Published:Updated:

அமெரிக்க ஷாப்பிங் மாலில் புகுந்து இளைஞர் நடத்திய வெறிச் செயல்! - 20 பேர் பலி; 26 பேர் படுகாயம்

``எல் பாசோவில் உள்ள வால்மார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியில் உள்ளோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என வால்மார்ட் தங்கள் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் நடந்த பகுதி
தாக்குதல் நடந்த பகுதி ( AP )

துப்பாக்கி கலாசாரம் அமெரிக்காவில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. துப்பாக்கிப் பயன்பாடு அதிகரித்திருந்தாலும், அங்குள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் பாதுகாப்புக்கு மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்தி வருகிறனர். ஆனால், கடந்த சில வருடங்களாகத் துப்பாக்கியால் நடக்கும் வன்முறைகள் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வைத்துக்கொண்டு வன்முறை செய்பவர்களை அதிபர் ட்ரம்ப் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

தாக்குதல் நடந்த பகுதி
தாக்குதல் நடந்த பகுதி
Ap

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உணவுத் திருவிழா நடந்தது. அந்த கூட்டத்துக்குள் நுழைந்த ஒருவர், திருவிழாவில் கூடியிருந்தவர்களைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த பீதியே இன்னும் ஓயாத நிலையில் அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் எல்லை மாகாணமாக டெக்ஸாஸில்தான் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள எல் பாசோ (EL paso) என்ற நகரில் உள்ள வால்மார்ட் (walmart) வணிக வளாகத்தில் நேற்று காலை (இந்திய நேரப்படி நேற்று மாலை) ஆயிரக்கணக்கான மக்கள் பொருள்களை வாங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் ஒருவர், பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்
தாக்குதல் நடத்தியவர்
Twitter/@RealSteveLusk

துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வால்மார்ட் வளாகத்துக்கு அருகிலேயே காவல்நிலையம் இருந்ததால், தகவல் அறிந்த எல் பாசோ போலீஸார், சில நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரைக் கைது செய்துள்ளனர். முதலில் மூன்று பேர் இணைந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருவர் மட்டுமே என்பது உறுதியாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது அந்தக் கடையில் சுமார் 3,000 பொதுமக்களும் 100 பணியாளர்களும் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 21 வயதான பேட்ரிக் க்ரூசிஸ் (Patrick Crusius ) எனத் தெரியவந்துள்ளது. ``பொதுவாக ஷாப்பிங் செல்பவர்களுக்கு அந்த நாள் சிறந்த நாளாக மகிழ்வாக இருக்கும். ஆனால், எல் பாசோவில் ஷாப்பிங் சென்றவர்களின் நாள் மறக்கமுடியாத மிகவும் சோகமான நாளாக முடிந்துள்ளது. டெக்ஸாஸ் வரலாற்றில் இது ஒரு கொடூரமான தாக்குதல்” என டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott ) தெரிவித்துள்ளார்.

இரங்கல் நிகழ்வு
இரங்கல் நிகழ்வு
AP

தாக்குதல் நடந்த எல் பாசோ பகுதியில் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்களும், இத்தாலியைச் சேர்ந்தவர்களும் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர். அமெரிக்காவில் அவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வகையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் தொடர்பாக பாட்ரிக் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``டெக்ஸாஸின், எல் பாசோவில் நடந்த தாக்குதல் மிகவும் சோகமானது மட்டுமல்ல அது கோழைத்தனமானது. இன்று நடந்த வெறுக்கத்தக்கச் செயலை, இந்த நாட்டில் உள்ள அனைவருடனும் இணைந்து நானும் கண்டிக்கிறேன். அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ள இந்தச் சம்பத்துக்கு மன்னிப்பே கிடையாது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.