Published:Updated:

``இங்கு புகைப்படம் எடுத்தால் மரண தண்டனை!” - பலரின் ஃபேவரைட் போட்டோ ஸ்பாட்டுக்கு வந்த சோதனை

பிரேம் குமார் எஸ்.கே.
``இங்கு புகைப்படம் எடுத்தால் மரண தண்டனை!” - பலரின் ஃபேவரைட் போட்டோ ஸ்பாட்டுக்கு வந்த சோதனை
``இங்கு புகைப்படம் எடுத்தால் மரண தண்டனை!” - பலரின் ஃபேவரைட் போட்டோ ஸ்பாட்டுக்கு வந்த சோதனை

Photo Credits: INSTAGRAM/ instahesse

உலகின் பல பகுதிகளில், ஆபத்தான இடங்களில் செல்ஃபி பிரியர்கள் வித்தியாச செல்ஃபி எடுக்கும் முயற்சியில் உயிர் இழந்ததைப் பல நேரங்களில் செய்திகளில் படித்திருப்போம். இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் குறிப்பிட்ட இடங்களில் செல்ஃபி எடுப்பது தடை செய்யப்பட்டது. இந்தியாவிலும் ரயில் பாதைகளில் செல்ஃபி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உலகின் பிரபலமான சுற்றுலாத் தலம் ஒன்றில் புகைப்படம் எடுத்தால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றால் நம்புவீர்களா..?

நம்பிதான் ஆக வேண்டும். ஆம்.. ஃபுகெட் தீவின் `மை காவ் பீச்' உலகப் பிரபலம். உலகின் அனைத்து நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு வர ஆசைப்படுவார்கள். சாதாரண பீச் தானே என்று கேட்பவர்களுக்கு,  ``இந்தப் பீச் பக்கத்திலே ஃபுகெட் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அதன் ஓடுதளம் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடல் மணலின் பக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக விமானங்கள் தரை இறங்கும்போது பீச்சில் இருப்பவர்களுக்கு அருகில் செல்லும். 

Photo Credits: INSTAGRAM/_eugenis_

இதைப் புகைப்படம் எடுக்கச் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கடற்கரையில் கூடுவார்கள். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, திருமண தம்பதிகள், காதலர்கள் எனப் பலரின் ஃபேவரைட் போட்டோ ஸ்பாட் என இந்தக் கடற்கரையைச் சொல்வார்கள். இனி இந்தப் பீச்சில் புகைப்படம் எடுத்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது  கைது செய்யப்படலாம், சில நேரம் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். 

ஆம், தாய் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விமான நிலையத்தைச் சுற்றி சுமார் 9 கிலோ மீட்டர்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இங்கு புகைப்படம் எடுக்கவும், ஆளில்லா விமானங்கள் பறக்கவிடவும், ஒளிரும் விளக்குகள், லேசர் போன்றவை தடை செய்யப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ``புகைப்படங்கள் எடுக்கும்போது விமானிக்குக் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான்  இது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்கின்றனர். 

Photo Credits: INSTAGRAM/vera_derezhickaya

ஆனால், உள்ளூர் வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் இந்த முடிவால் அதிருப்தியில் உள்ளனர். இந்த முடிவு காரணமாக சுற்றுலா கடுமையாக பாதிக்கும் என்றும் இதனால் எங்களின் வாழ்வாதாரத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானம், லேசர் போன்றவற்றுக்குத் தடை எல்லாம் சரிதான். ஆனால், புகைப்படங்களுக்குத் தடை விதிப்பது இந்தப் பகுதியில் இருக்கும் சுற்றுலாவை அழித்துவிடும் என்கின்றனர்.