Published:Updated:

ஒசாமாவை கொன்றது யு.எஸ். படைகளே: பாக். அரசு

Vikatan Correspondent

இஸ்லாமாபாத், மே.2,2011

அல்-காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றது, அமெரிக்காவின் படைகள் தான் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ##~~##

இந்த நடவடிக்கைகளில் தாங்கள் விலகி இருந்ததாக குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அபோதாபாத்தில் அமெரிக்க உளவுத்துறை உதவியுடன் அந்நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார்.

பின்லேடன் உலகில் எங்கிருந்தாலும் தங்கள் படைகளால் நேரடியாக அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு முன்பு அறிவித்திருந்த கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பின் லேடனின் மரணம், உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு மிகப்பெரும் பின்னடைவு.

எந்த நாட்டுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த எங்களது மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பது பாகிஸ்தானின் கொள்கை.

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பாகிஸ்தான் அரசியல் தலைமை, நாடாளுமன்றம், மாநில அரசுகள் மற்றும் ஒட்டுமொத்த நாடும் ஒருங்கிணைந்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் தொடரும்.

பாகிஸ்தானுக்கு எதிராக அல் காய்தா போர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அல் காய்தா ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அல் காய்தா மற்றும் அதைச் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துள்ளனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.