தாய்லாந்து நாட்டின் முன்னாள் மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் உயிரிழந்தார். இவர், தாய்லாந்தை சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சிசெய்துவந்தார். பூமிபோலுக்குப் பின், அவரது மகன் மஹா வஜிரா ரலாங்கர்ன் புதிய அரசராக அறிவிக்கப்பட்டார்.

இவரின் முடிசூட்டு விழா, தாய்லாந்து முறைப்படி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு முடிசூட்டு விழா நடப்பதால், நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. புதிய மன்னரின் முடிசூட்டு விழா, மூன்று நாள்களுக்கு நடைபெறும். இன்று காலை, தாய்லாந்து நாட்டின் புத்த மதம் மற்றும் ஹிந்து பிராமண முறைப்படி நடைமுறைகள் தொடங்கின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஹா வஜிரா மன்னராக முடிசூட்டுவதற்கு முன்னதாக வெள்ளை நிறத்திலான ஆடை அணிந்து அந்நாட்டு முறைப்படி சில மத சடங்குகளை செய்தார். பின்னர், தாய்லாந்தில் உள்ள 100 புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் உடல் சுத்திகரிப்பு மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மன்னருக்கே உரிய உடை அணிந்தபடி ஏழு வெண்குடைகள் சேர்ந்த ஆசனத்தில் அமரவைக்கப்பட்டார்.

பிறகு, அரியாசனத்தில் அமரவைக்கப்பட்ட அவருக்கு ராஜ கிரீடம், அரச செருப்புகள், விசிறி, ராஜ வாள் மற்றும் செங்கோல் போன்ற ஐந்து அரசுரிமை சின்னங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்புப் பிரமாணத்தை வாசித்தார்.

மூன்று நாள்கள் நடக்கும் இந்த விழாவில், இன்று நடக்கும் விழாவே முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கியமான நடைமுறைகள் அனைத்தும் இன்று நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையான நாளை, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திங்கள் கிழமை முழுவதும் நாட்டு மக்களைச் சந்திக்க உள்ளார். புதிய மன்னர் மஹா வஜிராவுக்கு, முன்னாள் மன்னர் பூமிபோல் அளவுக்கு மக்களைப் பற்றி தெரியாது என்பதால், அவர் அதிக அளவில் மக்களிடம் தன் நேரத்தைச் செலவழிப்பார் என கூறப்பட்டுள்ளது.