Published:Updated:

`700 விமானங்களின் போக்குவரத்தை நிறுத்திய ட்ரோன்' - திணறும் லண்டன் காவல்துறை?

`700 விமானங்களின் போக்குவரத்தை நிறுத்திய ட்ரோன்' - திணறும் லண்டன் காவல்துறை?
`700 விமானங்களின் போக்குவரத்தை நிறுத்திய ட்ரோன்' - திணறும் லண்டன் காவல்துறை?

இங்கிலாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, 'கேட்விக்' விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் 700 விமானங்களின் போக்குவரத்தை நிறுத்தி, பல்லாயிரக்கணக்கான பயணிகளைத் தவிக்க விட்டிருக்கிறது, ஒரு குட்டி 'ட்ரோன்'. 'இந்த ஆளில்லா குட்டி விமானத்தைப் பறக்கவிட்ட விஷமி யார்?' என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறது, லண்டன் காவல் துறை. இச்சம்பவம் மூலம், விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால், அச்சத்தில் இருக்கிறார்கள் இங்கிலாந்து மக்கள். 

photo credit: @sussex_police

கடந்த டிசம்பர் 19-ம் தேதி இரவு 9 மணியளவில், விமான ஓடுதளத்துக்கு மிக அருகில், ஒரு ட்ரோன் பறந்திருக்கிறது. தொடர்ந்து, சிறிது நேரம் விட்டு விட்டு தொடர்ந்து அந்த ட்ரோன் பறக்க ஆரம்பித்தது. சில மணி நேரம் இந்த ட்ரோனின் விளையாட்டு தொடர்ந்ததால், விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வந்த விமானங்களுக்குத் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து தடைப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் பரிதவிப்போடு காத்திருக்க நேர்ந்தது. அப்போது, சற்று நேரம் ட்ரோன் தென்படாமல் இருந்ததால் விமானங்களை இயக்க முற்பட்டனர், கேட்விக் விமான நிலைய அதிகாரிகள். அந்தச் சமயத்தில், மீண்டும் ட்ரோன்கள் தென்படத்துவங்க... ஒரே நாளில் இரண்டாவது முறையாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

தீவிரவாதிகளின் செயலா அல்லது யாராவது வக்கிரம் பிடித்த நபர்களின் குறும்புச்செயலா எனக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியதால், ராணுவ உதவி கோரப்பட்டது. 'ஐஎஸ்ஐஎஸ்' என்ற தீவிரவாத அமைப்பினரின் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்கப் பயன்படுத்தும் கருவிகளும் உடனடியாக கேட்விக் விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டன. ட்ரோனைச் சுட்டு வீழ்த்தி விடுவது சுலபமான விஷயம்தான் என்றாலும், அதில் ஒரு வேளை வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்தால், சுட்டு வீழ்த்தும்போது அதிகச்சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால்தான், பொறுமை காத்தது காவல் துறை. 

photo credit: @sussex_police

மேலும், மர்மமாக இப்படிப் பறக்கும் ட்ரோன்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய தொழில்நுட்பமும் காவல் துறையிடம் இருக்கிறது. ஆனால், அப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அதைப் பறக்கவிட்ட விஷமி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். அதனால்,அந்த முயற்சியையும் காவல் துறை எடுக்கவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காலம் தொடங்கியதால், வெளியூர்களுக்குச் செல்வதற்காக குழந்தைகளையும், முதியவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து விமான நிலையத்தில் காத்துக்கிடந்தவர்களின் வேதனையை வார்த்தைகளில் அடக்க முடியாது. 

இச்சூழ்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில்... க்ராலி என்ற ஊரைச்சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 47 வயது மதிக்கத்தக்க ஆண் என இருவரைக் கைதுசெய்தது காவல்துறை. ஆனால், இவர்கள் இருவரது கைதுக்கு அவர்களது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அவர்கள் அப்பாவிகள், அவர்களை விடுதலைசெய்ய வேண்டும்' என்று குரல் கொடுத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 'பால் கெய்ட்' என்பவரின் மேலதிகாரி 'ஜோ அலார்டு' என்பவர், 'ட்ரோன்கள் பறந்ததாகச் சொல்லப்படும் நேரங்களில் பால் கெய்ட் என்னுடன்தான் இருந்தார். அவர்மீது சந்தேகப்படுவது தவறு' என்று கெய்ட்டுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவந்தார். 

இந்தப் பரபரப்புகள் தொடர்ந்துவந்த நிலையில், கடந்த 22-ம் தேதியன்று விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. கைதுசெய்யப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டனர். 'ஒரு ட்ரோனை வைத்துக்கொண்டு இத்தனை ஆட்டம் காட்ட முடியுமா?' என்பதுதான் உள்ளூர் அச்சு ஊடகங்களில் முக்கிய விவாதப்பொருளாக இருந்தது. 'நாட்டில் ட்ரோன் பயன்பாடு ஒழுங்குபடுத்தப்படாதமைக்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம்' என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதே நேரத்தில், 'குட்டி ட்ரோன்கள் அவ்வளவு ஆபத்தானவையா?' என்ற கேள்வியும் எழுந்தது. 

