Published:Updated:

டிரம்ப்பை டென்ஷனாக்கிய கேள்வி!- கிம் உடனான சந்திப்புக்கு நிருபர்களுக்கு தடைபோட்ட வெள்ளை மாளிகை

டிரம்ப்பை டென்ஷனாக்கிய கேள்வி!- கிம் உடனான சந்திப்புக்கு நிருபர்களுக்கு தடைபோட்ட வெள்ளை மாளிகை
டிரம்ப்பை டென்ஷனாக்கிய கேள்வி!- கிம் உடனான சந்திப்புக்கு நிருபர்களுக்கு தடைபோட்ட வெள்ளை மாளிகை

ட்ரம்ப்புக்கும் செய்தியாளர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம்தான். நேற்று வட கொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பின்போதும் செய்தியாளர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே வெவ்வேறு ரகம். கடந்தாண்டு சிங்கப்பூரில் நடந்த இவர்களின் முதல் சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்பு பற்றித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது உச்சி மாநாடு இரவு விருந்துடன் தொடங்கியது.


ஹனோய் ஐந்து நட்சத்திர மெட்ரோபோல் ஹோட்டலில் இருவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு விருந்துக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது சில செய்தியாளர்கள், 'உங்கள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், நாடாளுமன்ற விசாரணை கமிட்டியின் முன், நீங்கள் செய்த குற்றங்கள் பற்றி வாக்குமூலம் அளிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகிறதே?’’ என்று ட்ரம்ப்பை நோக்கிக் கேள்வி எழுப்பினர். அவ்வளவுதான். ட்ரம்ப் கோபமான முகபாவத்தை காண்பித்துவிட்டு சென்றுவிட்டார். கிம் உடனான விருந்து நிகழ்வில் செய்தி சேகரிக்க ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ், ப்ளூம்பர்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்குத் தடை விதித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதிபர் முன்பு சத்தமாகக் கேள்வியெழுப்பிய குற்றத்துக்காகவும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதாலும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

நேற்று (27.2.2018) இரவு விருந்தைத் தொடர்ந்து இன்று காலை ட்ரம்ப் – கிம் இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது. இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லையென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.