Published:Updated:

திருத்தம் ஏதுமின்றி விரைவில் அறிக்கை வெளியீடு: ஐ.நா.

ஐக்கிய நாடுகள், ஏப்.23,2011

இலங்கைப் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை விரைவில் எவ்வித திருத்தமும் இல்லாமல் முழுமையாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ##~~##

பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் வெளியிடக் கூடாது என்ற இலங்கை அரசின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் அளித்த பேட்டியில், "இலங்கையின் இறுதிகட்ட போர்த் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை எவ்வித திருத்தங்களும் இன்றி வெளியிட வேண்டும் என்ற முடிவில் மாற்றமே இல்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதனை வெளியிடுவோம்.

அதேவேளையில், "இந்த அறிக்கை தொடர்பான இலங்கை அரசின் பதிலை கேட்டுள்ளோம். அந்தப் பதிலுடன் சேர்த்து அறிக்கையை வெளியிட விரும்புகிறோம். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்துவார்களா என்பது குறித்து அறிய முயற்சி செய்து வருகிறோம்," என்றார் அவர்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இருந்து கசிந்த சில தகவல்களின்படி, இறுதி கட்டப் போரின் போது, இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறி, போர்க் குற்றங்களை இழைத்துள்ளது தெரியவந்தது.

மேலும், இந்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் தன்னிச்சையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.