ஆனால், 'ட்ரோன்கள் அத்தனை ஆபத்தானவையில்லை. அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இருப்பதுபோல, ட்ரோன்களிலும் நன்மை, தீமைகள் இரண்டுமே உள்ளன. யாரோ வக்கிர எண்ணம் கொண்டவர்தான் கேட்விக் விமான நிலையத்தை ட்ரோன் மூலம் முடக்கியுள்ளார்' என்று பதிலளித்தார், அட்மின் பாலா என்றழைக்கப்படும் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியன். சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 'உண்மைக் குற்றவாளி யார்?' என்ற மர்மம் இன்னும் நீடித்துவருகிறது. 'உடனடியாக ஒரு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. 

photo credit: @sussex_police

அதன் விளைவாக, 'ட்ரோனை வைத்து ஆட்டம் காட்டியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும் நபர்களுக்கு 50,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய்) தருவதாக அறிவித்திருக்கிறது, லண்டன் காவல்துறை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என முக்கியமான பண்டிகைகள் நெருங்கும் சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால், மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள், இங்கிலாந்து மக்கள். 'ட்ரோனைப் பறக்கவிட்ட மர்ம நபரைக் கண்டுபிடித்து விசாரணை செய்ய வேண்டும். அதோடு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என்பதுதான் இங்கிலாந்து மக்களின் தற்போதைய வேண்டுகோள். ஒரு கட்டத்தில், ‘ ட்ரோன்கள் விமான நிலையத்துக்குள் வந்தன என்பதே பொய்யான தகவல்’ என்றொரு செய்தியை வெளியிட்டது காவல்துறை. சில மணி நேரங்கள் கடந்த நிலையில், ‘ட்ரோன்கள் வந்தது உண்மைதான்’ என்று தன் முடிவை மாற்றிக் கொண்டது காவல் துறை. உலகம் முழுக்கவே ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் என்பதை வியப்பாகவே பார்ப்பார்கள். அத்தகைய போலீஸாரையே இப்படி குழப்பிவிட்டிருக்கும் அந்த ட்ரோன் பார்ட்டிகள் படா கில்லாடிகள்தான்.

இந்தியாவில் ட்ரோன்களின் நிலை! 

ஆயிரங்களில் தொடங்கி பல லட்சக்கணக்கான ரூபாய் விலை வரை விதவிதமான செயல்திறன்கொண்ட ட்ரோன்கள், சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை, பறக்கும் ரோபோக்கள் என்றுகூடச் சொல்லலாம். இந்தியாவிலும் ட்ரோன்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. அவை, கடந்த டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளன. 

'நானோ ட்ரோன்கள்' எனப்படும் 250 கிராம் எடை அளவுக்கும் குறைவான சிறிய ரக ட்ரோன்கள் தவிர, மீதி அனைத்து வகை ட்ரோன்களையும் இந்திய அரசிடம் பதிவுசெய்து, தனிக் குறியீடு எண் பெற்ற பிறகுதான் இயக்க முடியும். பாதுகாப்பு கருதி பல முக்கியமான இடங்களில் ட்ரோன்கள் பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ராணுவ முகாம்கள், நாட்டின் எல்லைப்பகுதிகள் உள்ளிட்ட பல இடங்கள் தடைப்பட்டியலில் வருகின்றன. 

வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களுக்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். கண்ணுக்கெட்டிய தூரம் வரைதான் ட்ரோன்களை பறக்க விட முடியும் என்றாலும், தரையிலிருந்து 400 அடி உயரத்துக்கு மேல் ட்ரோன்களைப் பறக்க விடக் கூடாது என்பது முக்கியமான விதி. மேலும், ட்ரோன்களின் இயக்கத்துக்கான அனுமதி வழங்குவதற்காக, ஆன்ட்ராய்டு செல்போன்களில் இயங்கும் வகையில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும் ட்ரோன்களை ஒவ்வொரு முறை பறக்கவிடுவதற்கு முன்பும் ட்ரோனை இயக்கும் நபர் (பைலட்) இச்செயலியின் மூலமாக அனுமதி பெற வேண்டும். 

தமிழகக் காவல் துறை, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களைக் கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்திவருகிறது. தமிழக வனத்துறை, யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க என ட்ரோன்களைப் பயன்படுத்திவருகிறது. இந்தியாவில் ட்ரோன் கேமரா இல்லாத திருமணமே இல்லையெனச் சொல்லும் அளவுக்கு திருமணங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.  

ட்ரோன்கள் மூலம் டெலிவரி! 

பல நாடுகளில், போர் நடக்கும் பகுதிகளில் கண்காணிக்கும் பணிகளில் ட்ரோன்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. சில தீவிரவாத அமைப்புகளும் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றன.  தற்போது, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பிரபல நிறுவனமான 'அமேசான்', வாடிக்கையாளர்களிடம் பொருள்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதேபோல, தொலைத்தொடர்பு வசதிகள் குறைவான இடங்களில் ட்ரோன்கள் மூலம் இணைய வசதியை வழங்க 'ஃபேஸ்புக்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

-லண்டனிலிருந்து ரமேஷ் பாலசுப்ரமணியன்