Published:Updated:

மக்களைக் காத்தது மனித உரிமை மீறலா?-ராஜபக்ஷே

Vikatan Correspondent

கொழும்பு, மே 2,2011

"விடுதலைப்புலிகளிடம் இருந்து அப்பாவி மக்களைப் பாதுகாத்தது தான் மனித உரிமை மீறலா?" என்றார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. ##~~##

மே தினத்தையொட்டி, கொழும்புவில் ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் மக்கள் மத்தியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது:

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதோடு, இலங்கைப் படையினர் மீதும் மிகக் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்த போதிலும், பிரபாகரன் உள்ளிட்ட புலிப் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் மருந்து வகைகளை நாங்கள் குறைவின்றி வழங்கியது தவறா?

அப்பாவி மக்கள் மீதும், இலங்கைப் படையினர் மீதும் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்த போதிலும், பிரபாகரனின் தந்தை எதுவித பிரச்னையுமின்றி தொடர்ந்தும் ஓய்வூதியம் பெற்று வந்தார்.

ஆனால், அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துக்கொண்டு எங்கள் படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அப்படி இருந்தும், எங்கள் படையினர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களது பிடியில் சிக்கியிருந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தார்கள்.

விடுதலைப்புலிகள் பிடியில் மூன்று லட்சம் அப்பாவிகள் சிக்கியிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான உணவை குறைவின்றி அனுப்பினோம். மூன்று லட்சம் பேருக்கு உணவு அனுப்பும்படி ஐ.நா. நிறுவனங்கள் கூறிய போதிலும், நாங்கள் மூன்றரை இலட்சம் பேருக்குத் தேவையான உணவை அனுப்பினோம். இது நாங்கள் செய்த மனித உரிமை மீறலா?

அன்று போருக்கு குழந்தைகளைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்றார்கள். இன்று அப்படியான நிலைமை இல்லை. இப்போது அப்பகுதி குழந்தைகள் சுதந்திரமாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள். இப்படியான நிலைமையை நாம் ஏற்படுத்தியது தவறா?

அன்று சயனைட் வில்லைகளை அணிந்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட குழந்தைதகள் இன்று விஞ்ஞான துறையில் கல்வி கற்கின்றார்கள். டாக்டர்களாக அவர்கள் உருவாகின்றார்கள். இதுதான் நாம் செய்த மனித உரிமை மீறல். தற்கொலை தாக்குதல் என்ற பெயரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை குறித்து அறிக்கை எழுதுபவர்கள், வாழ்க்கையில் ஒரு போதுமே வடக்கு கிழக்கைப் பார்த்திராதவர்கள். ஆனால், இங்கு மனித உரிமை - ஜனநாயகம் இல்லை எனக் கூறுகிறார்கள். தயவு செய்து டாலர்களுக்கு அடிமையாகாதீர்கள்.

டாலர்களுக்கு அடிமையாகி, மனித உரிமை மீறப்படுவதாகப் பொய் கூறி நாட்டை சீரழிக்காதீர்கள். இப்போது இங்கு உருவாகியுள்ள நல்ல நிலைமையைப் போக்குவதற்கு முயற்சி எடுத்தால், அதனால் பாதிக்கப்படுவது இந்நாட்டு மக்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தேசத் துரோகியாகாதீர்கள். இந்நாட்டின் சமாதானத்தைச் சீர்குலைக்காதீர்கள்.

இந்நாட்டைக் முன்னேற்றம்போது பலவிதமான பிரச்னைகள் வந்தன. அத்துடன், பல்வேறு விதமான சக்திகளும் வந்தன. எந்தச் சக்தி வந்தாலும் அதிகாரத்தையும், பதவியையும் பாதுகாப்பதற்காக மண்டியிட்டு தலைவணங்க நாங்கள் தயாராக இல்லை.

உயிரை அர்ப்பணித்து இந்தச் சுதந்திரத்தை பெற்றுள்ளோம். சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கும் இச்சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பு.

இந்த மே தினக் கூட்டத்துக்கு, வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பது, அவர்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்றையும், அன்பையும் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது," என்றார் ராஜபக்ஷே.