Published:Updated:

கொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்

கொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்
கொழும்பு விமான நிலையத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு -அதிர்ச்சியில் பயணிகள்

இலங்கையின் கொழும்பு விமான நிலையம் அருகே, இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால், மக்கள்  அச்சத்தில் உள்ளனர். 

இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில், 228 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 470-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நேற்று அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது, இன்று காலை 6 மணிக்கு திரும்ப பெறப்பட்டது.
சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வதந்திகள் பரவியதால், அதற்கும் அந்நாட்டு அரசு தற்காலிகத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒருநாள் முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் இது தொடர்பாக, உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்,  ``பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துங்கள். அது ஒரு திட்டமிட்ட தாக்குதலாக இருக்கும்” எனக் கூறப்பட்டிருந்தது. இதை, அந்நாட்டு பிரதமர் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னரே எச்சரிக்கை விடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொழும்பு விமான நிலையத்தின் அருகே, இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை காவல்துறை அதிகாரிகள் செயலிழக்கவைத்துவிட்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் தங்களின் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் விமான நிலையத்திலே தங்கியுள்ளனர். தற்போது, விமான நிலையத்தின் அருகிலேயே சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Credit: AFP News agency

இன்று காலை ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதால், போக்குவரத்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.