Published:Updated:

மோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!

Vikatan Correspondent
 மோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!
மோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!
 மோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!

பீஜிங்: பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கூட கைப்பற்ற போரிட்டது இல்லை என்று நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

குஜராத் முதல்வரும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் பிரசாரம் செய்தபோது, "இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது. எல்லையை விரிவுபடுத்தும் மனப்போக்கை சீனா கைவிட வேண்டும்"  என்று சீனாவின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நிருபர்களிடம் கூறும்போது, ''சீனா, நாடு பிடிக்கும் கொள்கையை பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருக்கிறார் மோடி. பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றுவதற்கு கூட சீனா போர் தொடுத்தது இல்லை. இது அனைவருக்கும் தெரியும் என்று கருதுகிறேன்.

எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக ராணுவ மோதல்கள் நடந்தது இல்லை. எல்லையில் அமைதியை கட்டிக்காக்கும் திறன் எங்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி. வருங்காலத்தில், இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு இது நல்லது. இருநாட்டுக்கு மட்டுமின்றி, இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்துக்கும் நல்லது.

இந்தியாவுடன் எல்லை பிரச்னை இருப்பது உண்மைதான். அந்த பிரச்னையை மட்டுமின்றி, எல்லா பிரச்னைகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே சீனா விரும்புகிறது. இதற்காக இரு நாடுகளும் கடுமையாக பாடுபட்டு வருகின்றன. விரைவில் இப்பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று கருதுகிறோம்.

இந்தியாவுடன் நல்ல அண்டை நாட்டு உறவை கடைபிடிப்பதையே சீனா விரும்புகிறது. அமைதியான வளர்ச்சிப் பாதையில் செல்லவே உறுதி பூண்டுள்ளது" என்றார்.