Published:Updated:

டிரம்ப்பை கலங்கவைத்த செய்தி - 'வாஷிங்டன் போஸ்ட்' பெயரில் போலி பத்திரிகை!

டிரம்ப்பை கலங்கவைத்த செய்தி - 'வாஷிங்டன் போஸ்ட்' பெயரில் போலி பத்திரிகை!
டிரம்ப்பை கலங்கவைத்த செய்தி - 'வாஷிங்டன் போஸ்ட்' பெயரில் போலி பத்திரிகை!

பிரபல பிராண்டுகள் பெயரில் போலிகள் வெளியாவது உண்டு. பிரபல பத்திரிகை பெயரிலேயே போலி பத்திரிகை அச்சடித்து வெளியிடப்படுவது இப்போது புதிய டிரென்ட் போல. 

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை வாஷிங்டன் போஸ்ட். இந்த பத்திரிகையின் பெயரில் போலி பத்திரிகை அச்சடித்து வெளியிடப்பட்டு, வாஷிங்டனின் சில பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது. போலி பத்திரிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. மற்றொரு செய்தியில் டிரம்ப் ராஜினாமாவை உலக மக்கள் கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளது.  

அச்சு அசல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை போலவே இருந்ததால் மக்கள் குழம்பிப் போனார்கள். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இணையதளம் போலவே போலி இணையதளமும் உருவாக்கி அதிலும் டொனால்ட் டிரம்புக்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.  'கோட் பிங்' என்ற பெண்கள் அமைப்பு போலி பத்திரிகையை வெளியிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெண்களுக்கு எதிரான தொடர்ந்து பேசி வருவதால் போலி பத்திரிகை அச்சடித்து அவருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இந்த தகவலை வாஷிங்டன் போஸட் பத்திரிகையும் உறுதி செய்துள்ளது,' வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை போலப் போலி பத்திரிகை அச்சடித்து விநியோகிக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்துள்ளோம்.  அவை வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பு இல்லை ' என்று ட்விட்டரில் பத்திரிகை நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 


போலி செய்திகளே பெரும் பிரச்னையாக இருக்கும் போது, போலி பத்திரிகையே அச்சடித்து வெளியிட்டால் என்ன செய்வது!