Published:Updated:

இலங்கைச் சிறையிலிருந்து தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கைச் சிறையிலிருந்து தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு!
இலங்கைச் சிறையிலிருந்து தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், முனியன், இசக்கிமுத்து ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டுப்படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர். 

விசாரணைக்குப் பின் இலங்கை கல்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 60 லட்சம் அபராதமும், 3 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, புத்தளம் சிறையில் மீனவர்கள் 8 பேரும் அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் குடும்பத்தினரும், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினரும்  போராட்டம் நடத்தினர். மேலும், மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 

இதைத் தொடர்ந்து மீனவர்களை விடுவிக்கத் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 8 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து மீனவர்கள் புத்தளம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளனர். இவர்கள் சென்ற நாட்டுப் படகையும் விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.