Published:Updated:

` உலகின் மிகப்பெரிய நரபலி இது!' - பதறவைக்கும் 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

சத்யா கோபாலன்

பெரு நாட்டில் உள்ள கடற்கரைக்கு அருகில் தோண்டத் தோண்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.

Peru skeletons
Peru skeletons ( Arqueologia del Peru )

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டின் தலைநகர் லீமாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் ஹுவான்சகோ (Huanchaco). புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான இங்கு கடந்த ஒரு வருடமாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் ஆய்வில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள், புதைபடிமங்கள், விலங்கு மற்றும் மனிதர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.

Peru skeletons
Peru skeletons
Arqueologia del Peru

ஹுவான்சகோ கடற்கரையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆய்வு நடைபெற்றுள்ளது. அங்கு தோண்டத் தோண்ட தொடர்ந்து எலும்புக்கூடுகள் கிடைத்ததைக் கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரண்டு நாள்களாக நடந்த ஆய்வில் 227 எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.

எலும்புக்கூடுகளின் பின்னணி குறித்துப் பேசியுள்ள தலைமை தொல்லியல் ஆய்வாளர் ஃபெரன் காஸ்டிலோ (Feren Castillo), ``ஹுவான்சகோ கடற்கரைக்கு அருகில் கிடைத்த எலும்புக் கூடுகள் அனைத்தும் குழந்தைகளுடையது. அவர்களுக்கு 4 முதல் 14 வயது வரை மட்டுமே இருக்கும். இவர்கள் கி.பி 1,200-ம் ஆண்டு முதல் 1,400-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்களாக இருக்கக்கூடும்.

Peru skeletons
Peru skeletons
Arqueologia del Peru

அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த சிமு மக்கள் தங்கள் கலாசாரத்தின்படி குழந்தைகளைக் கடவுள்களுக்குப் பலி கொடுத்து வந்தனர். மழை, வெள்ளம், வறட்சி போன்ற பெரிய பேரிடர்கள் வரும்போது குழந்தைகளைப் பலி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். மிக மோசமான வானிலைகளை எதிர்கொள்ளவும் அதிகமான குழந்தைகளை நரபலி கொடுத்திருக்கலாம்.

Vikatan

எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கும் இந்த இடம் முன்னதாக நரபலி கொடுக்கும் இடமாக இருந்திருக்கலாம். இதற்கு அருகில் பலி பீடமும் இருந்திருக்கும். தோண்டத் தோண்ட குழந்தைகளின் எலும்புக் கூடுகள் வந்துகொண்டே உள்ளன. எனவே, நரபலி கொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு உயரும் என அஞ்சப்படுகிறது.

Peru skeletons
Peru skeletons
Arqueologia del Peru

உலகம் முழுவதிலும், பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்த மிகப்பெரிய இடம் இதுதான். இங்குள்ள பெரும்பாலான குழந்தைகளின் உடல்கள் கடலை பார்த்தபடி புதைக்கப்பட்டுள்ளன இதுவும் அவர்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம். புதைக்கப்பட்ட சில குழந்தைகளின் முடி, தோல் போன்றவையும் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார். ஹுவான்சகோவுக்கு அருகில் உள்ள பம்பா லா க்ரூஸ் என்ற இடத்தில் கடந்த வருடம் இதே போன்று 56 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credits : Arqueologia del Peru