நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?

ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?

ஆர்.மோகனப் பிரபு, சார்ட்டர்ட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

ரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, உலகமே ஆர்வத்துடன் கவனித்துவரும் பிரச்னையாக மாறியிருக்கிறது ‘ப்ரெக்ஸிட்’ வாக்கெடுப்பு. இந்த வாக்கெடுப்பு அடுத்த சில நாள்களில் இங்கிலாந்தில் நடக்கப் போகிறது. இதில்  வெளியாக விருக்கும் முடிவு, உலகப் பொருளாதாரத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், உலக  நாடுகள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?

கடந்த 2016 ஜூன் 23-ம் அன்று பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் நீட்சியாக,  மார்ச் 2019 இறுதிக்குள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும். ஆனால், தற்போது வரை, ‘ப்ரெக்ஸிட்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும்  ‘பிரிட்டன் விலகல்’, நடைமுறையில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்து பிரிட்டனில் எந்தவொரு கருத்தொற்றுமையும் எட்டப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் ஏற்கெனவே ராஜினாமா செய்ய நேரிட்ட நிலையில்,  தற்போதைய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே  ‘ப்ரெக்ஸிட்’ தொடர்பாக முன்வைத்த திட்ட வரைவுக்கும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரிய ஆதரவு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளைத் தாண்டி, சர்வதேச அளவில் பல்வேறு சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விளைவிக்கவல்ல ‘ப்ரெக்ஸிட்’ நமது இந்தியாவிற்கு எந்தவிதமான சாதக, பாதகங்களை ஏற்படுத்தும்? 

 ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாறு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவிற்கென ‘சுங்கவரி யற்ற பொதுச் சந்தை’யின் தேவையை உணர்ந்த பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட ஆறு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து, ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பை (European Economic Community) 1958-ல் உருவாக்கின. 1973-ல் பிரிட்டன் உள்ளிட்ட மூன்று நாடுகள் இந்தக் கூட்டணியில் இணைய, இந்தக் கூட்டமைப்பு மேலும் வலுப்பெற்றது. 1979-ல் ஐரோப்பிய நாடாளுமன்றம் உருவானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி  மற்றும் ஜெர்மனி ஒன்றிணைப்பினைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?

28 நாடுகளை உள்ளடக்கிய வலுவான கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்குள் பணியாளர்கள், மூலதனம், உற்பத்திப் பொருள்கள், சேவைகள் ஆகிய மூலப் பொருள்கள் தடையில்லாமல் பயணிக்க வேண்டும் என்ற ஆரம்ப நோக்கம் மேலும் விரிவடைந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான நாணயமாக, 1999-ல் யூரோ அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த 19 உறுப்பினர் நாடுகளின் நிதிக் கொள்கையை முடிவெடுக்கும் வலுவான அமைப்பாக ஐரோப்பிய மத்திய வங்கி உருவெடுத்தது. தற்போது சர்வதேச நாணயச் சந்தையில், டாலருக்கு அடுத்தபடியாக அதிகமாக வர்த்தக மாகும் யூரோ, உலகின் இரண்டாவது பெரிய ரிசர்வ் கரன்சியாகவும் உருவெடுத்துள்ளது.

கடந்த 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப்பின், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் லிஸ்பன் உடன் படிக்கையில் கையெழுத்திட, பொருளாதாரக் கூட்டமைப்பாக மட்டுமே இருந்த ஐரோப்பிய ஒன்றியம், அரசியல் அமைப்பாகவும் உருவெடுத்தது. ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கென ஏராளமான அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. 

 ப்ரெக்ஸிட் முடிவு ஏன்..?

இந்த நிலையில், 2008-ல் நேரிட்ட உலகப் பொருளாதார நெருக்கடியில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த சில நாடுகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. குறிப்பாக, மக்கள்நலத் திட்டங்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்களுக்கும் அரசுப் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்த போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் தாங்கள் பெற்ற அரசுக் கடனைத் திரும்பச் செலுத்தத் தடுமாறின. ஓர் அரசாங்கமே கடனைத்  திரும்பச் செலுத்தாமல் போனால், அடிப்படை நிதிக் கட்டமைப்புக்குச் சிக்கல் ஏற்படும் என்பதினால், இந்த நாடுகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி ஏராளமாக உதவி செய்ய நேரிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை என்ற கோபமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பது பிரிட்டனின்  பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் என்ற அச்சமும் இங்கிலாந்து  மக்களிடையே உருவானது தான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?

கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் நிலவிவந்த வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணம், ஐரோப்பிய நாட்டு ஏழை மக்கள் அதிகளவு பிரிட்டனில் குடியேறுவதுதான் என இங்கிலாந்து மக்களுக்குத் தோன்றியது. உலகெங்கும் வலுவாகிவரும் வலதுசாரி சிந்தனையாளர்களின் குரல் பிரிட்டனிலும் மேலோங்கியதுடன், முன்னொரு காலத்தில் சூரியன் மறையாத பேரரசாகத் திகழ்ந்த பிரிட்டனின் பழம் பெருமையை மீட்டெடுக்க, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதுதான் ஒரே வழி என்றும் கோஷங்கள் எழத் தொடங்கின.

 பொது வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றிலிருந்து வெளியேறலாமா அல்லது வேண்டாமா என 23.06.2016 அன்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 4.65 கோடி வாக்குகளில், 51.89% வாக்காளர்கள் பிரிட்டன் வெளியேற ஆதரவாகவும்,  48.11% வாக்காளர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பதவியேற்ற தெரசா மே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விலகல் ஒப்பந்த முன்வரைவைத் தயார் செய்தார். இரண்டு வருட காலக்கெடுவுடன் கூடிய இந்த ஒப்பந்தம் 29.3.2017 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் தற்போதைய பிரதமர் தெரசா மே-யின் திட்டத்திற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே வரவேற்பு இல்லாமல் போக, பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் தோல்வி யடைந்தது. அதே சமயம், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானமும் தோல்வியடைந்தது.

 டீலா, நோ டீலா..?

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த சமரசமும் தேவை இல்லை என்று ஒரு தரப்பும், எளிமையான சமரசத்துடன் வெளியேற வேண்டும் என மற்றொரு தரப்பும் பிரிட்டனில் தத்தம் வாதங்களை முன்வைக்க, ஐரோப்பிய ஒன்றியமோ ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என்று உறுதியாகக் கூற, இது தொடர்பாக முடிவெடுக்கும் காலக்கெடு நெருங்கிவிட்டது. ஒப்பந்தம் ஏதும் இல்லாமலேயே ‘ப்ரெக்ஸிட்’ (No Deal) நடக்குமா, ஒப்பந்தம் இருந்தால் அது கடுமை யானதாகவோ (Hard Brexit) அல்லது எளிமையானதாகவோ இருக்குமா (Soft Brexit) என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

ப்ரெக்ஸிட்... டீலா, நோ டீலா..?

ஆனால், எதிர்பாராத திருப்பமாக, இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்து இன்னொரு பொது வாக்கெடுப்புக்கான கோரிக்கை வந்திருக்கிறது.  இதனால் தெரசாவிற்கு அதிக கால அவகாசம் கிடைக்க வழி பிறந்துள்ளது. இதனால் ‘ப்ரெக்ஸிட்’டுக்கான காலக்கெடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

 இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பிரிட்டனில் 800-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. பிரிட்டிஷ் - இந்திய நிறுவனங்களில் லட்சக்கணக்கானவர்கள் பணிபுரிகிறார்கள். குறிப்பாக, டாடாவின்   ஜே.எல்.ஆர் தொழிற்சாலையில் பல்லாயிரக் கணக்கில் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்தியாவிலும் பிரிட்டனின் ஏராளமான முதலீடுகள் உள்ளன. எனவேதான், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை நம் நாடு விரும்பவில்லை. குறிப்பாக, ‘நோ டீல்’ வெளியேற்றம், ஒருவிதமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சம் இந்தியாவில் நிலவுகிறது. வாகன உதிரிப் பொருள்கள், மென்பொருள் மற்றும் மருந்துப் பொருள்கள் துறைகளில் இந்தியாவின் மிகப் பெரிய இறக்குமதி நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் பொருளாதாரப் பின்னடைவு நமது ஏற்றுமதியாளர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பவுண்ட் மதிப்பு குறைந்துபோனதன் காரணமாகப் பல ஒப்பந்தங்கள் மறுபரிசீலனைக்கு உள்ளாகி யுள்ளதும் இந்திய ஏற்றுமதியாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

 புதிய தொடக்கம்

‘ப்ரெக்ஸிட்’படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால், நமக்குச் சில நன்மைகளும் கிடைக்கும்.  தற்போது, பிரிட்டனில் கல்வி பெற ஐரோப்பிய மாணவர்களுக்கு மட்டுமே அதிகளவில் உதவித் தொகை  வழங்கப் படுகின்றன. ‘ப்ரெக்ஸிட்’டுக்குப் பிறகு இந்திய மாணவர்களும் ஐரோப்பிய மாணவர்களுக்கு இணையாகக் கருதப்பட்டு கல்விச் சலுகைகள் வழங்கப்படலாம். ‘ப்ரெக்ஸிட்’டுக்குப் பிறகு, ஐரோப்பாவிற்கென பொதுச்சந்தை ஏதும் இல்லாமல் போவதால், பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டி அனுகூலம் (Competitive Advantage) பாதிக்கப்படும். எனவே, இந்திய நிறுவனங்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கலாம். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ஒப்பந்தங்களைப் புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!