ஓர் நேர்மறை உள்ளது” என தெரிவித்தார். இவரின் பதில் அனைவரையும் கவர்ந்தது. 

பிறகு கேட்ரியோனா க்ரேவுக்கு 2017-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட தென் ஆப்ரிகாவைச் சேர்ந்த டெமி லெய்ஹ் மகுடம் சூட்டினார். க்ரேவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவரின் தாய் அழுத காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ‘இந்த உயரத்தை எட்ட மொத்த குடும்பமும் கடுமையாக உழைத்துள்ளனர்’ ‘பெற்றோர்களுக்கு மிகப் பெருமையான தருணம்’ என்ற கேப்சன்களுடன் அந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

இதையடுத்து, போட்டி முடிந்த பின்னர் முதல் முறையாகப் பிரபஞ்ச அழகியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த க்ரே பேசும்போது, ``எனக்கு 13 வயதாக இருக்கும்போது என் அம்மாவுக்கு ஒரு கனவு வந்ததாக என்னிடம் கூறினார். அது, ‘நான் சிவப்பு உடையில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றேனாம்’ எனத் தெரிவித்தார். அதைக் கூறும்போது க்ரே சிவப்பு நிற உடையில்தான் நின்றிருந்தார். அருகில் அவரின் தாய் கண்களில் நீர் தழும்ப நின்றிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘ இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். இறுதி நாளில் என் தேசிய உடை வடிவமைப்பாளரையே தேர்ந்தெடுத்து அந்த உடையைத்தான் உடுத்தினேன். ஏனெனில் என்னால் முடிந்த அளவு பிலிப்பைன்ஸின் கலாசாரத்தை வெளிக்கொண்டுவருவதே என் நோக்கம்” எனப் பேசினார். பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வயதான பிலிபைன்ஸ் அழகி எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி போன்ற வைரஸ் குறித்து விழிப்பு உணர்வு மற்றும் குழந்தைகளுக்கு முறையாகக் கல்வி போன்ற திட்டத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.