Published:Updated:

பிரதமர் மன்மோகன் சிங்குடன், சீன பிரதமர் லீ சந்திப்பு

பிரதமர் மன்மோகன் சிங்குடன், சீன பிரதமர் லீ சந்திப்பு
பிரதமர் மன்மோகன் சிங்குடன், சீன பிரதமர் லீ சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள சீன பிரதமர் லீ, மன்மோகன்சிங்கை நேற்று இரவு சந்தித்து, இரு நாட்டு உறவுகள், பிரச்னைகள், ஒப்பந்தங்கள் குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார்.

பிரதமர் மன்மோகன் சிங்குடன், சீன பிரதமர் லீ சந்திப்பு

சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய-சீன நல்லுறவு, தொழில் ஒத்துழைப்பு போன்ற முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதற்காக 3 நாட்கள் பயணமாக சீனாவின் புதிய பிரதமர் லீ டெல்லி வந்தார். அவருடன் உயர்மட்ட குழு ஒன்றும் வந்தது.

டெல்லி வந்துள்ள லீக்கு நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டில் விருந்து அளித்தார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

##~~##
இதைத் தொடர்ந்து இன்று சீன பிரதமர் லீ, ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துகிறார். பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித்தை சந்திக்கும் அவர், அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார்.

அப்போது சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்னைகள், இரு தரப்பு உறவு, எல்லைப்பிரச்சினை, சமீபத்திய அத்துமீறல், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம், இரு தரப்பு வர்த்தக மேம்பாடு என தற்போதுள்ள பிரச்னைகள் அனைத்தையும் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகிறது. அதன் பின்னர் லீ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.

இதையடுத்து சீன பிரதமர் லீ, நாளை உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசுகிறார். அதன் பின்னர் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும் அவர், பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார்.

அதன்பின்னர் லீ, மும்பை புறப்பட்டு சென்று, மராட்டிய முதல்வர் பிரிதிவிராஜ் சவானுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மறைந்த டாக்டர் துவாரகாநாத் குடும்பத்தினரையும் சந்திக்க லீ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.