Published:Updated:

``இவ்ளோ ஈஸியா எப்போதும் சிக்கினது கிடையாது!” - போலீஸ் வாகனத்தில் மோதிய வேனில் காத்திருந்த அதிர்ச்சி

பிரேம் குமார் எஸ்.கே.

காவல் நிலையத்தின் வெளியே காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வேகமாக வந்த வேன் ஓரத்தில் நின்ற போலீஸ் வாகனத்தில் மோதியது.

போலீஸ் கார்
போலீஸ் கார்

போதை பொருள்கள் கடத்தல் தொடர்பாகப் பல்வேறு படங்களில் பரபரக்கும் காட்சிகளைப் பார்த்திருப்போம். அதை போலீஸ் கண்ணில் சிக்காமல் எடுத்துச் செல்லும் முயற்சியில் கடத்தல்காரர்கள் பல்வேறு யுத்திகளை கையாள்வார்கள். காவல்துறையினரும் பல கட்டங்களாக ஸ்கெட்ச் போட்டு கடத்த நடவடிக்கைகளை முறியடிப்பார்கள்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

ஆனால், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை சாதாரண வேனில் எடுத்துச் செல்கிறார் ஒரு நபர். அவரை எந்தக் காவலரும் தடுக்கவில்லை. ஆனால், அந்தக் கடத்தல் காரருக்கு போலீஸ் வாகனம் மேல் என்ன கோபமோ தெரியவில்லை, சும்மா ஓரத்தில் நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தை மோதிவிட்டுச் சென்றார்.

இந்தச் சம்பவம் நடைபெற்றது ஆஸ்திரேலியாவின் வடக்கு சிட்னி நகரத்தில்தான். காவல் நிலையத்தின் வெளியே காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வேகமாக வந்த வேன் ஓரத்தில் நின்ற போலீஸ் வாகனத்தில் மோதியது. போலீஸ் வாகனத்தில் காவலர்கள் யாரும் இல்லாததால், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வேன் மோதிய சத்தம் கேட்டு வந்து பார்த்த போலீஸார் கார் சேதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த வேனை அடையாளம் கண்டு பிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருள்கள்
கைப்பற்றப்பட்ட போதை பொருள்கள்

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த வேனை மடக்கிப்பிடித்த போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர். அப்போது அந்த வேனை சோதனையிட்டபோது போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த வேனில் பல பெட்டிகளில் 273 கிலோ பனிக்கட்டி போன்ற போதை பொருள் இருந்தது. இதை, ஆய்வு செய்த காவல்துறை, கைப்பற்றபட்ட போதை பொருள்களின் மதிப்பு சுமார் சுமார் 200 மில்லியன் டாலர் இருக்கும் என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரிகள், எங்கள் வரலாற்றில் இவ்ளோ எளிதாக, இவ்ளோ பெரிய அளவில் போதை பொருள்கள் சிக்கியது கிடையாது. இந்த மோதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 26 வயதான அவர் மீது போதை பொருள்களை கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சிட்னி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.