Published:Updated:

“இருமல் சத்தம் நரகத்தின் கதவுகளைத் தட்டுவதாக உணர்ந்தேன்!” - கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சீன இளைஞர்

சீன இளைஞர்
சீன இளைஞர்

கொரோனா பாதிப்பிலிருந்து தான் மீண்டு வந்த கதையை விவரிக்கிறார் அந்த 21 வயது இளைஞர்.

`என்னுடைய இருமல் சத்தங்கள் நரகத்தின் கதவுகளைத் தட்டுவதுபோல் இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்றுதான் நினைத்திருந்தேன்’ என்கிறார் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள 21 வயதான சீன இளைஞர். கொரோனா தாக்கம் முதலில் ஏற்பட்ட வுகானில்தான் இந்த இளைஞர் வசித்து வருகிறார். ஜனவரி 21-ம் தேதிதான் கொரோனா தாக்கம் குறித்து உலகுக்கு அறிவித்தது சீனா. ஆனால், அதற்குள் அங்கு ஏராளமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பும் அதில் இருந்து தான் மீண்டுவந்த கதையையும் விவரிக்கிறார் அந்த 21 வயது இளைஞர்.

கொரோனா
கொரோனா

`ஜனவரி 21-ம் தேதி இரவு உணவு முடித்துவிட்டு உறங்கச் சென்றேன். நள்ளிரவில் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு நிறைய நோயாளிகள் காய்ச்சல் அறிகுறியுடன் வரிசையில் காத்திருந்தனர். நான் மருத்துவரை சந்திக்க நீண்ட நேரமாகும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. நிறைய மக்கள் காய்ச்சல் பாதிப்பால் அங்கு குவிந்திருந்தனர். மருத்துவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர். இது வித்தியாசமாக இருந்தது. இதற்கு முன்பு நான் இவ்வாறு பார்த்ததில்லை. நான் பயத்துடன்தான் இருந்தேன்.

முதல் நான்கு நாள்கள் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன். பரிசோதனைகளுக்குப் பின்னர் என்னை வீட்டுக்கு அனுப்பினர். வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். முதல் நான்கு நாள்கள் எனக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது. உடலின் ஒவ்வொரு பாகங்களில் கடுமையான வலி இருந்தது. நான்கு நாள்களுக்குப் பிறகு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. வுகான் நகரமே முடக்கப்பட்டிருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. திடீரென எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது.

சீன மருத்துவமனை
சீன மருத்துவமனை
AP

மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் மேற்கொண்டனர். நான் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினேன். எனக்கு வைரஸ் தாக்கம் இருக்கிறதா இல்லையா என உறுதியாகவில்லை. ஆனால், உடல்நலக்குறைவுடன்தான் காணப்பட்டேன். அன்று இரவே உடல்நிலை மிகவும் மோசமானது. காய்ச்சல் 102 டிகிரியைத் தாண்டியது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் காய்ச்சல் கொஞ்சம் தணிந்தது. ஜனவரி 29-ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, எனக்கு சிகிச்சைகள் ஆரம்பமானது.

`இதுதான் உண்மையான காதல்!' - கொரோனாவுக்கு எதிராகப் போராடும் வயதான தம்பதி

9 நாள்கள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதி மீண்டும் சோதனை செய்யப்பட்டது. கொரோனா டெஸ்ட் நெகட்டிவாக இருந்தது. மருத்துவமனையில் போதிய இடம் இல்லாததால் அப்பார்ட்மென்டில் தங்கவைக்கப்பட்டோம். அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவும் உள்ளே இருந்து யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை. 5 நாள்களுக்குப் பிறகுதான் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டோம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சுமார் மூன்றுவார காலம் மருத்துவமனையிலே என் நாள்கள் கழித்துவிட்டன. எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். மருத்துவர்கள் சிலர் தங்களுக்கும் நோய்த்தொற்று இருப்பதாகக் கூறினர். இருந்தும் தொடர்ந்து நோயாளிகளைக் கவனித்து வந்தனர். ஒரு மாதத்துக்கு முன்பே இந்த வைரஸ் தாக்கம் குறித்து அரசு கூறியிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது” என்றார் வருத்தத்துடன்.

பின் செல்ல