
மிட்டாய் மியூசியம்!
அமெரிக்காவில், ‘கேண்டிடோஃபியா’ (Candytopia) என்ற பெயரில் 16,000 சதுர அடியில் அருகாட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் மிட்டாய்களால் செய்யப்பட்டவை. குழந்தைகளை மிகவும் கவர்ந்திழுக்கும் இந்த மிட்டாய் அருங்காட்சியகத்தைக் காண நுழைவுச் சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. 4 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு நுழைவுச் சீட்டு கிடையாது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அறிமுகப் போட்டிகளில் அசத்திய நாயகன்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் முதல்முறையாகக் களமிறக்கப்பட்ட பிரித்வி ஷா, 134 ரன்களைக் குவித்தார். 18 வயது மட்டுமே நிரம்பிய பிரித்வி, தான் விளையாடிய முதல் ரஞ்சி டிராபி, முதல் துலிப் டிராபி மற்றும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என எல்லாவற்றிலும் சதமடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில், ஆட்ட நாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது.

நிலாவுக்கு சுற்றுலா!
எலோன் மஸ்க் என்பவரின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், நிலாவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப ஒரு பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கிவருகிறது. ஜப்பானைச் சேர்ந்த கோடீஸ்வரர் யசுகு மேசாவா (Yusaku Maezawa) தான் நிலாவுக்குச் செல்லப்போகும் முதல் சுற்றுலாப் பயணி என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் ராக்கெட் தயாராகிவிடும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரானிக் க்யூப்!
ரூபிக் க்யூப், உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு விளையாட்டுப் பொருள். 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த க்யூப், உலகம் முழுவதும் சுமார் 35 கோடிக்கும் மேல் விற்பனையாகி உள்ளன. தற்போது, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ‘Go-Cube’ என்ற பெயரில் ஹைடெக் எலெக்ட்ரானிக் க்யூப்களை வடிவமைத்துள்ளன. இது, அனைவரும் எளிதாக விளையாடக்கூடியதாக இருக்கும் என்று அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.


புதிய தலைமை நீதிபதி!
அக்டோபர் 3 ஆம் தேதி, நம் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார், ரஞ்சன் கோகாய். இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. 1978 ஆம் ஆண்டு கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய ரஞ்சன் கோகாய், 2001 ஆம் ஆண்டு அதே நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
- நா.வருண்
தெரியுமா?
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்த்சர் எனும் இடத்தில் பொற்கோயில் அமைந்துள்ளது.