Published:Updated:

`குவிந்த இந்தியர்கள்; நெகிழ்ந்த தேசம்!' - நாடு திரும்பினார் விமானி அபிநந்தன்

`குவிந்த இந்தியர்கள்; நெகிழ்ந்த தேசம்!' - நாடு திரும்பினார் விமானி அபிநந்தன்
`குவிந்த இந்தியர்கள்; நெகிழ்ந்த தேசம்!' - நாடு திரும்பினார் விமானி அபிநந்தன்

பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். இதையடுத்து, இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானை தொடர்புகொண்டனர். இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம் அனுப்பிவைப்பதாகவும் அபிநந்தனை அதில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் இதற்குப் பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. வாகா எல்லையில் அபிநந்தனை விடுவிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இன்று மதியம் அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறினார்.

ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, `சிறைபிடிக்கப்படும் வீரர்களையோ அல்லது சரணடையும் வீரர்களையோ காயப்படுத்தக் கூடாது. காயமடைந்த வீரர்களுக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோன்று, சிறைபிடிக்கப்பட்ட வீரர்களைக் கொல்லக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசாரணையின்றி  அவர்களுக்குத் தண்டனையும் வழங்கக் கூடாது. அதேபோல், 7 நாள்களுக்குள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்' என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 196 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இதற்கிடையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அபிநந்தன் பாகிஸ்தான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்தார். அதனால் அவருக்கு இங்கே விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

ராவல்பிண்டி ராணுவ முகாமில் வைத்து அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் முழுஉடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். இதன்பின்னர் ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் அபிநந்தன் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வந்தனர். விமானி அபிநந்தனை அழைத்துச் செல்ல வாகா எல்லையில் ஏராளாமான இந்தியர்கள் குவிந்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் எல்லையில் காத்திருந்தனர்.

தேசியக் கொடிகள் ஏந்தியபடி இளைஞர்கள் பலரும் அங்கு குழுமியிருந்தனர். பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் விமானி அபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன் பல்வேறு எழுத்து நடைமுறைகளை மேற்கொண்டனர். இதையடுத்து வாகா எல்லைக்கு வந்தபின் அவருக்கு, முழு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய முறை, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளிட்டவை அவரிடம் விசாரிக்கப்பட்ட உள்ளது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார் அவர்.

`தாயகத்திற்கு திரும்புவதை விட மகிழ்ச்சியான உணர்வு வேறு எதுவும் இல்லை. அன்பு, கனவு, நம்பிக்கைகளுக்கான இருப்பிடம் தாய்நாடு தான். உங்கள் தைரியம் எங்களை வலிமையடச்செய்துள்ளது'' என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

அபிநந்தனிடம் நடத்தப்படும் விசாரணையானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம், பாகிஸ்தான் அதிகாரிகள் செயல்பட்ட விதம், அவர்கள் இந்திய விமானியை எப்படி அணுகினர், ஏதேனும் துன்புறுத்தல் இருந்ததா? என்பது பற்றியெல்லாம் ஆராயப்படும். இதனிடையே அபிநந்தனின் விடுதலை உலக அளவில் ட்விட்டரில் ட்ரண்டாகிக்கொண்டிருக்கிறது. அவரது வருகை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.