Published:Updated:

ஆக்ஸ்போர்டு உரையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்க இருந்தாராம் ராஜபக்ஷே!

கொழும்பு, டிச.11,2010

தமிழ் மக்களின் பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தவிருந்த உரையில் உலக மக்களுக்கு தெளிவுபடுத்த திட்டமிட்டிருந்தாராம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே. ##~~##

மேலும், இந்தத் திட்டத்தை தடுப்பதற்காகவே சிலர் செயற்பட்டு தனது நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்தின் முடிவில் அதிபர் ராஜபக்ஷே கூறியது:

வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும், இதன் ஒரு வெளிப்பாடுதான். ஆனால் வடக்கு, கிழக்குக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்னைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தவிருந்த உரையில் உலக மக்களுக்கு தெளிவுபடுத்த திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், இந்தத் திட்டத்தை தடுப்பதற்காகவே சிலர் செயற்பட்டு எனது நோக்கத்தைத் திசை திருப்பி விட்டனர்.

ராணுவத்துக்குள் பிரச்னைகளை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். ராணுவத்துக்குள் சந்தேகத்தை உருவாக்கி, பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்யாதீர்கள் என்று அவர்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்," என்றார் ராஜபக்ஷே.