Published:Updated:

சிதைந்துபோன பிரான்ஸின் பொக்கிஷம்... உயிர்த்தெழ உதவுமா டிஜிட்டல் மேப்பிங்? #NotreDame

சிதைந்துபோன பிரான்ஸின் பொக்கிஷம்... உயிர்த்தெழ உதவுமா டிஜிட்டல் மேப்பிங்? #NotreDame

பிரபல அசாசின்ஸ் கிரீட் (Assassin's Creed) என்ற கேமும் நோட்ரே டேமின் மீள் கட்டுமானப்பணிகளில் உதவக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

சிதைந்துபோன பிரான்ஸின் பொக்கிஷம்... உயிர்த்தெழ உதவுமா டிஜிட்டல் மேப்பிங்? #NotreDame

பிரபல அசாசின்ஸ் கிரீட் (Assassin's Creed) என்ற கேமும் நோட்ரே டேமின் மீள் கட்டுமானப்பணிகளில் உதவக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

Published:Updated:
சிதைந்துபோன பிரான்ஸின் பொக்கிஷம்... உயிர்த்தெழ உதவுமா டிஜிட்டல் மேப்பிங்? #NotreDame

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் அமைந்திருக்கிறது உலகப் புகழ்பெற்ற கட்டடங்களில் ஒன்றான 'நோட்ரே டேம்' தேவாலயம். இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதன் மேற்பகுதியில் இருந்த கோபுரம் தீ விபத்தால் முற்றிலுமாக பாதிப்படைந்து சரிந்து விழுந்தது. 800 வருடங்களுக்கு மேல் பழைமையான இந்தக் கட்டடம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அந்நகரத்தில் இருக்கும் பாரிஸ் கோபுரத்தைவிடவும் இந்த தேவாலயத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த தீ விபத்தில் தேவாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்த பல பழைமையான பொருள்கள் சேதமின்றி தப்பியிருக்கின்றன என்ற தகவல் பலரையும் நிம்மதியடைய வைத்துள்ளது.

ஆனால், நோட்ரே டேமின் கம்பீரமான கட்டுமானத்தை மீண்டும் பார்க்க முடியாதோ என்ற வருத்தம் பிரான்ஸ் நாட்டுக்கு மட்டுமல்ல உலகம் முழுக்கவே இருக்கிறது. அப்படிக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, "நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை மீண்டும் கட்டியெழுப்புவோம்’’ என்று தெரிவித்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான். அதற்காக நிதி திரட்டவும் முடிவுசெய்திருக்கிறார். இந்தக் கட்டுமான செலவுக்காக இப்போதே உலகம் முழுவதுமிருந்து நிதி உதவிகள் குவிந்துவருகின்றன. அடுத்த ஐந்து வருடங்களில் நோட்ரே டேமை அதே பழைய அழகுடன் மீண்டும் கட்டமைப்போம் எனத் தெரிவித்திருக்கிறார் இம்மானுவல் மேக்ரான்.

நோட்ரே டேமை மீண்டும் கட்டமைப்பதில் இருக்கும் சவால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகம் முழுவதும் தலைசிறந்த பல பொறியாளர்களுக்குப் பஞ்சம் இல்லை, நிதியும் எப்படியாவது சேர்ந்துவிடும் என்றாலும் நோட்ரே டேமை சீரமைப்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது. இன்றைக்கு இருக்கும் பொறியாளர்களால் புதிய ஒரு கட்டுமானத்தை வடிவமைக்கச் சொன்னால் ஒரே மாதத்தில் கட்டுமானத்தின் மொத்தத் திட்டத்தையும் உருவாக்கிவிடுவார்கள். கட்டத் தொடங்கினால் நோட்ரே டேம் தேவாலயத்தின் அளவுள்ள கட்டடத்தை அடுத்த இரண்டு மாதத்தில் கட்டிமுடித்து கையில் கொடுத்துவிடுவார்கள். ஆனால், இப்போது அவர்களுக்கு முன்னால் இருக்கும் சவால் என்பது சிதைந்துபோய் இருக்கும் ஒரு கட்டுமானத்தின் மீதியை அதேபோல உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த ஒன்றை அதே போலக் கட்டமைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. குறிப்பாக அந்தக் கட்டடம் இப்போதைய கட்டடக்கலையின் வடிவமைப்பில் பெருமளவு வேறுபட்டுள்ளது. பிரெஞ்சு கட்டடக்கலையின்படி வடிவமைக்கப்பட்ட நோட்ரே டேம் தேவாலயம் பல நூற்றாண்டுகள் பழைமையானது. இது மட்டுமல்ல; உலகம் முழுவதுமுள்ள பழைமையான கட்டடங்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமையைப் பார்க்கலாம். கட்டடத்தின் ஒவ்வொரு பாகமும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாகங்களிலும் நுணுக்கங்கள் அதிகமாக இருக்கும். அதை அப்படியே உருவாக்குவதென்பது இயலாத காரியம். இதற்கு முன்பு பல தடவைகள் 'நோட்ரே டேமில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதற்கான செலவுகளே மிக அதிக அளவில் இருந்திருக்கிறது. 1995-ம் ஆண்டில் தொடங்கிய மறுசீரமைப்புப் பணி 1997-ல் முடிவு பெற்றது. அப்போதே கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் செலவாகியிருக்கிறது.

