போலந்துமீது போர் தொடுத்து இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக ஹிட்லர் தொடங்கிவைத்தபோது, பத்து வயது ஆட்ரி ஹெப்பர்ன் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தார். பதிலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனிமீது போர்ப் பிரகடனம் செய்தது. அப்பா அவசரமாகப் பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஆட்ரியை அழைத்துக்கொண்டு விமான நிலையம் விரைந்தார். ஆரஞ்சுநிற விமானம் ஒன்றில் தன் மகளை அமரவைத்தார். ``ஆட்ரி, இது உன்னை நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லும். அம்மா உனக்காகக் காத்திருப்பார். அங்கே நீ அமைதியாக வாழலாம்.''

ஆட்ரிக்கு ஹிட்லரைத் தெரியாது. அவர் ஏன் போலந்தின் மீது போர் தொடுக்க வேண்டும்? அதற்கு இங்கிலாந்து ஏன் ஜெர்மனி மீது போர் தொடுக்க வேண்டும்? தெரியாது. நமக்கெதற்கு அரசியல், அவர்களை விடுங்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் ஏன் போர் மூள வேண்டும்? ஏன் அவர்கள் ஆளுக்கொரு நாட்டில் வசிக்க வேண்டும்? வீட்டுக்குள் நடக்கும் போர், வெளியில் நடக்கும் போர் இரண்டும் ஏன் ஒரே நேரத்தில் என்னைத் துன்புறுத்த வேண்டும்? ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது ஆட்ரிக்கு. போரின் நீண்ட கரங்களிலிருந்து ஒருவரும் தப்பித்துவிட முடியாது. அம்மா `எல்லா', மறுத்தார். நெதர்லாந்து, நடுநிலைவகிக்கும் நாடு. முதல் உலகப்போரில்கூட நெதர்லாந்து நடுநிலைதான் வகித்தது. கவலைப்படாதே.

ஆனால், ஆட்ரி அஞ்சியது தான் நடந்தது. அம்மா விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஹிட்லர், நெதர்லாந்தை ஆக்கிரமித்தார். எந்த நாட்டை ஆக்கிரமிக்கிறார்களோ, அங்கு உள்ளவர்களை நாஜிகள் எப்படியெல்லாம் வதைப்பார்கள் என்பதை அக்கம்பக்கத்தினர் விவரித்தபோது ஆட்ரியின் மெலிந்த உடல் நடுங்கியது. அப்பாவும் என்னைக் கைவிட்டுவிட்டார். அடைக்கலம் புகுந்த நாடும் கைவிட்டுவிட்டது. இனி என்ன?

நாள்கள், வாரங்கள், மாதங்கள் கடந்து சென்றுகொண்டிருந்தனவே தவிர, நிலைமையில் சிறிதளவு முன்னேற்றமும் இல்லை. உணவுப்பஞ்சம் ஆரம்பித்துவிட்டது. ஆட்ரி மேலும் மெலிய தொடங்கினார். ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என அருகில் நடக்கும் பாலே நடன வகுப்பில் தன் மகளைச் சேர்த்துவிட்டார் எல்லா. நளினமாக வளைய வந்து நடனமாடிய ஆட்ரி, பலரை வியப்பில் ஆழ்த்தினார்.

நடனமாடும் சிறுமிகள் நாஜிகளின் கண்களில் விழுந்தால், ஐயோ... நினைத்தாலே குலை நடுங்குகிறது! அதேநேரம் கதவுகளை மூடிக்கொண்டு வீட்டில் அடைந்துகிடப்பதும் பாதுகாப்பானது என்றும் சொல்ல முடியாது. வீட்டைப் பிளந்து உள்ளே வந்து சுட்டுத் தள்ளுபவர்களும் இருக்கிறார்களே...

ஆட்ரி அழகாக இருக்கிறாள், திறமைசாலியாக இருக்கிறாள்; எல்லோரும் பாராட்டுவதில் மகிழ்ச்சிதான். அதேநேரம் அவள் உண்பதற்காகவாவது அவள் சம்பாதித்தாக வேண்டும் அல்லவா?

