Published:Updated:

ரீல்  `மக்களின் சேவகன்’ டு ரியல்  `மக்களின் சேவகன் ’ - உக்ரேன் அதிபராகும் காமெடி நடிகர்

பிரேம் குமார் எஸ்.கே.
ரீல்  `மக்களின் சேவகன்’  டு  ரியல்  `மக்களின் சேவகன் ’ - உக்ரேன் அதிபராகும் காமெடி நடிகர்
ரீல்  `மக்களின் சேவகன்’ டு ரியல்  `மக்களின் சேவகன் ’ - உக்ரேன் அதிபராகும் காமெடி நடிகர்

உக்ரேன் நாட்டின் அதிபர் தேர்தல் முடிவுகள் உலக கவனம் பெற்றிருக்கிறது. இதுவரை அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத தொலைக்காட்சி காமெடி நடிகர் ஒருவர், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறார். 

வொலொடிமிர் செலென்ஸ்கை என்ற 41 வயதான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகராக வந்து மக்களைச் சிரிக்க வைத்தவர். மக்களின் சேவகன் ( Servent of the people) என்ற அந்த நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபராக நடித்து கவனம்பெற்றவர். தற்போது அந்நாட்டின் அதிபராகவே ஆகப்போகிறார். ஜனநாயகத்தில் அனைத்தும் சாத்தியமே என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மூத்த அரசியல்வாதிகள், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் மத்தியில், தன்னை ஒரு புதிய முகமாகக் காட்டியே அவர் வெற்றிபெற்றிருக்கிறார். மார்ச் 31 -ம் தேதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், முதல் இரண்டு இடம் பிடித்த வேட்பாளர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். 

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட போரோஷென்கோ, தனது தொல்வியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அவர்,  ``அதிபர் மாளிகையை விட்டு வெளியேறுகிறேன். ஆனால், அரசியலை விட்டு வெளியேற மாட்டேன்” என்றார். 

வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய வொலொடிமிர் செலென்ஸ்கை,  ``உங்களை எந்த நிலையிலும் கைவிட மாட்டேன்” என நம்பிக்கை அளித்தார். மேலும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை  மீண்டும் தொடங்கும் என அவர் அறிவித்திருக்கிறார். அதிபராகும்  செலென்ஸ்கைக்கு, இந்தப் பிரிவினைவாத விவகாரம்தான் பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள்.  ``அவர்களுடன் எங்களது அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தை மூலம் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார். 

தேர்தல் பரப்புரையின்போது, எப்போதுமே சீரியஸான உரைகளை, பேட்டிகளை அவர் தவிர்த்துவந்திருக்கிறார். எனவே, இனி காமெடிகளைத்  தவிர்த்துவிட்டு சீரியஸாகப் பேசுவோம் என்ற கோஷங்களும் அவர் முன் எழுந்திருக்கிறது. அதுபோன்றே அவரும் சீரியஸான பல நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டார். 


   

தற்போது வரை தனது பொருளாதாரக் கொள்கைகுறித்தும், வெளியுறவுக்கொள்கை குறித்தும் பேசியிராத ஒருவரை நாடு பார்க்கிறது. அவரது முதல் நடவடிக்கையைப் பொறுத்துதான் அவரது கொள்கைகள் தெரியவரும் என்கிறார்கள், அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள்.  உக்ரேனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  வொலொடிமிர் செலென்ஸ்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள உலக நாடுகள், அவரது செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.