Published:Updated:

மீண்டும் குண்டு வெடிப்பு; 87 வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு! - இலங்கையில் தொடரும் பதற்றம்

மீண்டும் குண்டு வெடிப்பு; 87 வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு! - இலங்கையில் தொடரும் பதற்றம்
மீண்டும் குண்டு வெடிப்பு; 87 வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு! - இலங்கையில் தொடரும் பதற்றம்

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள கொச்சிகடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினமான நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் குண்டு வெடித்தது. இதையடுத்து, நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஒரு தேவாலயம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. 

தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் கொழும்பில் உள்ள மிகவும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகியவற்றிலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 200-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மீட்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மீண்டும் நேற்று மாலை மூன்று மணியளவில்  தெஹிவாலா உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏழாவதாக மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் டெமெடகோடா பகுதியில் உள்ள குடியிருப்பில் எட்டாவதாக மற்றொரு குண்டு வெடித்தது. இதனால் இலங்கையில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வதந்திகளைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டன. 

இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் இலங்கை விமான நிலையத்துக்கு அருகில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதை அதிகாரிகள் செயலிழக்கச் செய்தனர். அதைத்தொடர்ந்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிற்பகலில் கொழும்பின் பிரதான பேருந்து நிலையத்தில் 87 வெடிபொருள்கள் கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நேற்று தாக்குதல் நடந்த கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் நின்ற ஒரு வேனில் தற்போது மீண்டும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் செயலிழக்க வைக்கும் நோக்கில் அந்தப் பகுதியில் இருந்த மக்களை காவலர்கள் வெளியேற்றினர். இருந்தும் கண்டுபிடிக்கப்பட்ட குண்டைச் செயலிழக்க செய்யும்போது அது வெடித்துச் சிதறியது. இது மிகவும் சிறிய குண்டு வெடிப்பு என்றும் இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை முழுவதும் ராணுவம், காவல்துறை என பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் மற்றும் ஹோட்டல் அதிகாரிகள் போன்ற பலரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.