Published:Updated:

தமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே!

தமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே!
தமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே!

இலங்கை அரசின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்தார். இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி பறிபோயுள்ளது.

முன்னதாக, இன்று முற்பகல் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் கூட்டத்தில் 101 எம்.பி-கள், மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோது, சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவித்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரவூஃப் ஹக்கீமும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மகிந்த ராஜபக்சே, அதிலிருந்து விலகி, அவருடைய தம்பி பசில் ராஜபக்சே பொதுச் செயலாளராக இருக்கும் இலங்கை பொதுமக்கள் முன்னணி எனும் கட்சியில் அண்மையில் இணைந்தார். மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சே எம்.பி-யும் அவருடன் இந்தக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் தலைமையில் இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சியானது போட்டியிட்டது. மகிந்த ராஜபக்சேவே இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டிருந்தார். 

அதிபர் மைத்திரியின் தலைமையிலான ஐ.ம.சு.கூட்டணியில் தனி அணியாக இயங்கிவந்த மகிந்த தரப்பு, ரணிலை நீக்கிவிட்டு மகிந்தவைப் பிரதமராக ஆக்கியதைத் தொடர்ந்து, மீண்டும் கட்சியைக் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்களால் இயக்கப்படும் புதிய கட்சியையே பலப்படுத்துவது என ராஜபக்ச குடும்பத்தினர் முடிவுசெய்தனர். 

கடந்த நவம்பர் 11-ம் தேதியன்று இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சியின் தலைவரான பீரிஸிடம் கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டு, அக்கட்சியில் இணைவதாக மகிந்த அறிவித்தார். அத்துடன் அக்கட்சியில் அவருடன் இணைந்த மற்ற ஐ.ம.சு. கூட்டணி எம்.பி-களுக்கு அடையாள அட்டையையும் அவர் வழங்கினார். அதுவே இப்போது மகிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பாதகமாக அமைந்துள்ளது. 

ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், இன்னொரு கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தவுடன் முன்னைய கட்சியின் உறுப்பினர் தகுதியை இழந்துவிடுகிறார். அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சே, கட்சி மாறியதால், அதன் உறுப்புரிமை இழந்துவிட்டார்; இந்நிலையில் அந்தக் கட்சியின் உறுப்பினர் எனும் முறையில், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என எதிர்த்தரப்பு கட்சியினர் வாதிட்டனர். அவர்களின் கருத்தைக் கேட்டுக்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூர்ய, அதை முறைப்படி தனக்கு அளிக்குமாறும் இது குறித்து தனியாக விவாதிக்கலாம் என்றும் கூறினார்.