இப்போதும் அதேபோல மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில்தான் தீ விபத்தும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மறுசீரமைப்புப் பணிகளின்போது கட்டுமானத்தின் பகுதிகளைப் பெரிய அளவில் மாற்றம் செய்யத் தேவையிருக்காது. ஆனால், இந்த முறை கட்டுமானத்தின் பல பகுதிகளைப் புதிதாக உருவாக்க வேண்டியிருக்கும். எனவே, அதற்கான ஆள்களைத் தேடுவதுதான் இப்போதைக்குக் கடினமான பணியாக இருக்கப்போகிறது. "பெரியளவில் செய்ய வேண்டியிருக்கும் கல் வேலை, மர வேலை, மற்றும் ஈய வேலை ஆகியவற்றைச் செய்யத் தெரிந்த திறமையான கைவினைக் கலைஞர்களை ஐரோப்பாவில் கண்டுபிடிப்பதுதான் இப்போது இருக்கும் முதன்மையான சவால்" என்று Donald Insall என்ற நிறுவனத்தின் இயக்குநரான பிரான்சிஸ் மேட் தெரிவித்திருக்கிறார். இந்நிறுவனம் பழைமையான கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபலமான நிறுவனமாகும். எனவே, அந்நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்து மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

கைகொடுக்குமா டிஜிட்டல் தொழில்நுட்பங்கள்?

திறமையான பணியாளர்கள் கிடைத்துவிட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும் மற்றொரு மிகப்பெரிய சிக்கலையும் அவர்கள் கடந்தாக வேண்டும். ஏற்கெனவே இருந்த அமைப்புகளில் இருந்த துல்லியமான அமைப்பு அவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே கைவினைக் கலைஞர்களால் அதை மீள் உருவாக்கம் செய்ய முடியும். சிதைந்துபோய்க் கிடக்கும் கட்டுமானத்திலிருந்து எப்படி அவ்வளவு நுணுக்கமான தகவல்களைப் பெறமுடியும்? ஆனால், இது போன்ற நேரத்தில்தான் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கை கொடுக்கக் காத்திருக்கின்றன. ஏற்கெனவே ஒட்டு மொத்த நோட்ரே டேமின் கட்டுமானத்தின் டிஜிட்டல் வரைபடமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ரூ டாலன் (Andrew Tallon) என்பவர் 2000-களின் தொடக்கத்தில் அதற்கான முயற்சியை எடுத்திருக்கிறார். அவரது முயற்சியால் நோட்ரே டேம் கட்டுமானத்தின் ஒவ்வொரு பாகமும் லேசர் ஒளிக்கற்றையால் ஆராயப்பட்டிருக்கிறது. அதன் மூலமாகக் கிடைத்த டிஜிட்டல் மேப்பிங் தகவல்களை வைத்து அப்படியே ஒரு முப்பரிமாண வரைபடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமன்றி பிரபல அசாசின்ஸ் கிரீட் (Assassin's Creed) என்ற கேமும் நோட்ரே டேமின் மீள் கட்டுமானப்பணிகளில் உதவக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த கேமின் உள்ளே இடம்பெறும் முக்கியமான விஷயங்களில் நோட்ரே டேமின் காட்சியும் ஒன்றாக இருந்தது. அதன் முப்பரிமாண படத்தைத் தத்ரூபமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக Caroline Miousse என்பவர் சுமார் இரண்டு ஆண்டுகளை நோட்ரே டேமின் கட்டுமானத்தை ஆராய்வதில் செலவிட்டிருக்கிறார், எனவே அப்போது சேகரிக்கப்பட்ட நுணுக்கமான விஷயங்களும் பிரதிகளும் இந்தக் கட்டுமானத்தை உயிர்ப்பிக்கப் பயன்படக்கூடும். இது மட்டுமல்ல இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன அவற்றையெல்லாம் கடந்து, அடுத்த ஐந்து வருடத்தில் மீண்டும் 'நோட்ரே டேம்' உயிர்த்தெழுமா என்பதைப் பார்க்க உலகமே ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism