Published:Updated:

உலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி? - வெள்ளை மாளிகை ஆலோசனை

உலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி? - வெள்ளை மாளிகை ஆலோசனை
உலக வங்கியின் தலைவர் பதவியில் இந்திரா நூயி? - வெள்ளை மாளிகை ஆலோசனை

உலக வங்கியின் தலைவராகப் பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரா நூயியின் பெயரை முன்மொழிய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 


உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான `பெப்சி’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் தலைவராகவும் பணியாற்றி வந்தவர் இந்திரா நூயி. பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வரும் இவர் அந்தப் பொறுப்பில் 12 ஆண்டுக்காலம் இருந்து கோலோச்சியவர். அந்தப் பதவியிலிருந்து இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் ராஜினாமா செய்தார். தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவில் இந்திரா நூயி இடம் பெற்றுள்ளார். இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யாங் கிம், தனது பதவியை பிப்ரவரி 1-ம் தேதி ராஜினாமா செய்வதாக இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தார். இதையடுத்து உலக வங்கியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டிருக்கிறது. உலக வங்கி உருவாக்கப்பட்ட 1946-ம் ஆண்டு முதல் அதன் தலைவர் பொறுப்பை நியமிக்கும் வேலையை அமெரிக்கா செய்துவருகிறது. அந்த வகையில் உலக வங்கியின் புதிய தலைவரை நியமிக்கும் வேலைகளில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு வருகிறது. இந்திரா நூயி, அமெரிக்க அரசின் கரூவூலத்துறை அதிகாரியான டேவிட் மால்பாஸ் மற்றும் ஒபிக் (Overseas Private Investment Corp) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரே வாஷ்பர்ன் ஆகியோரது பெயர்கள் அந்தப் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்திரா நூயிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் ஆதரவு இருப்பதால், அவரே இந்தப் பதவியில் அமர்த்தப்படுவார் என்று கூறப்படுகிறது.