Published:Updated:

காமன்வெல்த் அமைப்புக்கு நிதி நிறுத்தம்: கனடாவை சாடும் இலங்கை

காமன்வெல்த் அமைப்புக்கு நிதி நிறுத்தம்: கனடாவை சாடும் இலங்கை
காமன்வெல்த் அமைப்புக்கு நிதி நிறுத்தம்: கனடாவை சாடும் இலங்கை
காமன்வெல்த் அமைப்புக்கு நிதி நிறுத்தம்: கனடாவை சாடும் இலங்கை

கொழும்பு: காமன்வெல்த் அமைப்புக்கு கனடா வழங்கி வந்த நிதியை அந்நாடு நிறுத்த எடுத்துள்ள தீர்மானம் ராஜதந்திர ரீதியில் மிகவும் அநீதியான செயல் என இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சாடியுள்ளார்.

அத்துடன் நடைமுறையில் இருந்து வரும் சம்பிரதாயங்களின் அடிப்படையில் கனடாவின் தீர்மானம் மிகவும் கீழ் மட்டமான செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

காமன்வெல்த் அமைப்புக்கு தற்போது தலைமை வகித்து வரும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அந்த அமைப்புக்கு வழங்கி வரும் 20 மில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக கனடா நேற்று அறிவித்தது.

2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்திய நாடு என்ற ரீதியில் மட்டுமல்லாது, அந்த அமைப்புக்கு இன்று தலைமை வகிக்கும் இலங்கை, மனித உரிமை, அரசியல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டிருப்பதாக கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் ரம்புக்வெல்ல, கனடாவின் நற்பெயர் சம்பந்தமாகவே கேள்வி எழுந்துள்ளது. அந்நாடு மறைத்து வைத்திருந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியை தற்போது வெளியிட்டுள்ளது.

கனடா அரசாங்கம் தனது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்காக வேறு விவரங்களை வெளிக்கொண்டு வருகிறது என்று கூறினார்.