அரசியல்
Published:Updated:

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...
பிரீமியம் ஸ்டோரி
News
பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரறிவாளனைக் காப்பாற்ற போராடிவருகிறார், அற்புதம் அம்மாள். இதேபோல, பிரான்ஸ் நாட்டில் தன் கணவரின் கொலைக்கு, பிரான்ஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று 62 ஆண்டுகளாகப் போராடிவந்த அல்ஜீரியப் பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன், அந்தப் பெண்ணின் கணவர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், மன்னிப்பும் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், போரின்போது காணாமல்போனது அந்தப் பெண்ணின் கணவர் மட்டுமல்ல; சுமார் 850 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அல்ஜீரியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியவர், மௌரிஸ் ஆடின். இவரின் மனைவி ஜோசெட். 1957-ல் மௌரிஸ், டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, அல்ஜீரியாவில் விடுதலைப் போர் மூண்டது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த  கொடூரமான அடக்குமுறைகளைக் கையாண்டது பிரான்ஸ் அரசு. இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மௌரிசும், அல்ஜீரியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்.

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

இந்த நிலையில் 1957, ஜூன் 11-ம் தேதி நள்ளிரவில் மெளரிஸின் வீட்டுக்குள் புகுந்த பிரான்ஸ் படையினர், அவரை தரதரவென்று இழுத்துச்சென்றனர். அவரின் மனைவி ஜோசெட்டும், குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜோசெட் படையினரை மறித்து, ‘மௌரிஸ் எப்போது வீடு திரும்புவார்?’ என்று கேட்டார். ‘எல்லாம் சரியாக இருந்தால், அரை மணி நேரத்தில் திரும்புவார்’ என்றார்கள். ஆனால், இன்றுவரை வீடு திரும்பவே இல்லை மெளரிஸ். ‘குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்பதே மௌரிஸ், தன் மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தை. அந்த ஒரு வார்த்தைக்காக, ஜோசெட் மறுமணம் செய்துகொள்ளாமல், மூன்று குழந்தைகளைக் காப்பாற்றுவதிலும் கணவரை மீட்பதிலும் கவனம் செலுத்தினார். கணவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை யூகித்த ஜோசெட், நீதிமன்றத்தில் கொலை வழக்கைத் தொடர்ந்தார். எதுவும் நடக்கவில்லை. கணவரின் பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர அரசியல் பிரமுகர்கள், ஆட்சியாளர்கள், சர்வதேச மனித உரிமைச் செயற் பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும், தன் கணவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து கடிதம் எழுதத் தொடங்கினார்.

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

இதற்கிடையே 1962-ல் அல்ஜீரியா விடுதலை அடைந்தது. பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தார் ஜோசெட். அங்கும் தனது போராட்டத்தைத் தொடர்ந்தார் ஜோசெட். 1966-ல் மேல்முறையீட்டு நீதிமன்றம், அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தது. அப்போதும் தளரவில்லை ஜோசெட். போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது கோரிக்கைகளுக்கு பதில் எதுவும் அளிக்காமல் மௌனம் சாதித்தது பிரான்ஸ் அரசு. சில ஆண்டுகளுக்குப் பின்பு, மௌரிஸ் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. தொடர்ந்து, மௌரிஸ் கொலை பற்றிய ஆவணப்படங்களும், புத்தகங்களும், திரைப்படங்களும் வெளிவந்தன. பிரச்னை தீவிரமடைந்தது. நாடு முழுவதும் ஜோசெட்டுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ‘மௌரிஸ் இடதுசாரி ஆதரவாளரே தவிர, எந்த வன்முறை போராட்டங்களிலும் ஈடுபடவில்லை’ என்பதைப் பலரும் சொல்லத் தொடங்கினார்கள்.

பாரீஸ் சதுக்கத்துக்கு 2004-ல் மெளரிஸின் பெயர் சூட்டப்பட்டது. இதற்கிடையே பிரான்ஸில் ஏழு அதிபர்கள் மாறிவிட்டார்கள். அரசின் மௌனம் மட்டும் கலையவில்லை. ஜோசெட்டும் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை. சில அதிபர்கள் பெயரளவுக்குப் பதிலளித்தனர். அல்ஜீரியப் போரின்போது பிரான்ஸ் உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவர், சாகும் தருவாயில் ‘மௌரிஸைக் கொல்லக் கட்டளையிட்டது நான்தான்...’ என 2014-ல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். பிரச்னை தீவிரமாகியது. தொடர்ந்து, அப்போது பிரான்ஸ் அதிபராக இருந்த ஃப்ரான்கொய்ஸ் ஹாலன்ட், ராணுவக் காவலில் இருக்கும்போதுதான் மௌரிஸ் இறந்தார் என்பதை ஒப்புக்கொண்டார்.

பிரான்ஸின் ‘அற்புதம்’ அம்மாள்! - 62 ஆண்டு போராட்டத்துக்குக் கிடைத்த நீதி...

இந்த நிலையில்தான், ஜோசெட்டின் 60 ஆண்டு போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தற்போதைய அதிபரான இம்மானுவல் மேக்ரோன். சில மாதங்களுக்கு முன்பு ஜோசெட்டை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியவர், அவருக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதில் மௌரிசின் மரணத்துக்கு பிரான்ஸ் அரசு பொறுப்பேற்பதாக அறிவித்தார். தொடர்ந்து அவரது இல்லத்துக்குச் சென்றவர், ஜோசெட்டைக் கட்டியணைத்து மன்னிப்பும் கோரினார்.

அத்துடன், தேசிய ஆவணக் காப்பகத்தையும்  ஜோசெட்டின் குடும்பத்தாருக்குத் திறந்துவிடும்படிக் கட்டளையிட்டு, அதனால் அவர்களின் வேறுசில கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதைத் தொடர்ந்துதான் ஆவணக் காப்பகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், போரின்போது மெளரிஸ் மட்டுமல்ல... சுமார் 850 பேர் காணாமல்போயிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினரும் ஜோசெட் வழியில் தங்களது போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். 62 ஆண்டுகளுக்குப் பின்பு தனக்கு நீதி கிடைத்ததுபோல அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜோசெட்!

- கே.ராஜு