ஆட்ரி, தன் காலணிகளைக் கழற்றிவிட்டு தோழிகளுடன் இணைந்து நடனமாட ஆரம்பித்தார். ஒரு சிறிய பறவையைப்போல கைகளை விரித்துப் பறந்த ஆட்ரியைக் கண்டு கூட்டம் பரவசமடைந்தது. ஆரவாரத்துடன் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்று ஆசைதான். ஆனால், கைகளைத் தட்டுவது தடைசெய்யப்பட்டிருந்தது. வெளியில் சத்தம் கசிந்துச் செல்வது, நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமல்ல; பார்வையாளர்களுக்குமேகூட பாதகமாக அமையலாம். இவர்களில் சிலர், யூதர்களாக இருக்கலாம்; ஜிப்சிகளாக இருக்கலாம்; கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம்; நாஜி படைகளைக் கவிழ்க்க சதி செய்யும் நிழல் உலகப் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது ஆட்ரியைப்போல ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமக்களாக இருந்தால்கூட போதும். நாஜிகள் இழுத்துச் சென்றுவிடுவார்கள். அதனால்தான் பார்வையாளர்களில் பலரும்கூட காலணிகளை அகற்றிவிட்டே அறைக்குள் நுழைந்திருந்தனர். மிகமிக மெலிதான, `ஒலிக்கிறதா இல்லையா' என்று சந்தேகத்தைக் கிளப்பும் இசை மட்டுமே அந்த அறையில் எதிரொலித்த ஒரே சத்தமாக இருந்தது. பிறகு, மூச்சுக்காற்று. ஆட்ரி கைகளைக் கூப்பி நடனத்தை முடித்துக்கொண்டபோது, அமைதியாக எழுந்து நின்று கண்களில் நீர் கசிய வாழ்த்தினார்கள் பார்வையாளர்கள்.

மகிழ்ச்சி, வாழ்த்து, கண்ணீர் ஆகியவற்றோடு தொடர்ந்து நடனமாடுவதற்கான வாய்ப்புகள் ஆட்ரிக்குப் பெருகின. வருமானமும் கிடைக்கத் தொடங்கியது. `ஐரோப்பாவின் சிறந்த பாலே நடனக் கலைஞர்களில் ஒருவராக நீ இருப்பாய்' என்று சிலர் வாழ்த்தினார்கள். `உன் அழகையும் திறமையையும் இப்படி இருளில் தொலைத்துக்கொண்டிருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது ஆட்ரி' என்று பலர் ஆசுவாசப்பட்டுக்கொண்டனர். `நீ ஏன் இங்கிருந்து வெளியேறி, எங்காவது அமைதியான ஒரு நாட்டுக்குச் சென்றுவிடக் கூடாது' என்றார்கள் வேறு சிலர். `அபாரமான வெளிச்சத்தில், பிரமாண்டமான அரங்கில், ஆயிரம் பேர் ஆரவாரமாகக் கைகளைத் தட்டி மகிழ்வதை நாங்கள் பார்க்க வேண்டும்' என்று நண்பர்கள் ஏங்கினார்கள். `ஆட்ரி, நீ ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது? அதுசரி... பாலேவுக்கு ஏற்ற கச்சிதமான உடல்வாகை எப்படி உருவாக்கிக்கொண்டாய்?' என்று திரும்பத் திரும்பக் கேட்டவர்களுக்கு, ஆட்ரி புன்னகை மாறாமல் பதிலளித்தார். `அதற்காக நான் சிரமப்படவே இல்லை. எனக்குக் கிடைத்த உணவை உண்டேன். உடல் இப்படி ஆகிவிட்டது.'

இன்னும் சிலர், நிகழ்ச்சி முடிந்ததும் தனியே அழைத்துச் சென்று கிசுகிசுத்தார்கள். `ஆட்ரி, நாம் மிகவும் சவாலான ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ மட்டுமல்ல; உன்னைப்போல ஏராளமான குழந்தைகள் எலும்புக்கூடுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். உன்னைப்போல அவர்களில் பலர் திறமைசாலிகள். ஆனால், நாஜிகளால் அவர்கள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும். உன் கலை அபாரமானது. வலிகளை மறக்கடிக்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. உனக்கு எப்படி கலையோ, அப்படி எங்களுக்கு அரசியல். அரசியலும் நளினமானதுதான் ஆட்ரி. மக்களின் வலிகளை மறக்கடிக்க மட்டுமல்ல; அந்த வலிக்கான காரணத்தைக் கண்டுணர்ந்து அகற்றும் ஆற்றலும் அரசியலுக்கு இருக்கிறது. இன்று நாம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதால், உன் நடனத்தைப்போலவே எங்கள் அரசியலையும் ரகசியமாக முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. கலையும் அரசியலும் இணைய வேண்டும். ஒன்று ஆபத்தில் இருக்கும்போது, மற்றொன்று உதவிக்கரம் நீட்ட வேண்டும். சொல், ஆட்ரி. உன்னால் எங்களுடன் இணைந்து பணியாற்ற முடியுமா?'

அடுத்தடுத்த நாளில் ஆட்ரி உலுக்கியெடுக்கும் பல காட்சிகளைக் காண நேர்ந்தது. கால்நடைகளைப் போல கைதிகளை அடைத்துக்கொண்டு வதைமுகாம்களுக்கு விரைந்து செல்லும் ரயில் வண்டிகளை அவர் கண்டார். அந்த வண்டிகளில் ஆட்ரியை விடவும் வயது குறைந்த குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒருவரும் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. வீதிகளில் கிடக்கும் சடலங்களைக் குப்பையைப்போல அள்ளிப்போட்டுக்கொண்டு சென்ற வண்டிகளையும் ஆட்ரி கண்டார். சுவருக்கு முகம் காட்டிக்கொண்டு பலர் வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்ததை ஆட்ரி மற்றொரு நேரம் கண்டார். ராணுவ உடை தரித்திருந்த சிலர், அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டு கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினர். அதில் ஓர் ஒருங்கிணைப்பு இருந்தது. பாலே நடனம்போல ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம். மெலிதான ஓர் இசையை அவர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் போலும். எப்போது துப்பாக்கியை உயர்த்த வேண்டும், எப்போது குறி பார்க்க வேண்டும், எப்போது சுட வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய துப்பாக்கிகள் அனைத்தும் கச்சிதமாக ஒரே நொடியில் வெடிக்கின்றன. சுட்டு முடித்ததும் ஒரே மாதிரி துப்பாக்கியை அவர்கள் கீழே இறக்கிக்கொள்கிறார்கள். திரும்பிப் பார்க்காமல் வரிசையில் நடந்துசெல்கிறார்கள். ஒருவேளை ஹிட்லர்தான் அவர்களைக் கட்டுப்படுத்தும் இசையா?

`நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்' என்று கலங்கிய முகத்துடன் வந்து நின்ற ஆட்ரியை, அரசியல் இயக்கத்தினர் தகவல் பரிமாற்றப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டனர். தன்னுடைய உடைகளுக்குள்ளும் காலுறைகளுக்குள்ளும் கடிதங்களை மறைத்து எடுத்துச் சென்று தோழர்களிடம் கொண்டுசென்று சேர்த்தார் ஆட்ரி. சிறிய பணிதான். ஆனால், ஆட்ரிக்கு அது ஒருவிதமான மனநிறைவை அளித்தது. ஹிட்லர் போதித்திருந்த முக்கியமான பாடத்தை அவர் மறக்கத் தயாராகயில்லை. `நெதர்லாந்து செய்த தவற்றை நான் செய்ய மாட்டேன். நெருக்கடியான தருணங்களில் நடுநிலை என்பது என்றுமே சாத்தியமல்ல. ஏதேனும் ஒரு தரப்பை ஆதரித்துதான் தீர வேண்டும்.'

போர் முடிவுக்கு வந்த பிறகே நெதர்லாந்தை விட்டு வெளியேற முடிந்தது. அங்குமிங்கும் சென்ற பிறகு 1948-ம் ஆண்டு லண்டன் வந்தடைந்தார் ஆட்ரி. ஆனால், அவருடைய ஆதாரக் கனவு அங்கே தகர்ந்துபோனது.

`மன்னிக்கவும் ஆட்ரி, போரும் பஞ்சமும் உன் உடலை மிகவும் உருக்கிவிட்டன. உன் எலும்புகள் பலவீனமடைந்துவிட்டன. நடனமாடுவதற்கான வலு உன்னிடம் இல்லை. பேசாமல் பாலேவை மறந்துவிடு. வேறு வேலைகள் கிடைக்காமலா போகும்?'

`என்னால் அந்தத் தருணங்களை மறக்கவே முடியாது' என்று ஓரிடத்தில் குறிப்பிட்டார் ஆட்ரி. `நான் பாலே கலைஞராக விரும்பியபோது, `நீ ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது?' என்று கேட்டார்கள். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று சுற்றியலைந்தபோது, `உன்னுடைய மெலிந்த உடலுக்கு பாலேதான் சரி. நீ ஏன் நடனம் கற்றுக்கொள்ளக் கூடாது' என்று அங்கிருந்து அனுப்பிவைத்தார்கள்.'

ஊதினால் விழுந்து உடைந்துவிடும் அளவுக்குக் குச்சியாக இருந்த ஆட்ரியை, மிகுந்த தயக்கத்துடன் சிறிய பாத்திரங்களில் மட்டும் முதலில் அறிமுகம் செய்தார்கள். 1953-ம் ஆண்டு `ரோமன் ஹாலிடே' என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆட்ரி அறிமுகமானபோது, அப்படியோர் அழுத்தமான தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என்று ஆட்ரி உட்பட ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா மூன்றையும் அந்த ஒரு படத்துக்காக ஆட்ரி பெற்றுக்கொண்டது இன்றுவரை ஓர் அசாதாரணமான சாதனையாகவே கருதப்படுகிறது. அதற்குப் பிறகு வெளிவந்த அவருடைய திரைப்படங்கள் அனைத்தையும் மக்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். `பல கதாநாயகிகளை நாங்கள் கண்டிருக்கிறோம். முதன்முறையாக ஒரு தேவதை எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்' என்று பரவசமடைந்தார்கள்.

1993-ம் ஆண்டு தனது 63-வது வயதில் புற்றுநோய் கண்டு ஆட்ரி இறந்துபோனார். இறந்த பிறகும் எம்மி, கிராமி போன்ற விருதுகள் ஆட்ரியைத் தேடி வந்தன. அவர் இறுதியாக நடித்த திரைப்படம், ஸ்பீல்பெர்க் இயக்கிய `ஆல்வேஸ்'. அதில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாத்திரம், தேவதை.